சந்திரயான் டெக்னலாஜியை வாங்க ஆசைப்படும் நாசா! எவ்வளவு கோடி கேட்டாலும் கொடுக்க ரெடியா இருப்பாங்க!
சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு இஸ்ரோ உலக நாடுகளின் பார்வையில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது நிலையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா இஸ்ரோவின் தொழில்நுட்பத்தை விளக்கி கேட்பதாக இஸ்ரோவின் சேர்மன் சோம்நாத் சமீபத்தில் பேசியுள்ளார் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெற்றிகரமாக சந்திரயான் 3 திட்டத்தை நிறைவேற்றியது. சுமார் 40 நாட்கள் விண்வெளியில் பயணித்த சந்திரயான் 3 விண்கலம் சரியாக திட்டமிட்டபடி நிலவின் தென் துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக இது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த வெற்றிக்கு பிறகு இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையை உலகில் உள்ள விண்வெளி ஆய்வு மையம் எல்லாம் உற்று நோக்கி வருகின்றன. உலகில் வேறு எந்த நாடுகளும் செய்ய முடியாத சாதனையை இந்தியா எப்படி செய்தது என பலர் யோசித்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரோவிற்கு உலக நாடுகளிலிருந்து பல்வேறு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 92வது பிறந்த தினம் வந்தது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் இஸ்ரோவின் சேர்மன் சோம்நாத் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் இந்தியாவின் விண்வெளி தொழிற்நுட்பம் மற்றும் சந்திரயான் 3 திட்டம் குறித்த விரிவான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அப்பொழுது அவர் பேசுகையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா இஸ்ரோவின் தொழில்நுட்பத்தை விலைக்கு கேட்டதாக புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இது உலக அளவில் இந்தியா விஞ்ஞானிகள் எவ்வளவு பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளனர் என்பதற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்திற்கு தொழில்நுட்பத்தை விற்பனை செய்யும் அளவிற்கு தங்களை வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பது தெரிகிறது.
இஸ்ரோ சேர்மன் சோம்நாத் பேசுகையில் : "இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்து முதல் ஆறு பேர் கொண்ட நாசாவின் ஜெட் ப்ரோபரேஷன் லேபரட்டரியில் இருந்து விஞ்ஞானிகள் வந்திருந்தார்கள். அவர்களுடன் சந்திரயான்-3யில் இந்தியா பயன்படுத்திய தொழில்நுட்பம் குறித்து கலந்து ஆலோசனை செய்தோம். இந்த ஆலோசனை நடக்கும் போது இந்தியா வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க கூட இல்லை.
அப்பொழுது எங்கள் சந்திரயான்-3 திட்டம் குறித்து அவர்களிடம் தெளிவாக விளக்கம் அளித்தோம். இதைக் கேட்டதும் அவர்கள்:" இதுகுறித்து கேள்வி கேட்க எதுவுமே இல்லை எல்லாம் தெளிவாக சிறப்பாக இருக்கிறது. உங்களது அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் அழகாகவும் குறைவான விலையிலும் இருக்கிறது. அதே நேரம் இது அட்வான்ஸ் தொழில்நுட்பமாகவும் இருக்கிறது. இதை எப்படி நீங்கள் கட்டமைத்தீர்கள்? இதை ஏன் நீங்கள் அமெரிக்காவிற்கு விற்கக் கூடாது? என்று கேட்டனர்" என பேசி இருந்தார்.
இந்தியாவின் தொழில்நுட்பத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகளே வியந்து பார்க்கும் வகையில் இருந்தது இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இந்த தொழில்நுட்பத்தை இந்தியா வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் திட்டத்தில் இல்லை என்பது நமக்கு தெரிய வருகிறது.
மேலும் இஸ்ரோவின் சேர்மன் இந்த விழாவில் பேசிய போது: " சந்திரயான்-10 விண்ணில் பறக்கும் போது இன்றைய சிறுவர்களில் யாராவது ஒருவர் தான் அந்த ராக்கெட்டை வடிவமைத்து இருப்பார்கள். அந்த ராக்கெட் உள்ளும் இன்றைய சிறுவர்கள் தான் இருக்கப் போகிறார்கள். பெரும்பாலும் இது ஒரு பெண் குழந்தையாக இருக்கும். இந்தியா முதல் முதலாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் போது ஒரு பெண்ணை தான் அனுப்ப வேண்டும் என முடிவு செய்யும்.
சந்திரயான் 3 வெற்றி பெற்று நான் பிரதமர் மோடிக்கு இந்தியா நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி விட்டது என்பதை அறிவித்தவுடன் பிரதமர் மோடி என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்பொழுது அவர் நிலவிற்கு எப்பொழுது ஒரு இந்தியன் செல்வார்? என கேட்டார் அது எல்லாம் தற்போது இன்றைய மாணவர்களின் கையில் தான் உள்ளது" என்று பேசினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா தொடர்ந்து விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய சாதனைகளை எல்லாம் படைத்து வருகிறது. உலக நாடுகள் கூட செய்ய தயங்கிய விஷயத்தை இந்தியா அசால்டாக செய்துள்ளது. சந்திரயான் 3 திட்டம் எப்படி வெற்றிகரமாக நிறைவேறியதோ அதேபோல அடுத்து சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பி இருக்கும் ஆதித்யா எல்1 திட்டமும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியா செய்துள்ள ககன்யான் திட்டமும் நிச்சயம் வெற்றி பெறும்.


Click it and Unblock the Notifications