நெடுஞ்சாலை கட்டமைப்பில் பிரதமர் மோடியின் அடுத்த சிக்ஸர்!! ரூ,49,250 கோடி மதிப்பிலான விரைவுச்சாலை தயார்...
நெடுஞ்சாலைகளே ஒரு நாட்டின் முன்னேற்றத்தை வெளிக்காட்டுபவைகளாக இருக்கும் என கூறுவர். ஏனெனில் ஓர் நாட்டின் பொருளாதார நிலையையும், அந்த நாட்டின் வணிக நிறுவனங்களையும் மேம்படுத்துவதில் நெடுஞ்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கக்கூடியவை. இதனை நன்கு அறிந்து கொண்ட நமது மத்திய அரசு நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்வதில் முனைப்புடன் உள்ளது.
குறிப்பாக, நாட்டின் முக்கிய மாநகரங்களிலும் அதனை அருகில் உள்ள நகரங்களுடன் இணைக்கும் விதமாகவும் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. அவற்றுள் மிக முக்கியமான நெடுஞ்சாலை மும்பை - நாக்பூர் இடையே அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், 'மிகவும் ஹை-டெக் விரைவுச்சாலை' என அழைக்கப்படும் இதன் திறப்பு நாளை வட இந்தியா முழுவதுமே எதிர்பார்த்துள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த எதிர்பார்ப்பு இனி இருக்காது.

ஏனெனில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மும்பை - நாக்பூர் இடையேயான சம்ருதி விரைவுச்சாலையின் ஒரு பகுதியை பிரதமர் மோடி நாளை (டிசம்பர் 11) நாக்பூரில் திறந்து வைக்கிறார். மொத்தமாக சுமார் 701கிமீ நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விரைவுச்சாலையில் ஒரு பகுதியினை, அதாவது நாக்பூர் - ஷீரடி இடையேயான 520கிமீ தூர நெடுஞ்சாலை பகுதியினை பிரதமர் திறந்து வைக்கிறார். இதற்கு ஆன மொத்த செலவு ரூ.49,250 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது
முழுவதுமாக நெடுஞ்சாலை திறக்கப்பட்டால், மும்பையில் இருந்து நாக்பூருக்கு சாலை வழியாக செல்லும் பயண நேரம் கிட்டத்தட்ட 3இல் இருந்து 1 பங்காக குறைந்துவிடும் என கூறப்படுகிறது. அதாவது மும்பையில் இருந்து நாக்பூரை சாலை வழியாகவே வெறும் 6இல் இருந்து 7 மணிநேரங்களில் அடைந்து விடலாமாம். அதுவே தற்சமயம் மும்பையில் இருந்து நாக்பூரை சாலை வழியாக சென்றடைய குறைந்தது 18 மணி நேரங்கள் ஆகிறது.
இந்த விரைவுச்சாலையில் அதிகப்பட்சமாக மணிக்கு 150கிமீ வரையில் செல்ல அனுமதி கொடுக்கப்பட உள்ளது. ஆனால் உண்மையில், மும்பை - நாக்பூர் இடையே நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பின், இந்த விரைவு நெடுஞ்சாலையை தலைநகர் டெல்லி வரையில் இணைக்க வேண்டும் என்பதே இந்த விரைவுச்சாலை திட்டத்தின் முழு நோக்கமாகும். இந்த நெடுஞ்சாலை ஆனது இடையில் மொத்தம் 10 மாநிலங்களை ஒருங்கிணைப்பதாக இருக்கும்.

நாளை நாக்பூர்- ஷீரடி இடையே திறக்கப்பட்ட பின், இந்த விரைவுச்சாலை முழுவதுமாக மும்பை- டெல்லி இடையே அடுத்த 2023ஆம் ஆண்டில் திறக்கப்பட உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 50கிமீ இடைவெளியில் இவி சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் சுரங்கம் உள்ள பகுதிகளில் பிரகாசமான விளக்குகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தெரு விளக்குகளும் இந்த நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விரைவுச்சாலையில் சுங்க சாவடிகள் மிக மிக குறைவாகவே அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் சுங்க கட்டணங்களை வாகனங்களை நிறுத்தாமல் நேரடியாகவே வாகன ஓட்டியின் வங்கி கணக்கில் இருந்து எடுத்து கொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்டோமேட்டிக் டோல் வசதியின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த விரைவுச்சாலையில் எங்கு நுழைந்தீர்களோ அங்கிருந்து எங்கு வெளியேறுனீர்களோ அதுவரையிலான கட்டணம் மட்டுமே பெறப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், ஆங்காங்கே சிசிடிவி கேமிராக்கள் மற்றும் ஒவ்வொரு 5கிமீ இடைவெளியிலும் ஒரு இலவச டெலிஃபோன் பூத்-களும் அமைக்கப்பட்டுள்ளன.
8 வழி சாலையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சம்ருதி நெடுஞ்சாலையில் விமானம் கூட தேவை ஏற்பட்டால் தாராளமாக தரையிறங்க முடியும். இதேபோன்று, ஜெட் தரையிறக்கத்திற்கு ஏற்ற சாலையினை ஆக்ரா- லக்னோ விரைவுச்சாலை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சாலைகள் அவசர கால சூழலின்போதும், போர் சூழல் ஏற்படும் சமயத்திலும் விமானங்கள் & ஜெட்களை தரையிறக்க பெரும் உதவிப்படும். சம்ருதி விரைவுச்சாலையில் மொத்தம் 9 மேம்பாலங்களும், 17 சுரங்கங்களும் உள்ளன.


Click it and Unblock the Notifications








