கையில காசே இல்லனாலும் உங்க காருக்கு இனி பெட்ரோல் போட முடியும்... அதுக்கு நீங்க செய்ய வேண்டியது இதுமட்டும்தான்!
என்னதான் பலமுறை நின்னு யோசிச்சு பார்த்துவிட்டு எல்லா பொருளையும் எடுத்து வச்சுட்டதா நினைச்சு ஆஃபிஸுக்கு கிளம்பினாலும், போற வழியிலதான் முக்கியமான ஒன்ன விட்டுட்டு வந்துட்டோம்ன்றதே தெரியும். அந்தவகையில், நாம் அடிக்கடி வீட்டிலேயே மறந்துவிட்டு போகும் பொருட்களில் ஒன்றாக ஆஃபிஸ் ஐடி கார்டும், பர்ஸும்தான் இருக்கின்றன.
ஞாப மறதியில் வீட்டிலேயே மறந்துவிட்டு செல்லும் பொருட்களின் லிஸ்டில் இவையே முதல் இடத்திலும் இருக்கின்றன. இவற்றிற்கு அடுத்தபடியாகவே மற்றவை இருக்கின்றன. ஐடி கார்டை மறந்துவிட்டு செல்வதனால் ஆஃபிஸுக்குள் நுழைவது கொஞ்சம் சிரமமாகிவிடுகின்றது. அதேவேளையில், பர்சை மறந்துவிட்டு செல்கையில் ஆஃபிஸ்க்கு போவதே சிரமமாகிவிடும்.

ஏனெனில், அந்த நேரத்துலதான் நம்ம காருல பெட்ரோல் இருக்காது. முன்னாடி நாளே பெட்ரோல் இல்லைன்றது தெரிஞ்சிருக்கும். ஆனா நாளைக்கு ஆஃபிஸுக்கு போகும்போது போட்டுட்டு போயிக்கலாம்னு நாமதான் கூல விட்டு இருப்போம். இந்த நாளில்தான் நம்முடைய பர்சையே வீட்டுல வச்சிட்டு போயிருப்போம், கையிலையும் பத்து பைசா இருக்காது.
சரி ஃபோன்ல இருந்து பணத்தை போட்றலாம்னு பாத்தா ஃபோனுல நெட்வொர்க் சரியா வேலை செய்யாது. யுபிஐ ஐடியும் ஒர்க் ஆகாமல் காலை வாறிவிடும். இதுபோல சிக்கல் அப்போதான் நிறைய வரும். இந்த மாதிரியான சூழலைக் கையாளவே தற்போது ஓர் புதிய நடைமுறை பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் வாயிலாக கைகளில் பணமே இல்லை என்றாலும் காருக்கு தேவையான எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும். காரே பணத்தை செலுத்த அனுமதிக்கும் தொழில்நுட்பமே அது ஆகும். வளர்ந்து வரும் டிஜிட்டல் பண பரிவார்த்தனையின் அடுத்தக்கட்டமாக 'கார் வழியாக பணம் செலுத்தும் முறை' இருக்கின்றது.
அமேசான் மற்றும் மாஸ்டர்கார்டு ஆதரவுக் கொண்ட டோன்டேக்-கே இந்த புதிய சேவையை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த சேவையைப் பெறுவதற்கு உங்களிடம் ஸ்மார்ட்ஃபோன் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இருக்காது. அதற்கு பதிலாக உங்கள் காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருந்தாலே போதுமானது ஆகும்.
இதிலேயே யுபிஐ ஐடி புகுத்தப்பட்டு அதன் வாயிலாக பணத்தைச் செலுத்தும் வசதியை டோன்டேக் ஏற்படுத்திக் கொடுக்க இருக்கின்றது. சமீபத்தில் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான எம்ஜி, பாரத் பெட்ரோலியத்துடன் இணைந்து இதேபோல் ஓர் பண பரிவார்த்தனை திட்டத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது.
பேமெண்ட் செய்ய ஓர் செல்போன் அல்லது வேறு ஏதேனும் சாதனம் தேவை என்கிற நிலையை போக்கி, காரையே நேரடியாக பணம் செலுத்த அனுமதிக்கும் தொழில்நுட்பமே அது ஆகும். இது எப்படி வேலை செய்யும் என்கிற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். வழக்கமாக நம்முடைய செல்போன் வாயிலாக பணத்தைச் செலுத்துவதைப் போலவே இதுவும் செயல்படுகின்றது.
மேலும், இதுவும் முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் தொடர்பற்றது என கூறப்படுகின்றது. ஒவ்வொரு செயல்பாட்டையும் இன்ஃபோடெயின்மென்ட் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் ஸ்பீக்கர்கள் எச்சரிக்கையாக உங்களுக்கு அறிவிக்கும். ஆகையால், உங்களுக்கு தெரியாமல் ஒரு ரூபாய் என்ன ஒரு பைசாவைகூட உங்கள் கார் வாயிலாக எடுக்க முடியாது.
பெட்ரோலுக்கான பணத்தை உள்ளீடு செய்வது தொடங்குவது, அதை வழங்குவது வரை என அனைத்தையும் நீங்களே செய்ய வேண்டும். எனவே பணம் கூடுதலாக சுருட்டப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என தெரிகின்றது. பெட்ரோல் போட மட்டுமில்லைங்க உங்கள் காரின் ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்யவும் இதை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நேரடியாக ரீசார்ஜ் செய்வதற்கான வசதி இதில் வழங்கப்படும். குரல் ஒலியின் வாயிலாகவே பணத்தை பரிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகம் செய்ததன் வாயிலாக சமீபத்தில் டோன்டேக் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தது. இந்த நிலையிலேயே தற்போது கார்களையே பணம் பரிவார்த்தனை செய்யும் அனுமதிக்கும் தொழில்நுட்பத்தையும் அது அறிமுகம் செய்ய இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிஜிட்டல் பண பரிவார்த்தனை உலகம் வேற லெவலுக்கு போக போகின்றது என்பதை வெளிக்காட்டும் வகையிலேயே இந்த நிகழ்வு அமைந்திருக்கின்றது. இன்னும் இதுபோன்று பல வசதிகள் வாகன பயன்பாட்டாளர்களுக்காக வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் பண பரிவார்த்தனை திட்டம் கார் உரிமையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications








