கல்லடியை விட மோசமான அடியை வாங்கும் புதிய வந்தே பாரத் ரயில்.. நாளைக்குதான் பயன்பாட்டுக்கே வர போகுதா!
தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை- டூ -கோவை மற்றும் சென்னை- டூ -மைசூரு ஆகிய ரூட்களிலேயே அந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரு வந்த பாரத் ரயில்களுடன் விரைவில் இன்னும் சில புதிய வந்தே பாரத் ரயில்கள் இணைக்கப்பட உள்ளன.
அதில் ஒன்றே சென்னை-விஜயவாடா இடையில் இயங்க இருக்கும் புதிய வந்தே பாரத் ரயில் ஆகும். இது இணையும் பட்சத்தில் சென்னையில் இருந்து இயங்கும் மூன்றாவது வந்தே பாரத் ரயிலாக அது மாறும். இதனை நாளை (ஜுலை 7) இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்க இருக்கின்றார்.

இந்த நிலையில் இன்னும் பயன்பாட்டிற்கே வராத இந்த ரயிலை நெட்டிசன்கள் சிலர் சொல்லால் அடிக்க தொடங்கி இருக்கின்றனர். அதாவது, கிண்டலடிக்கத் தொடங்கி இருக்கின்றனர். ஏற்கனவே நாட்டின் சில பகுதிகளில் கற்கலால் இந்த ரயில் அடிப்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.
இந்த மாதிரியான சூழலில் வந்தே பாரத் ரயில் தற்போது சொல்லாலும் அடிவாங்க தொடங்கி இருக்கின்றது. உள்நாட்டிலேயே வைத்து தயாரிக்கப்படும் மிக முக்கியமான ரயிலாக வந்தே பாரத் ரயில்கள் உள்ளன. உலக நாடுகள் சிலவற்றில் உள்ள ரயிலையே மிஞ்சும் வகையில் இதில் சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய ரயிலையே நெட்டிசன்கள் தற்போது கலாய்க்கத் தொடங்கி இருக்கின்றனர். அதுவும் இன்னும் பயன்பாட்டிற்கே வராத நிலையில் அதை கலாய்க்கத் தொடங்கி இருக்கின்றனர். இதற்கான காரணம் அதன் வேகம் ஆகும். வந்தே பாரத் ரயில்கள் என்னமோ மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லக் கூடிய திறனைக் கொண்டிருக்கின்றன.
ஆனால், அவை தற்போது அதிகபட்சமாக 130 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றன. அதேவேளையில், அனைத்து ரூட்களிலும் இதே வேகத்திலேயே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என நினைத்துக் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு வழித் தடத்தைப் பொருத்து வந்தே பாரத் ரயில்களின் வேகம் மாறுபடும்.
இதற்கு மிக மோசமான இருப்புப் பாதையே காரணமாக இருக்கின்றது. அந்தவகையில், தமிழகத்தில் இருந்து இயக்கப்பட இருக்கும் சென்னை-விஜயவாடா வந்தே பாரத் ரயில் மணிக்கு 100 கிமீ வேகம் முதல் 110 கிமீ வேகம் வரை இயக்கப்படும் என கூறப்படுகின்றது. ஆகையால், இந்த வழித்தடத்தில் ஓர் இலக்கில் இருந்து மற்றொரு இலக்கை அடைய வந்தே பாரத் ரயில் சுமார் 6.30 மணி நேரங்களை எடுத்துக் கொள்ளும் என தெரிகின்றது.
இதுவே நெட்டிசன்கள் சென்னை-வந்தே பாரத் ரயிலை கலாய்க்க முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. ஏனெனில், ஏற்கனவே இந்த வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் சில ரயில்கள் வந்தே பாரத் ரயிலைவிட அதிக வேகத்தில் இயங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றன. அதாவது வந்தே பாரத் ரயிலைவிட விரைவாக (குறைவான நேரத்தில்) இந்த இலக்குகளை அடையக் கூடியவையாக இருக்கின்றன.
குறிப்பாக, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் 5.45 நிமிடங்களிலும், கிராண்ட் ட்ரன்க் விரைவில் ரயில் 6 மணி நேரத்திலும் விஜயவாடாவை அடைகின்றன. இவற்றைவிட அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளக் கூடியதாகவே விரைவில் வரவிருக்கும் வந்தே பாரத் ரயில் இருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே பலரிடம் இந்த ரயில் சொல்லால் அடிபட தொடங்கி இருக்கின்றது.
புதிய வந்தே பாரத் ரயில் விஜயவாடாவில் இருந்தே சென்னைக்கு இயங்க இருக்கின்றது. கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி மார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அது வந்தடையும். ரேணிகுண்டாவிற்கு இந்த ரயில் பயணிக்கும் என்பதால் சென்னையில் இருந்து திருப்பதி செல்வோர்கள் பலர் இந்த ரயிலை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ரயில் தவிர சென்னை- டூ- திருப்பதி நேரடியாக ஓர் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதுதவிர, சென்னை-நெல்லை இடையிலும் ஓர் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாகவே சென்னை-திருப்பதி வந்தே பாரத் ரயில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
தற்போது சென்னை-திருப்பதி இடையே ரயில் பயண நேரம் 3 மணி நேரங்களுக்கும் அதிகமாக இருக்கின்றது. இதை விட ஒன்றரை மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் வந்தே பாரத் ரயில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால் இந்த ரயில் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு சென்னை வாசிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயில்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கும் வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்களைக் காட்டிலும் அதிக சொகுசானவை ஆகும். ஏசி, சொகுசான இருக்கை, ஸ்பீடாக செல்போன்களை சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதி என மிகவும் லக்சூரி டிராவல் அனுபவத்தை வழங்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இது நமது சென்னையில் ஐசிஎஃப்-லேயே உருவாக்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








