இந்த ஆண்டில் ரிலீசாகும் உலகின் பிரம்மாண்ட உல்லாச கப்பல்கள்!
உலகின் சொர்க்கபுரிகளில் ஒன்றாக விளங்கும் உல்லாசக் கப்பல்கள், ஒரு சிறு நகரத்தையே தன்னகத்தே கொண்டு வாழ்வின் உன்னதத்தை உணரும் வாய்ப்பை பயணிகளுக்கு வழங்குகின்றன. இதனால், உல்லாசக் கப்பல் பயணம் என்பது ஒவ்வொரு குடும்பத்தினரின் வாழ்வின் லட்சியமாக மாறியுள்ளது.
இந்தநிலையில், அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டில் உலகின் பல பிரம்மாண்ட உல்லாசக் கப்பல்கள், தங்களது முதல் பயணத்தை துவங்க உள்ளன. இதில், ஹார்மோனி ஆஃப் தி சீஸ் என்ற உலகிலேயே மிகப்பெரிய உல்லாசக் கப்பலும் ஒன்று. இந்த ஆண்டு பயணத்தை துவங்க இருக்கும் புதிய உல்லாசக் கப்பல்களின் விபரம், அவற்றின் வியக்க வைக்கும் வசதிகள் குறித்த தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. வைக்கிங் சீ
சுவிட்சர்லாந்தை சேர்ந்த வைக்கிங் க்ரூஸஸ் நிறுவனம், கடந்த ஆண்டு அறிமுகம் செய்த வைக்கிங் ஸ்டார் என்ற உல்லாசக் கப்பல் பயணிகள் மத்தியில் நன்மதிப்பையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் வைக்கிங் க்ரூஸஸ் நிறுவனம் இந்த ஆண்டு வைக்கிங் சீ என்ற இரண்டாவது உல்லாசக் கப்பலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

சிறப்பம்சங்கள்
இந்த உல்லாசக் கப்பலில் 930 விருந்தினர்கள் பயணிக்கலாம். ஏப்ரல் 12ந் தேதி வெனிஸிலிருந்து பார்சிலோனாவுக்கு முதல் பயணத்தை துவங்க இருக்கிறது. நீர் விளையாட்டு, பல்வேறு நாட்டு பாரம்பரிய உணவு வகைகள் சொகுசான அறைகள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளுடன் பயணிகளுக்கு ஓர் புதிய பயண அனுபவத்தை வழங்க காத்திருக்கிறது. 10 அடுக்குகளை கொண்ட இந்த கப்பலில் 3,4,5,6,7 ஆகிய தளங்களில் பயணிகள் அறைகள் உள்ளன. ஒரு நபருக்கான குறைந்தபட்ச பயணக் கட்டணம் 3,299 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

02. கோனிங்ஸ்டம்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகின் மிகவும் பழமையான உல்லாசக் கப்பல் சேவை நிறுவனங்களில் ஒன்று ஹாலன்டு அமெரிக்கா. இந்த நிறுவனத்தின் புதிய உல்லாசக் கப்பல்தான் கோனிங்ஸ்டம். இந்த உல்லாசக் கப்பலில் 2,650 பயணிகள் பயணிக்க முடியும். இதுதான், அந்த நிறுவனம் இயக்கும் கப்பல்களிலேயே மிகப்பெரியதும் கூட. இதுவும் ஏப்ரல் மாதத்தில்தான் முதல் பயணத்தை துவங்க இருக்கிறது.

சிறப்பம்சங்கள்
இந்த கப்பலில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பப் பெற்றதாக இருக்கும். குறிப்பாக, சமையல் கலை பற்றிய பயிற்சிக்காக பிரத்யேக கூடம் அமைக்கப்பட்டிருப்பது பயணிகளை வெகுவாக கவரும் என்று தெரிவிக்கப்படுகிறது. வரும் மே மாதம் 22ந் தேதி ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து புறப்பட்டு திரும்ப ஆம்ஸ்டர்டாம் வந்து சேரும். 7 நாட்கள் பயணிப்பதற்கு குறைந்தபட்சமாக 798 டாலர் பயணக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

03. ஓவேசன் ஆஃப் தி சீஸ்
உலகின் மிகப்பெரிய உல்லாசக் கப்பல்களை இயக்கும் ராயல் கரீபியன் நிறுவனத்தின் புதிய அறிமுகமாக பயணத்தை துவங்க இருக்கிறது. 4,000 விருந்தினர்கள் பயணிக்கும் வசதி கொண்ட இந்த கப்பலில் பல பொழுதுபோக்கு அம்சங்கள் பயணக் களைப்பை அகற்றி களிப்புற செய்யும் என்பதில் ஐயமில்லை.

