எவ்வளவு பெரிய கப்பலாக இருந்தாலும் சரி, எங்கள் நகரத்திற்கு வர வேண்டாம்!! தடை விதிக்கும் நெதர்லாந்து நகரம்!
கடல் பயணத்தில் அதிக பயணிகளை அழைத்து செல்லும் க்ரூஸ் கப்பல்களுக்கு உலகின் மற்றொரு நகர அரசாங்கம் தடை விதிக்க தயாராகி வருகிறது. எந்த நாட்டின் நகரம் அது? என்பதையும், எதற்காக குறிப்பிட்டு க்ரூஸ் கப்பல்களுக்கு தடை விதிக்கப்படுகிறது? என்பதை பற்றியும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
நம் நாட்டில் உள்ள துறைமுறைகளில் சொகுசு கப்பல்களை பார்ப்பதே அரிதானது. மும்பை, சென்னை, விசாகப்பட்டினம் போன்ற முக்கியமான துறைமுகங்களில் வேண்டுமாயின் சொகுசு கப்பல்கள் சிலவற்றை பார்க்கலாம். அதிலிலும், 3,000 - 5,000 நபர்கள் பயணிக்கக்கூடிய க்ரூஸ் கப்பல்களை பார்ப்பது கடினம். இதனாலேயே, சொகுசு கப்பல்களில் பயணம் செய்ய வேண்டும் என நம் அனைவருக்கும் நிச்சயம் ஓர் ஆசை இருக்கும்.

குறைந்து, அத்தகைய பிரம்மாண்ட கப்பல்களை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என விரும்புவோரும் இருக்கின்றனர். ஆனால், சில நாடுகள் தங்களது துறைமுகத்திற்கு க்ரூஸ் கப்பல்கள் வருவதை விரும்புவதில்லை. அப்படியெல்லாம் கூட நாடுகள் உள்ளனவா என கேட்டால், இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். இத்தாலி நாட்டின் பிரபல சுற்றுலா நகரமான வெனீஸில் க்ரூஸ் கப்பல்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு விட்டது.
வெனீஸை தொடர்ந்து, நெதர்லாந்தில் ஒரு நகரத்தில் பெரிய பெரிய க்ரூஸ் கப்பல்கள் வருவதற்கு தடை விதிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நகரம் வேறொன்றும் கிடையாது, நெதர்லாந்தின் தலைநகரம் ஆம்ஸ்டெர்டம் ஆகும். க்ரூஸ் ரக கப்பல்கள் நகரத்திற்குள் வரலாமா என்ற கேள்விக்கு அம்ஸ்டெர்டம் நகரம் சார்பில் 'வரக் கூடாது' என ஓட்டளிக்கப் பட்டுள்ளதாக ஆம்ஸ்டெர்டம் மாநகர அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரத்தின் மையத்திற்கு அருகில் உள்ள ஒரு முனையத்தில் க்ரூஸ் கப்பல்களை நிறுத்தி, நகரத்தின் மையப்பகுதியில் பயணிகளை இறக்கிவிடுவதற்கு தடை விதிக்கும் நோக்கத்தில் இவ்வாறு தங்களது ஓட்டை அளித்துள்ளதாக ஆம்ஸ்டெர்டம் மாநகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். க்ரூஸ் கப்பல்களை சில மாநகர அரசாங்கங்கள் எதிர்ப்பதற்கு முக்கிய காரணம், அவற்றின் பெரும் இரைச்சல்கள் ஆகும்.
ஆனால், ஆம்ஸ்டெர்டமில் க்ரூஸ் கப்பல்களுக்கு தடை விதிப்பதற்கு காரணம், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை குறைப்பது ஆகும். ஏனெனில், உலகளவில் தற்சமயம் வேகமாக பொருளாதாரத்தில் வளர்ச்சிக் கண்டுவரும் நகரங்களுள் ஒன்றாகவும், பாரம்பரிய சுற்றுலா தளங்கள் மூலம் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரக்கூடிய நகரங்களுள் ஒன்றாகவும் விளங்கும் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டெர்டமில் ஒவ்வொரு வருடமும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, ஆம்ஸ்டெர்டமில் காற்று மாசு அடைவது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதை கண்டறிந்த நகர அதிகாரிகள், சுற்றுலா பயணிகள் வருடந்தோறும் லட்சக்கணக்கில் வருகை தருவது க்ரூஸ் கப்பல்களின் மூலமாக என்பதை அறிந்து இத்தகைய கப்பல்கள் நகரத்திற்குள் வருவதை தடை செய்ய விரும்புகின்றனர். நகரத்தின் பெரும்பான்மையான கவுன்சில்கள் இந்த தடைக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளதாக நெதர்லாந்தை சேர்ந்த அரசியல் கட்சியான டி66 தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, உலகளவில் தற்சமயம் 323 க்ரூஸ் கப்பல்கள் உள்ளன. இதில் ஒன்றை தவிர்த்து, மீதி 322 கப்பல்களும் பயன்பாட்டில் உள்ளன. உலகின் மிக பெரிய க்ரூஸ் கப்பலாக ஐகான் ஆஃப் தி சீஸ் விளங்குறது. மொத்தம் 365மீ நீளத்தில் 2,50,800 டன்கள் எடை கொண்டதாக விளங்கும் இந்த க்ரூஸ் கப்பலில் மொத்தம் 5,610 பயணிகளும், 2,350 கப்பல் குழு உறுப்பினர்களும் பயணம் செய்ய முடியும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: நேரில் பார்த்தவர்களுக்கு தெரியும் க்ரூஸ் கப்பல்கள் எவ்வளவு பிரம்மாண்டமானவை என்பது. ஆனால் அத்தகைய கப்பல்களுக்கு ஆம்ஸ்டெர்டம் நகர அரசு தடை விதித்து இருப்பது உடனடியாக எடுத்த முடிவாக இருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை. பலத்தரப்பட்ட ஆலோசனைகளுக்கு பிறகே இவ்வாறான முடிவை எடுத்திருக்கும். அதுமட்டுமின்றி, க்ரூஸ் கப்பல்களுக்கு தடை விதிக்க ஆம்ஸ்டெர்டமில் தற்போதைக்கு விருப்பங்கள் மட்டுமே தெரிவிக்கப்பட்டு உள்ளதே தவிர்த்து, தடை விதிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications









