இந்து முறைப்படி வெளிநாட்டில் நடந்த திருமணம்! மணப்பெண் ஓட்டிய காரை பற்றி தான் எல்லாருமே பேச்சு!!
நம் இந்தியர்களையும், அவர்களது சொகுசு கார்கள் மீதான ஆர்வத்தையும் பிரிக்கவே முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். எங்கு சென்றாலும், நேரில் சொகுசு கார்களை பார்த்தாலே ஒரு நிமிடத்திற்கு ஆச்சிரியத்துடன் நின்று பார்த்துவிட்டு செல்லும் பழக்கம் நம்மில் நிறைய பேரிடத்தில் உள்ளது. இதனாலேயே, நம் வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளில் சொகுசு கார்களையும் ஓர் அங்கமாக இடம்பெற வைக்க முயற்சிக்கிறோம். அந்த வகையில், இங்கு ஒரு திருமண தம்பதியினர் விலையுயர்ந்த மற்றும் காஸ்ட்லீயான தோற்றம் கொண்ட மெக்லாரன் (McLaren) காரில் திருமணம் முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.
நம்மில் பெரும்பாலானோர் திருமணம் முடித்த பின் விலையுயர்ந்த சொகுசு காரில் வீட்டிற்கு செல்லவே விரும்புவோம். அதற்காக நாம் பெரும்பாலும் பயன்படுத்துவது, டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), இன்னோவா கிரிஸ்ட்டா (Innova Crysta) போன்ற கார்களை ஆகும். சிலர், பென்ஸ், பி.எம்.டபிள்யூ காரை வாடகைக்கு எடுத்து இந்த குறிப்பிட்ட நிகழ்விற்கு மட்டும் பயன்படுத்துவர்.

இருப்பினும், மெக்லாரன் போன்ற பல கோடி ரூபாய் விலையிலான ஸ்போர்ட்ஸ் காரை வாடகைக்கு எடுத்து திருமணத்திற்கு பயன்படுத்துவதற்கு கூட நம்மில் நிறைய யோசிப்போம். ஏனெனில், வாடகைக்கு எடுப்பதாக இருந்தால் கூட மெக்லாரன் காருக்கான கட்டணம் பல இலட்சங்களில் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால்தான், அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்கள் வீட்டு திருமணங்களில் மட்டுமே மெக்லாரன் கார்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், நம் இந்த தொகுப்பில் பார்க்க போகும் திருமண தம்பதியினர் அவ்வாறான மல்டி-மில்லியனர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் போல் தெரியவில்லை. அப்படியிருந்தும், எவ்வாறு இவர்களால் மெக்லாரன் நிறுவனத்தின் 765எல்டி ஸ்பைடர் (765LT Spider) காரை பயன்படுத்த முடிந்துள்ளது என்றால், இந்த திருமண தம்பதியினர் இந்தியர்களாக இருப்பினும் இவர்களது திருமணம் நடைபெற்றது வெளிநாட்டில் ஆகும்.

இதனால்தான், இந்த குறிப்பிட்ட மெக்லாரன் 765எல்டி ஸ்பைடர் காரினுள் ஸ்டேரிங் சக்கரம் இடதுப்பக்கத்தில் இருப்பதை காணலாம். இருப்பினும், இது எந்த நாடு என்பதை அறிய முடியவில்லை. அநேகமாக ஐரோப்பிய நாடுகளுள் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். ஏனெனில், ஐரோப்பிய நாடுகளில் தான் மெக்லாரன் கார்கள் பரவலாக அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த இந்திய தம்பதியின் திருமணம் வெளிநாட்டில் நடத்தப்பட்டு இருப்பினும், இவர்களது திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றுள்ளதை பார்க்க முடிகிறது. திருமணம் முடிந்த பின், கண்ணை கவரக்கூடிய இளம் நீல நிறத்திலான மெக்லாரன் காரில் இந்த திருமண தம்பதியினர் திருமணமான இடத்தில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். இதில் மற்றொரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், மாப்பிள்ளையை அருகில் அமர வைத்துக் கொண்டு மணப்பெண் காரை ஓட்டியுள்ளார்.
மெக்லாரன் 765எல்டி ஸ்பைடர் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மெக்லாரன் 765எல்டி காரில் இருந்து குறுகிய காலத்திற்கு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட லிமிடெட் எடிசன் ஹார்டாப் கன்வெர்டபிள் கார் ஆகும். ஹார்டாப் கன்வெர்டபிள் என்பதன் அர்த்தம் என்னவென்றால், இந்த லிமிடெட் எடிசன் காரின் மேற்கூரை ஆனது உலோகத்திலான தடிமனான மேற்கூரை ஆகும். இருப்பினும் அதனை தேவைக்கேற்ப திறந்து மூடிக் கொள்ளலாம்.
உலகம் முழுக்கவே வெறும் 765 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட இந்த மெக்லாரன் லிமிடெட் எடிசன் கார் ஒன்றே ஒன்று இந்தியாவிலும் கஸ்டமர் ஒருவரிடம் உள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் நசீர் கான் என்பவர் இந்த சூப்பர் காரை வைத்துள்ளார். இந்த காரில் 4 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு சதுர கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: திருமணம் முடித்த பின் மெக்லாரன் காரில் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது நம்மில் நிறைய பேரது ஆசையாக இருக்கும். அதுவும், மெக்லாரன் 765எல்டி ஸ்பைடர் போன்ற உலகின் அரிதான காரில் செல்வதாக இருந்தால் யாருக்குதான் பிடிக்காமல் போகும். அந்த வகையில், வெளிநாட்டில் திருமணம் முடித்துக் கொண்ட இந்த இந்திய தம்பதியினர் செம்ம ஹாப்பி.


Click it and Unblock the Notifications