சிறப்பம்சங்கள்
கடலுக்கு மேலே 300 அடி உயரத்திற்கு பயணிகளை தூக்கிச் செல்லும் ஸ்டார் பாட் எனப்படும் மின் தூக்கி, பம்பர் கார் விளையாட்டு, ஸ்கைடைவிங் சிமுலேட்டர் ஆகியவை முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் சவுதம்டன் துறைமுகத்திலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு முதல் பயணத்தை துவங்க இருக்கிறது. குறைந்தபட்ச கட்டணம் 998 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

04. கார்னிவல் விஸ்டா
கார்னிவல் க்ரூஸ் லைன் நிறுவனம் இந்த ஆண்டு புதிய உல்லாசக் கப்பலுடன் ஐரோப்பாவில் மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் சேவையை துவங்க இருக்கிறது. நவீன வசதிகளுடன் கூடீய சொகுசு அறைகள் கொண்ட இந்த உல்லாசக் கப்பலில் 3,936 விருந்தினர்கள் செல்ல முடியும்.

சிறப்பம்சங்கள்
இந்த உல்லாசக் கப்பிலில் 150 அடி உயரத்திலிருந்து சரியும் 800 அடி நீள டிராக்கில் சைக்கிளை ஓட்டும் த்ரில்லான விளையாட்டு, முதல் ஐ-மேக்ஸ் சினிமா தியேட்டர் போன்றவை இதன் சிறப்பம்சங்கள். டிரையஸ்டி துறைமுகத்திலிருந்து பார்சிலோனாவுக்கு இந்த உல்லாசக் கப்பல் முதல் பயணத்தை துவங்க இருக்கிறது. மே முதல் அக்டோபர் வரையில் இந்த பயணம் பல கட்டங்களாக நீளும். இந்த கப்பலில் பயணிக்க தலைக்கு 851 டாலர்கள் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

05. செவன் சீஸ் எக்ஸ்ப்ளோரர்
ரிஜென்ட் செவன் சீஸ் க்ரூஸஸ் நிறுவனத்தின் புதிய உல்லாசக் கப்பல். உலகிலேயே மிகப்பெரிய சூட் அறையை கொண்ட சொகுசு கப்பலாக வர்ணிக்கப்படுகிறது. அதாவது, ஒரு அறை 4,000 சதுர அடி பரப்பளவு கொண்டதாக இருக்கும். இந்த கப்பலில் 750 விருந்தினர்கள் பயணிக்கலாம். உயர்வகை சொகுசு கப்பலாக இது வருகிறது.

சிறப்பம்சங்கள்
இந்த கப்பலில் இரண்டு டென்னிஸ் விளையாட்டு மைதானங்கள், ஒவ்வொரு துறைமுகத்திலும் பயணிகள் சுற்றிப் பார்ப்பதற்காக தனி கார் மற்றும் ஓட்டுனர்கள், நீராவி குளியல் அறை உள்ளன. ஏராளமான பொழுதுபோக்கு வசதிகளும் உண்டு. ஒருவருக்கு 5,499 டாலர்கள் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 3ந் தேதி ரோமிலிருந்து 10 நாட்களுக்கு முதல் பயணத்தை துவங்க இருக்கிறது.

06. சீபோர்ன் என்கோர்
சீபோர்ன் நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு பிறகு அறிமுகம் செய்ய இருக்கும் புதிய உல்லாசக் கப்பல். 600 விருந்தினர்கள் செல்லும் வசதி கொண்ட இந்த கப்பலை, பிரபல வடிவமைப்பாளர் ஆடம் திஹானி தலைமையிலான குழுவினர் ஆடம்பர படகு போன்று வடிவமைத்துள்ளனர்.

சிறப்பம்சங்கள்
வரும் டிசம்பர் மாதம் இந்த கப்பல் பைரேஸ் துறைமுகத்திலிருந்து சிங்கப்பூருக்கு முதல் பயணத்தை துவங்க இருக்கிறது. தலைக்கு 5,299 பயணக் கட்டணம். டிசம்பர் 4ந் தேதி புறப்பட்டு 16 நாட்களில் சிங்கப்பூரை அடையும்.

07. ஹார்மோனி ஆஃப் தி சீஸ்
உலகின் மிகப்பெரிய உல்லாசக் கப்பல் சேவை நிறுவனமான ராயல் கரிபீயன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூன்றாவது பெரிய கப்பல். இந்த கப்பல் அறிமுகம் செய்யப்படும்போது உலகின் மிகப்பெரிய உல்லாசக் கப்பல் என்ற பெருமையை பெறும்.

சிறப்பம்ங்கள்
மூன்று நீர் விளையாட்டு அரங்கங்கள், பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளுடன் வரும் மே மாதம் முதல் பயணத்தை துவங்க இருக்கிறது. ஒரு தலைக்கு 878 டாலர்கள் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சவுதம்டனிலிருந்து செர்போர்க நகருக்கு முதல் பயணத்தை மேற்கொள்ள உள்ளது.

உலகின் மிகப்பெரிய கப்பல்
உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாக வாகை சூட வரும் ஹார்மோனி ஆஃப் தி சீஸ் !


Click it and Unblock the Notifications








