சார்ஜிங் மையங்களுக்கு பதிலாக முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி! 2022பட்ஜெட்டில் வெளியான சூப்பரான அறிவிப்பு!
மக்களை மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் வகையில் சூப்பரான அறிவிப்பு 2022 பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டை குறைப்பதற்கான முயற்சிகள் இந்தியாவில் அதி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளும் மிக அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற காரணங்களால் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 2021ம் ஆண்டில் மின் வாகன விற்பனை பல மடங்கு உயர்ந்திருக்கின்றது. ஆனால், ஐசிஇ எஞ்ஜின் கொண்ட வாகனங்களின் விற்பனையுடன், எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஒப்பிட்டால் பல மடங்கு குறைவானதாக காட்சியளிக்கின்றது.

ஆகையால், தற்போதும் மக்கள் சிலர் மின் வாகன பயன்பாட்டிற்கு மாறுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர் என்பது தெரிகின்றது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணங்களாக இரண்டு இருக்கின்றன. நாட்டில் போதியளவு சார்ஜிங் மையங்கள் இல்லாதது மற்றும் எலெக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்ய மிக அதிக நேரம் தேவை என்கிற இரு காரணங்களினாலயே மக்கள் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு மாற தயக்கம் காட்டுகின்றனர்.

இந்த நிலையை உடைத்தெறியும் வகையில் 2022 பட்ஜெட்டில் சிறப்பான அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. 2022-2023 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் நாடாளுமன்றத்தில் நடை பெற்று வருகின்றது. இம்முறையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டும் அவர் டிஜிட்டல் வாயிலாகவே பட்ஜெட் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், கடந்த ஆண்டை போலவே இம்முறையும் மின் வாகன பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

அதாவது, மின் வாகன பயன்பாட்டாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் நாடு முழுவதும் அதிகளவில் ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர இருப்பதாக அவர் அறிவித்தார். இதற்காக புதிய பாலிசியை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஸ்வாப்பபிள் மையங்கள் என்பது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை கட்டணத்தின் அடிப்படையில் வழங்கும் நிலையங்கள் ஆகும். இவற்றை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதனால் மின்சார சார்ஜிங் மையங்களின் பயன்பாட்டை பெருமளவில் குறைக்க முடியும்.

நேரம் பெருமளவில் மிச்சமாகும் என்கிற காரணத்தினால் மின் வாகன பயன்பாட்டாளர்கள் அதிகம் ஸ்வாப்பபிள் மையாங்களையே நாடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. நொடிப் பொழுதில் இங்கு முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகள் கிடைக்கும் என்பதனால், அதிக நேரம் செலவிட்டு சார்ஜிங் மையங்களில் சார்ஜ் செய்வதை மக்கள் தவிர்க்கும் நிலை உருவாகும்.

இதுபோன்ற காரணங்களுக்காகவே ஸ்வாப்பபிள் மையங்களுக்காக புதிய பாலிசையை மத்திய அரசு கொண்டு வர இருக்கின்றது. இதுமட்டுமின்றி, மின் வாகனங்களுக்ககான அடிப்படை கட்டமைப்புகள் மற்று் ஈகோ சிஸ்டங்களை அதிகரிக்கச் செய்ய இருப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கின்றார்.

தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "நாடு முழுவதும் மின் வாகனங்களுக்கான உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், மக்கள் மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறுவதற்கு ஏதுவாக அதிக எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை உருவாக்க இருக்கின்றோம்" என்றார்.

தற்போது மத்திய அரசு மக்களை மின் வாகன பயன்பாட்டின் பக்கம் இழுக்க பேட்டரியின் ஒவ்வொரு கிலோ வாட்டிற்கும் ரூ. 15 ஆயிரம் மானியம் வழங்கி வருகின்றது. ஃபேம்2 திட்டத்தின்கீழ் இந்த மானிய திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகின்றது. மத்திய அரசு மட்டுமின்றி சில மாநில அரசுகளும் இதுபோன்ற மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








