இந்தியாவில் முதல் மோனோ ரயில் சேவை மும்பையில் தொடங்குகிறது!
இந்தியாவின் முதல் மோனோ ரெயில் சேவையை மராட்டிய முதல்வர் பிருத்திவிராஜ் சவான் இன்று மும்பையில் துவங்கி வைக்கிறார். மும்பைவாசிகள் நாளை முதல் இந்த ரயிலில் பயணம் செய்யலாம்.
மும்பை மாநகரின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் விதமாக மோனோ ரயில் திட்டம் கையிலெடுக்கப்பட்டது. ரூ.3,000 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட இந்த திட்டம் இரு கட்டங்களாக செயல்படுத்தப்பட தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, முதல் கட்டமாக செம்பூர்- வதலா இடையிலான 8.9 கிமீ தூரத்துக்கு மோனோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் மோனோ ரயில் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இதையடுத்து, மோனோ ரயில் சேவை நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

குளிர்சாதன வசதி
மெட்ரோ ரயில் போன்றே மோனோ ரயில்களும் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டது. அதேவேளை, கட்டணம் மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் விபரம்
செம்பூர்- வதலா இடையிலான 7 ரயில் நிலையங்களில் மோனோ ரயில் நின்று செல்லும். தற்போது இந்த குளிர்சாதன வசதி கொண்ட ரயிலில் பயணிக்க ரூ.5 முதல் ரூ.11 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினசரி பயணிகளின் வசதிக்காக ஸ்மார்ட்கார்டு வழங்க திட்டமிட்டுள்ளதாக மோனோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேவை
முதல் கட்டமாக காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மோனோ ரயில்களை இயக்கப்படும். பின்னர் இந்த நேரம் அதிகாலை 5 மணி முதல் முதல் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நெருக்கடி
மொத்தம் 6 ரயில்கள் 15 நிமிடங்கள் இடைவெளியில் இயக்கப்பட உள்ளது. பின்னர் கூடுதலாக 10 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த மும்பை மோனோ ரயில் கழகம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், இந்த இரு இடங்களுக்கு இடையிலான போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பயண நேரம்
செம்பூர்- வதலா இடையிலான பயணம் நேரம் 40 நிமிடங்களிலிருந்து 21 நிமிடமாக, அதாவது பாதியாக குறையும். மோனோ ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 65 கிமீ வேகம் வரை இயக்க முடியும்.

இரண்டாம் கட்ட பணிகள்
மொத்தம் 20 கிமீ நீளத்துக்கான மோனோ ரயில் திட்டத்தில் தற்போது 8.9 கிமீ நீளத்துக்கு ரயில் சேவை வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள தூரத்துக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. அடுத்த ஆண்டு மார்ச்சில் பணிகள் நிறைவடைந்தவுடன் மோனோ ரயில் சேவை நீட்டிக்கப்பட உள்ளது.

பாதுகாப்பு வசதிகள்
ஏற்ற, இறக்கங்களிலும், வளைவுகளிலும் மோனோ ரயில் எளிதாக செல்லும் கட்டமைப்பை கொண்டது என்று மும்பை மோனோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ரயிலில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு
மோனோ ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








