இன்றுடன் பிரியா விடை பெறுகிறது மும்பை சாலைகளின் மிகப் பெரிய அடையாளம்! அப்போ இனி அந்த கார்களை பார்க்க முடியாதா!
மும்பை நகர சாலையின் மிகப் பெரிய அடையாளமாக காளி-பீலி இருக்கின்றன. மஞ்சள் மற்றும் கருப்பு நிறம் கொண்ட பிரீமியர் பத்மினி டாக்சிகளையே இவ்வாறு மும்பை நகர வாசிகள் குறிப்பிடுகின்றனர். 6 தசாப்தங்களுக்கும் அதிகமாக இந்த காளி-பீலி டாக்சிகள் அந்த நகரத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.
இதனாலேயே அந்நகரத்தின் முக்கிய அடையாளமாக அவை பார்க்கப்படுகின்றன. இத்தகைய ஓர் அடையாளத்தையே மும்பை தற்போது இழந்திருக்கின்றது. நகரத்திற்கு மிகப் பெரிய தலை வலியாக காற்று மாசுபாடு உருவாகி இருக்கின்றது. இதனைக் குறைக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மும்பை மாநகராட்சி மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாகவே அண்மையில் நகரத்தின் புகழ்பெற்ற பேருந்துகளான டபுள் டெக்கர் பஸ்கள் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டன. இந்த பேருந்துகள் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அன்றே அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டன. அதற்கு முன்னர் வரை இந்த பேருந்துகள் மிகவும் கெத்தாக நகரத்தின் முக்கிய சாலைகளில் வலம் வந்த வண்ணம் இருந்தன.
அவை டீசலில் ஓடக் கூடிய பேருந்துகள் ஆகும். இந்த வாகனங்களைத் தொடர்ந்தே தற்போது மற்றுமொரு அடையாளமான கருப்பு மற்றும் மஞ்சள் நிற டாக்சிகளான பிரீமியர் பத்மினி கார்கள் பயன்பாட்டில் வெளியேற்றப்பட்டு இருக்கின்றன. கடைசியாக, மஞ்சள் கருப்பு நிற பிரீமியர் பத்மினி டாக்சி மும்பை நகரத்தில் அக்டோபர் 29, 2003 ஆம் ஆண்டிலேயே பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.

மும்பையின் டார்டியோ ஆர்டிஓ-விலேயே அந்த வாகனத்திற்கான பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த கார் தற்போது 20 ஆண்டுகளை எட்டிவிட்டது. மும்பை நகரத்தில் 20 ஆண்டுகள் பழைய வாகனம் இயங்க அனுமதி கிடையாது. குறிப்பாக டாக்சிகள் விஷயத்தில் இந்த விதி கடுமையாக பின்பற்றப்படுகின்றது.
ஆகையால், கடைசியாக பயன்பாட்டில் இருந்த பத்மினியும் இன்றுடன் வெளியேற்றப்பட்டு இருக்கின்றது. எனவே நாளைய (திங்கள்) தினம் முதல் மும்பையில் அதிகாரப்பூர்வமாக பிரீமியர் பத்மினி டாக்சி பயன்பாட்டில் இல்லாத சூழலேயே இப்போது உருவாகி இருக்கின்றது. சுமார் 60 ஆண்டு காலாக வரலாறாக இருந்து வந்த பிரீமியர் பத்மினி தற்போது பிரியா விடை பெற்றிருக்கின்றது.
பிரீமியர் பத்மினி, டாக்சியாக தன்னுடைய முதல் பயணத்தை 1964 ஆம் ஆண்டில் ஃபியட் 1100 எனும் மாடல் வாயிலாகவே தொடங்கியது. ஆமாங்க, இந்த பெயரிலேயே முன்னர் பிரீமியர் பத்மினி அழைக்கப்பட்டது. இதற்கு பின்னர் அந்த பெயர் பிரீமியர் பிரெசிடன்ட் என மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்தே பிரீமியர் பத்மினி என்கிற பெயர் சூட்டப்பட்டது.
இதற்கு பின்னர் 2001 ஆம் ஆண்டில் இதன் உற்பத்தி நிறுத்தப்படும் வரை இந்த பெயரிலேயே அக்கார் விற்கப்பட்டது. பிரீமியர் ஆட்டோமொபைல் லிமிட் எனும் நிறுவனமே இந்த காரின் உற்பத்தியை மேற்கொண்டு வந்தது. மஹாராஷ்டிராவில் முன்னதாக 25 ஆண்டுகள் என டாக்சிகளுக்கு ஆயுட்காலத்தை நிர்ணயித்து இருந்தது. இதை கடந்த 2013 ஆம் ஆண்டு 20 ஆண்டுகளாக குறைத்தது.
பழைய வாகனங்கள் அதிக மாசை உருவாக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிராக நாட்டில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் பழைய வாகனங்களுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டை குறைக்கும் பொருட்டே மின்வாகன பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகி்றது. இதுதவிர, சிஎன்ஜி, ஹைபிரிட் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் வகை வாகன பயன்பாட்டையும் இந்திய அரசு ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றது என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது. விரைவில், இந்த வாகனங்களைப் போலவே ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் வாகனங்களின் பயன்பாட்டை இந்தியா ஊக்குவிக்க இருக்கின்றது.


Click it and Unblock the Notifications