யூ- ட்யூப் வீடியோவை பார்த்தே சொந்தமாக கார் தயாரித்த மும்பை மாணவர்!

Written By:

யூ- ட்யூப் வீடியோ பார்ப்பதை பொழுதுபோக்காக நினைக்காமல், அதனை பார்த்து கார் ஒன்றை தயாரித்து அசத்தியிருக்கிறார் மும்பையை சேர்ந்த மாணவர் ஒருவர்.

பொருளாதார நிலையில் பின்தங்கியிருந்தாலும் விடாமுயற்சியால் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியிருக்கிறார். இது குறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

நவி மும்பையை சேர்ந்த பிரேம் தாக்கூர் என்ற மாணவர்தான் சொந்தமாக காரை உருவாக்கியிருக்கிறார். 19வயது நிரம்பிய இவர் தற்போது வணிகவியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

ஆட்டோமொபைல் துறையில் எந்த ஞானமும், பொருளாதாரத்தில் பெரிய பின்புலம் இல்லாமல் சொந்தமாக அவர் கார் தயாரித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நவி மும்பை பகுதியின் கர்கர் என்ற இடத்தை சேர்ந்த ஆட்டோரிக்ஷா ஓட்டுனரின் மகனான பிரேம் தாக்கூர் தனது தந்தை, தாய் மற்றும் பாட்டி கொடுத்த ஊக்கம் மற்றும் பணத்தை வைத்து சொந்தமாக அந்த காரை உருவாக்கியிருக்கிறார்.

அவர் உருவாக்கியிருக்கும் கார் Buggy வகையை சேர்ந்தது. பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், அசத்தலான சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில்," பழைய ஹூண்டாய் ஆக்சென்ட் காரின் எஞ்சினை வாங்கி இந்த காரில் பொருத்தியிருக்கிறேன்.

பழைய கார்களின் உதிரிபாகங்களை வாங்கி வெல்டிங் செய்து இந்த காரை உருவாக்கினேன். இந்த காரை உருவாக்க ரூ.2.5 லட்சம் வரை செலவு செய்தேன்.

 

யூ- ட்யூபில் "Do It Yourself" வீடியோக்களை பார்த்து காரை தயாரிக்கும் முறைகளை கற்றுக் கொண்டேன். இந்த காருக்கான வெல்டிங், பெயிண்ட்டிங் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நானே செய்தேன். இந்த காரை உருவாக்க 4 மாதங்கள் ஆனது.

நான் 12 வயதாக இருக்கும்போது எனது தந்தை கம்ப்யூட்டரை வாங்கி கொடுத்தார். அதில் நன்கு பயிற்சி பெற்றதுடன், இணைய வசதியை பெற்ற பின்னர் எனது கனவு காரை தயாரிக்கும் எண்ணம் பிறந்தது.

அதன் பிறகு யூ- ட்யூப் வீடியோக்களை பார்த்த பின் எனது கார் ஆசையை நிறைவேற்றும் எண்ணம் எழுந்தது. இன்டர்நெட் இல்லை என்றால் எனது இந்த கனவு நிறைவேறியிருக்காது," என்று கூறியுள்ளார்.

பிரேம் உருவாக்கியிருக்கும் காரில் கண்ணை கவரும் வகையில் இன்டிகேட்டர் விளக்குகள், யுஎஸ்பி போர்ட் வசதியுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் போன்றவையும் உள்ளன.

ரேஸ் டிராக்கில் தனது காரை ஓட்ட வேண்டும் என்பது பிரேமின் கனவு. அடுத்து ஆட்டோமொபைல் துறை எஞ்சினியர் ஆக வேண்டும் என்பது எதிர்கால லட்சியமாக கூறியிருக்கிறார்.

சொற்ப வருமானத்தில் மகனின் கனவு நிறைவேறுவதற்காக பிரேமின் பெற்றோர் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டுள்ளனர். அதேபோன்று, பிரேமின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவும் இது அமைந்துள்ளது.

இந்த காரை எங்கு எடுத்துச் சென்றாலும் கூட்டம் கூடி விடுகிறதாம். மேலும், மொபைல்போனில் இந்த காரை வீடியோ எடுப்பதற்கும் எல்லோரும் ஆர்வம் காட்டுகின்றனராம்.

வாழ்த்துகள் பிரேம்!

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Mumbai Youth Builds His Own Car From Scratch Watching Youtube Videos. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos