பாம்பன் தூக்கு பாலம் திறப்பதை நிறுத்தப்போறாங்க! ஏன் தெரியுமா?
ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாலத்தில் புதிய தூக்கு பாலம் (Pamban Bridge) அமைக்க உள்ளதால் அப்பகுதியில் வரும் 10ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை படகுகள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தூக்கு பாலம் ஆசியாவிலேயே முதல் தூக்குபாலமாக (Asia's First Lift Bridge) கட்டமைக்கப்பட உள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் மிகவும் பிரசித்தி பெற்றது. உலக அளவில் உள்ள பிரம்மாண்டமான பாலங்களில் இந்த பாம்பன் பாலமும் ஒன்று. கடலுக்கு நடுவே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து செல்ல இந்த பாம்பன் பாலம் மட்டுமே ஒரே வழி. தற்போது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே பாம்பன் பாலம் செயல்பாட்டில் இருக்கிறது.

இந்த பாம்பன் பாலத்தில் சிறப்பே என்னவென்றால் இந்த பாலத்திற்கு நடுவே அவ்வப்போது படகுகளும் கடந்து செல்ல வேண்டும். அதனால் படகுகள் கடக்கும் போது இந்த ரயில்வே தண்டவாளம் தூக்கிக்கொண்டு படகுகளுக்கு வழி விடும். இப்படியாக பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே மிகப்பெரிய இன்ஜினியரிங் யுக்திகளை பின்பற்றி இந்த பாலம் கட்டமைக்கப்பட்டது.
இதனால் சுமார் 110 ஆண்டுகளாக இந்த பாலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் அடுத்தடுத்த தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு இந்த பாலம் எதுவாக இருக்காது என தற்போது உள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு செய்ததால் புதிதாக ஒரு பாம்பன் பாலத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்திய ரயில்வே நிர்வாகம் ரூபாய் 535 கோடி செலவில் கடலுக்கு நடுவே சுமார் 2.07 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில்வே பாலம் கட்டும் பணி (Pamban Bridge Construction Work) துவங்கியது.

இந்த பாலத்திற்கான தூண்கள் கட்டப்பட்டு சுமார் 1.5 கி.மீ நீளத்திற்கு இரும்பு தண்டவாளங்களும் கர்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பாலத்திற்கு நடுவே படகுகள் கடந்து செல்லும் வகையில் சுமார் 550 டன் எடை கொண்ட புதிய லிஃப்ட் தூக்கு பாலத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தூக்கு பாலம் ஏற்கனவே உள்ள பாலத்தில் உள்ள தொழில்நுட்பம் போல தூக்கம் பகுதி அமைக்கப்படாமல் சற்று வித்தியாசமாக லிப்ட் போன்ற வடிவமைப்பில் கட்டமைக்கப்பட உள்ளது.
தற்போது இந்த தூக்கு பாலத்தை தயாரிக்கும் பணி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில் நிலையம் அருகே உள்ள பகுதியில் நடந்து வருகிறது. தற்போது அங்கே பாலம் துண்டு துண்டாக தயாரிக்கப்பட்டு தனித்தனி உதிரி பாகங்களாக உள்ளன. இந்த பாலத்தை இனி ஊழியர்கள் தனித்தனி துண்டுகளாக எடுத்து வந்து கடலின் நடுவே பாலத்தை கட்டமைக்க உள்ளனர்.

இதற்காக தற்போது அந்த பாலத்தின் நடுவே சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு தண்டவாளம் மற்றும் கர்டர் எதுவும் போடப்படாமல் இருக்கிறது. பாலம் மொத்தம் 72.1 மீட்டர் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பாலத்தை கட்டும் பணி துவங்க உள்ளதால் இனி ராமேஸ்வரம் பாம்பன் பாலம் வழியாக இந்த பணி முடியும் வரை படகுகள் எதுவும் கடக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 10-ம் தேதி முதல் பாலத்தின் கட்டுமான பணிகள் துவங்குகிறது. முதற்கட்டமாக உருளை தூண்களை அமைக்க உள்ளனர். உருளை தூண்கள் அமைக்கப்பட்டவுடன் அதன் மீது தூக்குபாலம் பொருத்தப்படும் அதன் பின்னர் தொழில்நுட்ப கருவிகள் மின் கேபிள்கள் உள்ளிட்ட சாதனங்கள் எல்லாம் இணைக்கப்படும். அப்பொழுதுதான் இந்த தூக்கு பாலம் சரியாக இயங்கும்.
இதற்கான பணி வரும் நவம்பர் மாதம் 10-ம் தேதி துவங்க உள்ள நிலையில் 2024-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை இந்த பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த காலகட்டத்தில் பாம்பன் பாலத்தை கடந்து செல்ல கப்பல்களுக்கும் படுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தூக்கு பாலம் பழைய பாலம் போல் இல்லாமல் லிஃப்ட் போல் அமைக்கப்படுவதால் ஆசியாவிலேயே இப்படியான லிஃப்ட் போன்ற தூக்கு பாலம் ராமேஸ்வரத்தில் தான் அமைகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் அமைய உள்ள இந்த தூக்கு பாலம் உண்மையிலேயே ஒரு இன்ஜினியரிங் மார்வெல் என சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு புதிய தொழில்நுட்பத்தை கொண்டு மிகப் பெரிய சிரமத்துடன் இதை தயாரித்து வருகின்றனர். இது செயல்பாட்டிற்கு வரும்போது இது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே ஒரு அடையாளமாக மாறிப் போகும். உலக நாடுகளிலேயே வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் இந்த பாலம் தயாராகிறது.


Click it and Unblock the Notifications









