பயோ கேஸால் இயங்கும் மின்வாகன சார்ஜிங் மையம்... இத்தனை யூனிட் மின்சாரத்தை இதால உருவாக்க முடியுமா?
பயோ கேஸ் வாயிலாக இயங்கும் மின் வாகன சார்ஜிங் மையம் (Biogas-Powered EV Charging Station) மும்பை நகரத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவே மும்பையில் பயன்பாட்டிற்கு வரக்கூடிய முதல் இயற்கை கழிவால் இயங்கக் கூடிய எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையம் ஆகும். இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

'அமைதிப்படை' படம் ஞாபகம் இருக்கிறதா?, இந்த படத்தை பார்க்காதவர்கள்கூட இருப்பார்கள், ஆனா, இந்த படத்தின் மையக் கருத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மிக முக்கியமாக 'அமாவாசை' கதாபாத்திரம் பலரின் மனம் கவர்ந்த ஒன்று. சத்யராஜ் இதில் வெற லெவலில் நடித்திருப்பார். இந்த கதைக்கும் நாம் பார்க்க இருக்கும் பயோகேஸ் சார்ஜிங் மையம் குறித்த நிகழ்விற்கும் என்ன சம்பந்தம் என கேட்கின்றீர்களா?, இருக்குங்க. இதுகுறித்த தகவலையும்தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

மின் வாகனங்கள் விற்பனைக்கு வந்த புதிதில், பலர், "இந்த வாகனங்களை எல்லாம் யார் வாங்குவாங்க" என கூறியிருப்பதை நிச்சயம் நம்மில் பலர் கேட்டிருப்பீர்கள். ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்களோ அமைதிப்படை படத்தில் வரும் சத்தியராஜை போல் அவை தற்போது பன்மடங்கு வளர்ச்சியடைந்துக் காணப்படுகின்றன. உலகம் முழுவதிலும் அவற்றிற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது.

அப்போ இந்த கதையில மணிவண்ணன் யாருங்க?, சந்தேகமே வேண்டாங்க, டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள்தான். இவற்றை காட்டிலும் பன் மடங்கு வேகத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இதனால்தான் பெட்ரோல்-டீசல் வாகனங்கள் மணிவண்ணனாகவும், மின் வாகனங்கள் அமாவாசையாகவும் பார்க்கப்படுகின்றன.

இவற்றின் வளர்ச்சி அபரிதமானதாக காட்சியளிக்கின்றது. இந்த வளர்ச்சியை மேலும் பெருக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகள் பல அதிரடி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், தற்போது பயோ-கேஸால் இயங்கக் கூடிய சார்ஜிங் மையம் (Biogas-Powered EV Charging Station) பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

மும்பையின் ஹஜி அலி பகுதியிலேயே அந்த மையம் அமைந்திருக்கின்றது. இதனை மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மின் வாகன பயன்பாட்டாளர்களுக்கு தொடங்கி வைத்தார். தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் வளர்ச்சிக்கு தடைக் கல்லாக இருப்பவற்றில் சார்ஜிங் மையங்கள் பற்றாக்குறையும் ஒன்று.

இந்த பற்றாக்குறையை போக்கும் பொருட்டு நாடு முழுவதும் மின் வாகன சார்ஜிங் மையங்களை நிறுவும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே பயோகேஸால் இயங்கக் கூடிய மின் வாகன சார்ஜிங் மையம் மும்பையில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

மும்பை நகராட்சி மற்றும் ஏரோகேர் க்ளீன் எனர்ஜி லிமிடெட்டின் கூட்டணியின் அடிப்படையில் இந்த சார்ஜிங் மையங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இயற்கை கழிவுகளையும் பயனுள்ளதாக மாற்றுவதே இந்த சார்ஜிங் மையத்தின் தனி சிறப்பாகும். அதாவது, இயற்கை கழிவுகளால் உருவாக்கப்படும் வாயுவே மின்சாரமாக மாற்றி அதை மின்வாகனங்களுக்கு சார்ஜேற்ற பயன்படுத்தப்படுகின்றது.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றைக் காட்டிலும் மிகக் குறைவாகவே பயோகேஸ் மாசை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சார்ஜிங் மையம் வீட்டுக் கழிவுகளில் இருந்து 220 யூனிட் வரை மின்னாற்றலை உருவாக்கும். இந்த சார்ஜிங் மையம் மின் வாகனங்களை சார்ஜ் செய்ய மட்டுமின்றி தெருவிளக்குகள் இயக்கத்திற்கும் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

மேலும், ஒரே நேரத்தில் இரண்டு மின்சார வாகனங்களை இந்த மையத்தில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். அதிக வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய வசதிக் கொண்ட பயோகேஸால் இயங்கும் சார்ஜிங் மையமே மும்பையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மும்பையில் இத்தகைய சார்ஜிங் மையம் பயன்பாட்டிற்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

சூரிய ஒளியால் மின்சாரத்தை வழங்கும் சார்ஜிங் மையமும் அந்நகரத்தில் பயன்பாட்டிற்கு இருக்கின்றது. மலாட் பகுதியில் விசாகா இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வாயிலாக இந்த மையம் பயன்பாட்டிற்குக் கொண்டு வர்ப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இவற்றிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.


Click it and Unblock the Notifications








