மோகன்லால் படத்தில் பணியாற்றியதன் பலன்! குடும்பத்துடன் ஷோரூமுக்கு வந்தவர், பிராண்ட்-நியூ காரில் சென்றார்!
பி.எம்.டபிள்யூ 5-சீரிஸ் (BMW 5-Series), உலகளவில் பிரபலமான மற்றும் தாழ்வான பிஎம்டபிள்யூ செடான் (Sedan) ரக கார். இந்தியாவில் 2007ஆம் ஆண்டில் இருந்து விற்பனையில் இருக்கும் 5-சீரிஸ் காரின் லேட்டஸ்ட் ஜென்ரேஷன் கடந்த 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையே அதிக இடைவெளியை கொண்ட லாங்-வீல்பேஸ் (Long Wheelbase) காராக புதிய பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. நீளமான கார் என்பதினாலேயே இதன் விலையும் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது. சில வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள 5-சீரிஸ் ஷார்ட்-வீல்பேஸ் கார் இந்திய மார்க்கெட்டை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்படவில்லை.
ரூ.72.90 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பிஎம்டபிள்யூ காரை பிரபல தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஒருவர் வாங்கி உள்ளார். இதனை சம்பந்தப்பட்ட பிஎம்டபிள்யூ டீலர்ஷிப் ஷோரூமே தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வீடியோ உடன் தெரிவித்து உள்ளது. இந்த திரைப்பட இசையமைப்பாளரின் பெயர், தீபக் தேவ் (Deepak Dev).

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மற்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்றாலும், தீபக் தேவ் அதிகமாக மலையாள திரைப்படங்களுக்கே இசையமைத்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், தமிழில் 2 திரைப்படங்கள் மற்றும் தெலுங்கு ஒரு திரைப்படத்தை தவிர்த்து, தீபக் தேவ் இசையமைத்தது மொத்தமும் மலையாள திரைப்படங்கள் ஆகும். தமிழில் இவர் இசையமைத்த இரு திரைப்படங்கள் பலருக்கு தெரியாது.
தமிழில் கடைசியாக 2020ஆம் ஆண்டில் நடிகை சாய் தன்ஷிகாவின் நடிப்பில் உருவான 'யோகி டா' என்கிற திரைப்படத்திற்கு இசையமைத்து கொடுத்தார். அதன்பின், மலையாளத்தில் எட்டு திரைப்படங்களுக்கு தீபக் தேவ் இசையமைத்துவிட்டார். ஆனால், இன்னமும் யோகி டா திரைப்படம் திரைக்கு வரவில்லை. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் நடிகர் விஷால் (Vishal) கலந்துக் கொண்டு, நடிகை சாய் தன்ஷிகா உடனான தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இசையமைப்பாளர் தீபக் தேவ்வை பற்றி கூற வேண்டுமென்றால், மலையாள சினிமா உலகில் முன்னணி திரைப்பட இசையமைப்பாளராக உள்ளார். சமீபத்தில் நடிகர் மோகன்லாலின் நடிப்பில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனத்தை பெற்ற 'எல்2: எம்புரான்' (L2: Empuraan) திரைப்படத்தின் இசையமைப்பாளர் தீபக் தேவ் ஆவார். லூசிபர், பாஸ்கர் தி ராஸ்கல் உள்ளிட்ட பிரபலமான மலையாள திரைப்படங்களுக்கு தீபக் தேவ் தான் இசையமைப்பாளர் ஆவார்.
60க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள தீபக் தேவ், மலையாள டிவி பாட்டு போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி உள்ளார். இவ்வாறு எப்போதுமே பிசியாக இருக்கக்கூடிய இந்த இசையமைப்பாளர் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு, குடும்பத்துடன் பிஎம்டபிள்யூ ஷோரூமுக்கு சென்று பிராண்ட்-நியூ 5-சீரிஸ் காரை டெலிவிரி பெற்றுள்ளார். இந்த காரை எப்போது தீபக் தேவ் புக் செய்தார் என்கிற விபரம் இல்லை.
எல்2: எம்புரான் திரைப்படத்திற்கு புக் ஆகிய பின்னரே இந்த பிஎம்டபிள்யூ காரை இசையமைப்பாளர் தீபக் தேவ் புக் செய்திருப்பார் என நினைக்கிறோம். மனைவி மற்றும் மகள் உடன் பிஎம்டபிள்யூ ஷோரூமுக்கு வந்தவர், அங்கு சில ஆவணங்களில் கையெழுத்திட்டு காரை டெலிவிரி பெற்று கொண்டு சென்றுள்ளார். காரை டெலிவிரி பெறுவதற்கு முன் தீபக் தேவ் குடும்பமாக சேர்ந்து ஷோரூமில் கேக் வெட்டி கொண்டாடுவதை வீடியோவில் காண முடிகிறது.
இசையமைப்பாளர் தீபக் தேவ் புக் செய்திருப்பது, முற்றிலும் பளபளப்பான கருப்பு நிறத்திலான பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் கார் ஆகும். இதனை 'கார்பன் கருப்பு' என பிஎம்டபிள்யூ நிறுவனம் அழைக்கிறது. இந்தியாவில் இந்த பிஎம்டபிள்யூ கார் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. டீசல் என்ஜின் உடன் கிடைப்பதில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 2024 ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு பிறகு இதுவரையில் ரூ.1.50 லட்சம் வரையில் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.74.40 லட்சம் என்பது இந்த காரின் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் பல இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். இருப்பினும், எம்புரான் போன்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளருக்கு ரூ.90 லட்சத்தில் கார் வாங்குவது எல்லாம் பெரிய விஷயமாகவே இருக்காது.


Click it and Unblock the Notifications








