இதுவும் உத்தர பிரதேசத்துக்கு தானா... வந்தே பாரத் தெரியும், அது என்ன நமோ பாரத்?
எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்திலும் அந்த நாட்டின் பொது போக்குவரத்து துறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு எவ்வளவு வேகமாக செல்கிறோம் என்பதை பொறுத்தே அந்த நாட்டில் வணிகங்களின் வளர்ச்சி இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனை மனதில் வைத்தே வந்தே பாரத் இரயில் போன்ற அதிவிரைவான போக்குவரத்து முறைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இது இப்போது அல்ல... கடந்த சில வருடங்களாகவே மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டமாகும்.
வந்தே பாரத் (Vande Bharat) இரயில்களுக்கு அடுத்தப்படியாக நமோ பாரத் (Namo Bharat) இரயில்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்றன. அதாவது, வந்தே பாரத் இரயில்களின் டாப்-ஸ்பீடு 180kmph என்றால், நமோ பாரத் இரயில்களின் டாப்-ஸ்பீடு 160kmph ஆகும். இவை இரண்டிற்கு அடுத்து அம்ரித் பாரத் இரயில்களும் ஒவ்வொரு வழித்தடமாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்றன.

நமோ பாரத் இரயில்களை பொறுத்தவரையில், தலைநகர் டெல்லியையும், மீரட்டையும் இணைக்கும் விதத்தில் முதல் நமோ பாரத் இரயில் கடந்த 2023ஆம் ஆண்டின் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் பச்சை கொடியசைத்து துவங்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்திலும் நமோ பாரத் இரயில் சேவை கொண்டுவரப்பட உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ- கான்பூர்- மீரட்- சஹாரன்பூர் நகரங்களை இணைக்கும் விதத்தில் நமோ பாரத் இரயில் சேவை கொண்டுவரப்பட உள்ளது. இதனை மத்திய இரயிவே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw) தனது சமீபத்திய பேட்டியில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

நமோ பாரத் ஆனது இந்தியாவின் பிராந்திய அதி விரைவான போக்குவரத்து அமைப்பின் ஒரு பகுதி ஆகும். ஆரம்பத்தில் ராபிட் எக்ஸ் சர்வீஸ் (RapidX Service) என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சேவை பின்னர் நமோ பாரத் என்கிற பெயருக்கு மாற்றப்பட்டது.
நமோ பாரத் இரயில் ஆனவை மாடர்ன் வசதிகள் உடன் அதிவேகமாக போக்குவரத்தை வழங்கக்கூடிய இரயில்கள் ஆகும். 160kmph என்பது இவற்றின் அதிகப்பட்ச வேகம் என்றாலும், சில வழித்தடங்களில் அதற்கும் மேலான வேகத்தில் செல்லலாம். நமோ பாரத் இரயில்களை அல்ஸ்டம் டிரான்ஸ்போர்ட் இந்தியா லிமிடெட் என்கிற நிறுவனம் உருவாக்குகிறது.

ஒவ்வொரு நமோ பாரத் இரயில்களிலும் 407 இருக்கைகள் வழங்கப்படுகின்றன. இது இல்லாமல், அதிகப்பட்சமாக 1,061 பயணிகள் நின்றப்படி பயணம் செய்ய முடியும். தோற்றத்தை பொறுத்தவரையில், வளையாத இரும்பினால் உருவாக்கப்படும் இந்த வகை இரயிலில் தானியங்கி கதவுகள், பயோ-வாக்யூ கழிப்பறைகள் உள்பட பயணிக்களின் சவுகரியத்துக்காக பல்வேறு மாடர்ன் வசதிகள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உத்தர பிரதேசம் மாநிலத்தில் பல்வேறு இரயில் திட்டங்களுக்காக ரூ.19,858 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக 2025-26 பொது பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. அதில்தான் நமோ பாரத் சேவையும் வழங்கப்பட உள்ளது. இது உத்தர பிரதேசத்தின் மாநில பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









