காவல் துறை அதிரடி உத்தரவு... ராயல் என்பீல்டு பைக் உரிமையாளர்கள் கலக்கம்... இனி ரோட்ல நிம்மதியா போலாம்!
காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையால் ராயல் என்பீல்டு பைக் உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பொது சாலைகளில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் (After Market Silencers) பொருத்தப்பட்ட பைக்குகளை பயன்படுத்துவது சட்ட விரோதமானது. பைக் உற்பத்தி நிறுவனம் வழங்கும் சைலென்சருடன் ஒப்பிடுகையில், ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் அதிக சத்தத்தை எழுப்பும். இது ஒலி மாசுபாடு (Noise Pollution) பிரச்னைக்கு காரணமாகிறது.

அரசு வகுத்துள்ள விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில், ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் இருக்காது. இதன் காரணமாகமாகதான் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் பொருத்தப்பட்ட பைக்குகளை பொது சாலைகளில் பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை மூலம் ஒலி மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஆனால் வெளி சந்தையில் கிடைக்கும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை தங்கள் பைக்குகளில் பொருத்தி கொள்வதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர் பொருத்தப்பட்ட பைக்குகள், அதிக சத்தத்தை எழுப்பி கொண்டு, சாலையில் பயணிப்பதை நீங்கள் பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த இரைச்சல் சாலையில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த இரைச்சல் தொந்தரவை ஏற்படுத்தும். திடீரென அதிக சத்தத்துடன் தங்களை கடந்து செல்லும் பைக்குகளால், பதற்றம் அடைபவர்கள் கூட இருக்கின்றனர். சாலையில் மற்றவர்களுக்கு பல்வேறு விதங்களில் பிரச்னைகள் ஏற்படுகிறது என்பதை, பைக்குகளில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பொருத்துபவர்கள் உணர்வதில்லை.

இந்தியாவை பொறுத்தவரை, பல்வேறு நிறுவனங்களின் பைக்குகளிலும், ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் பொருத்தப்படுகின்றன. ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளில்தான், ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை நம்மால் மிக அதிகளவில் காண முடிகிறது. எனவே கடந்த காலங்களில் ராயல் என்பீல்டு பைக்குகளை குறிவைத்து காவல் துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

ஆனால் பைக் உரிமையாளர்கள் பலர் தங்கள் பைக்குகளில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டேதான் உள்ளனர். இதை கட்டுப்படுத்துவதற்காக மும்பை மாநகர காவல் துறையினர் தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுக்க தொடங்கியுள்ளனர். மும்பை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் சமீபத்தில் 100க்கும் மேற்பட்ட சைலென்சர்களை பறிமுதல் செய்தனர்.

இவை அனைத்தும் சட்டத்திற்கும் புறம்பான ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் ஆகும். அவற்றை காவல் துறையினர் தற்போது ரோடு ரோலர் (Road Roller) மூலம் நசுக்கி அழித்துள்ளனர். மும்பையில் ஒலி மாசுபாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் பைக்கின் ஒரிஜினல் சைலென்சர் பொருத்தப்பட்ட பிறகு, அதாவது பைக்கை வாங்கும்போது பொருத்தப்பட்டிருந்த சைலென்சரை பொருத்திய பிறகு, பைக்குகளை காவல் துறையினர் அதன் உரிமையாளர்களிடமே ஒப்படைத்து விட்டனர். ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பறிமுதல் செய்து அழிக்கும்படி, காவல் துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதனை நிறைவேற்றும் வகையில் தற்போது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. எந்தெந்த பைக்குகளில் இருந்து ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன? என்ற விபரத்தை காவல் துறையினர் வெளியிடவில்லை. இருப்பினும் அவர்கள் வெளியிட்ட புகைப்படங்களை வைத்து பார்க்கையில், பெரும்பாலும் ராயல் என்பீல்டு பைக்குகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதை போல் தெரிகிறது.

ஆனால் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பறிமுதல் செய்து, அவற்றை ரோடு ரோலர் மூலம் அழிப்பது இது முதல் முறை கிடையாது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த காலங்களில் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை காவல் துறையினர் பலமுறை எடுத்துள்ளனர். ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை அவர்கள் பெரும்பாலும் பொது சாலையில் வைத்துதான் ரோடு ரோலர் மூலம் நசுக்கி அழிப்பார்கள்.

அப்போதுதான் அந்த செய்தி அதிகம் பேரை சென்றடைந்து, விழிப்புணர்வு ஏற்படும் என்பது காவல் துறையினரின் எண்ணம். ஆனால் இந்தியாவில் இன்னமும் சட்டத்திற்கு புறம்பான ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகளவில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. எனினும் காவல் துறையினரின் நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளதால், வரும் காலங்களில் மாற்றம் ஏற்படும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications








