ஒவ்வொருத்தரையா கொக்கி போட்டு தூக்குறாரு நம் பிரதமர்!! ஜப்பான்காரங்க இன்னும் தைரியமா முதலீடு செய்ய போறாங்க!
பிரதமர் நரேந்திர மோடி சுஸுகி மோட்டார் கார்ப் நிறுவனத்தின் இயக்குனர் டோஷிஹிரோ சுஸுகி உள்பட முக்கிய கார்பிரேட் நிர்வாகிகள் உடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இது தொடர்பான படங்கள் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.
நாட்டின் பொருளாதாரம் மேம்பட வேண்டுமெனில், அந்நிய நாட்டு முதலீடுகளை ஈர்ப்பது மிக முக்கியமான ஒன்று. இந்த விஷயத்தில் நமது மத்திய அரசு மிக தீவிரமாக உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வகையில், இன்று (ஜன.10) இந்திய பிரதமர் நரேந்திர மோடி சில வெளிநாட்டு நிறுவனங்களின் சிஇஓ-களை நேரில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் ஆட்டோமொபைல் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்களின் சிஇஓ-கள் கலந்துக் கொண்டனர். மைக்ரான் டெக்னாலஜி மற்றும் ஏபி மொல்லர் உள்ளிட்டவற்றை அவற்றுள் முக்கிய நிறுவனங்களாக சொல்லலாம். ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், சுஸுகி மோட்டார் கார்பின் தலைவர் டோஷிஹிரோ சுஸுகி நம் பாரத பிரதமரை நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது பல்வேறு விதமான விஷயங்களை இருவரும் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. சுஸுகி தலைவர் உடனான இந்த சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்தில், "இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம், உலக வாகன சந்தையில் இந்தியாவை வலுவான நாடாக மாற்றும் மாருதி சுஸுகியின் திட்டங்களை பற்றி பிரதமர் விவாதித்தார்.

அத்துடன், வாகன ஸ்கிராப்பிங் மற்றும் வாகன மறுசுழற்சி தொடர்பான உலகளாவிய சிறந்த நடைமுறைகளை இந்தியாவில் பயன்படுத்துதல் உள்ளிட்டவையும் விவாதிக்கப்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது. 2-வீலர்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் தனித்து செயல்படும் சுஸுகி நிறுவனம், கார்கள் உற்பத்தி & விற்பனையில் மட்டும் இந்தியாவின் மாருதி உடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்த இந்திய-ஜப்பானிய கூட்டணியானது இன்றோ அல்லது நேற்றோ உருவானது கிடையாது. 1980ஆம் காலக்கட்டத்தில் இருந்து சுமார் 40 வருடங்களாக உள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கிலான கார்களை அசால்ட்டாக விற்பனை செய்து வருகிறது. இதனாலேயே உற்பத்தி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மாருதி சுஸுகி உள்ளது.

இதன்படி, குஜராத்தில் மாருதி சுஸுகியின் 2வது கார் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டு வருகிறது. இது குஜராத்தில்தான் 2வது தொழிற்சாலை ஆகும், ஒட்டுமொத்த இந்தியாவில் மாருதி சுஸுகியின் 5வது உற்பத்தி தொழிற்சாலை இதுவாகும். பிரதமரை சந்தித்து இருப்பதன் மூலம், ஜப்பானை சேர்ந்த சுஸுகி குழுமம் இந்தியாவில் மேலும் முதலீடு செய்யவுள்ளதை அறிய முடிகிறது.
இதேபோன்று, மைக்ரான் டெக்னாலஜியின் தலைவரும், சிஇஓ-வுமான சஞ்சய் மெஹ்ரோத்ராவும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்க சிப் உற்பத்தி நிறுவனமான மைக்ரான் குஜராத்தின் சனந்த் பகுதியில் சுமார் 275 கோடி டாலர்கள் முதலீட்டில் குறைக்கடத்தி தொழிற்சாலையை நிறுவி வருகிறது. ஆட்டோமொபைல் வாகனங்கள் உள்பட குறைக்கடத்திகளின் தேவை நிறைய துறைகளில் உள்ளதால், மைக்ரானின் இந்திய நுழைவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு சுஸுகி, மைக்ரான் நிறுவனங்கள் தங்களது வணிகத்தை இந்தியாவில் விரிவுப்படுத்துவதால், உலக நாடுகள் மத்தியில் நம் இந்தியா தனிபெரும் வல்லரசு நாடாக உருவெடுக்கும். வல்லரசு நாடு என சொல்லிக் கொள்வது இப்போது கொஞ்சம் ஓவராக இருக்கலாம், ஆனால் இவ்வாறு வெளிநாட்டு முதலீடுகளை தொடர்ந்து ஈர்க்கும் பட்சத்தில் வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியா இணையும் காலம் வெகு தொலைவில் இல்லை.


Click it and Unblock the Notifications









