மதுரை வழியா சுத்திட்டு போகணும்னு இனி அவசியம் இல்ல! ஏர்போர்ட் அமைப்பது அவ்வளவு ஈஸியான வேலையா?
2025-26ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் (Tamilnadu Budget) சட்டசபையில் இன்று (மார்ச் 14) மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த 1 வருடத்தில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட போகும் திட்டங்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் மற்றும் போக்குவரத்துத் துறை தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் தற்போது ஓர் அசத்தலான திட்டத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
நடப்பு நிதியாண்டில் கிடைக்கப் பெற்ற வருவாயை கொண்டு, அடுத்த நிதியாண்டிற்கான திட்டங்களை வகுப்பது என்பது ஒவ்வொரு மாநில அரசாங்கமும் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் துவங்குவதற்கு முன்பாக மேற்கொள்ளக்கூடிய விஷயமாகும். அறிவிக்கப்படும் திட்டங்களையும், அவற்றிற்கான செலவுகளையும் வைத்து அந்த மாநில அரசாங்கத்திற்கு கிடைக்கக்கூடிய வருவாய் எவ்வளவு, அந்த மாநிலத்தின் நிதி சுமை எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிய முடியும்.

இந்த வகையில் பார்த்தால், நம் தமிழ்நாடு அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருவது அதன் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பார்க்கும்போது தெரிய வருகிறது. தமிழ்நாட்டு போக்குவரத்து துறைக்கு மட்டும் சுமார் ரூ.12 ஆயிரத்து 984 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் போக்குவரத்தை மேம்படுத்துவதுடன், சுற்றுலா துறையையும் மேம்படுத்தும் விதமாக ஒரு முக்கியமான அறிவிப்பு தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.
அதுதான், ராமேஸ்வரத்தில் முதல் விமான நிலையம் அமைப்பது ஆகும். தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தீவு பகுதியான ராமேஷ்வரம், இந்திய அளவில் பல சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய முக்கியமான சுற்றுலா தலங்களுள் ஒன்றாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கிலான வட இந்தியர்கள் தென்னிந்தியாவில் பார்க்க வரும் மிகவும் சில சுற்றுலா தலங்களுள் இராமேஸ்வரம் ஒன்று ஆகும்.

முக்கியமாக, கடவுள் இராமர் கடந்து சென்ற பாதையாக இராமேஸ்வரம் கருதப்படுவதால், நாடு முழுவதிலும் இருந்து இந்து சமய பக்தர்கள் கூட்டம் கூட்டமாக இராமேஸ்வரத்தை தேடி வருகின்றனர். அவர்களுக்காகவே இராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலமாக, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்பது தமிழ்நாடு அரசின் நோக்கமாக உள்ளது.
அதற்கேற்ப, ராமேஸ்வரத்தில் தனுஷ்கோடி, ராமநாதசுவாமி கோவில், பாம்பன் பாலம் என ஏகப்பட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. மேலும், தமிழ்நாடு அரசு புதியதாக தனுஷ்கோடியில் பூநாரைகள் சரணாலயத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக 2025-26 பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது. இந்த சரணாலயம் அமைக்கப்பட்டால், ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், விமான நிலையம் அவசியமாகிறது.

ஆனால், விமான நிலையம் அமைப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதாவது, எந்தவொரு இடத்திலும் விமான நிலையத்தை அமைத்துவிட முடியாது. சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைப்பதற்கு எந்த அளவிற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன என்பதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். இருப்பினும், பரந்தூரில் தான் விமான நிலையம் அமைக்கப்படும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருப்பதற்கு காரணம், பரந்தூரின் புவியியல் அமைப்பு விமான நிலையம் அமைப்பதற்கு ஏற்றதாக இருப்பதினால் ஆகும்.
ஓர் இடத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு டெக்னிக்கலாக பல தகுதிகள் தேவைப்படுகின்றன. அவற்றுள் முக்கியமானது, விமான நிலையம் அமைய உள்ள பகுதி பள்ளம், மேடுகள் இல்லாமல் பெரிய அளவிற்கு சமதளமாக இருக்க வேண்டும், அருகில் மலைகள், பெரிய கட்டிடங்கள் இருக்கக் கூடாது என்பன போன்றதாகும். ரன்வே அமைப்பதற்கு மண்ணின் அடர்த்தி, தரம் உள்ளிட்டவையும் குறைந்தப்பட்ச தகுதியை கொண்டிருப்பது அவசியமாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தனை தகுதிகள் விமான நிலையம் அமையவுள்ள பகுதிக்கு இருந்தாலும், அந்த பகுதி மக்கள் விமான நிலையம் அமைக்க அனுமதிக்க வேண்டியது எல்லாவற்றையும் விட முக்கியமாகும். ஆனால், இந்த பிரச்சனை எல்லாம் இராமேஸ்வரத்தில் இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், இந்த தீவு பகுதியில் பெரும்பான்மையான இடங்கள் காலி இடங்களாகவே உள்ளன.


Click it and Unblock the Notifications









