டைட்டானிக்-2 உல்லாச கப்பல் பற்றிய புதியத் தகவல்கள்!
வரலாற்றில் இடம்பெற்ற கருப்பு தினங்களில் ஒன்றாக டைட்டானிக் உல்லாச கப்பல் மூழ்கிய சம்பவம் பதிவாகிவிட்டது. டைட்டானிக் கப்பல் மூழ்கி நூறாண்டுகளை கடந்துவிட்டாலும், அதை பற்றிய செய்திகள் இன்னமும் முக்கியத்துவம் பெறுவதாக அமைகின்றது.
இந்த நிலையில், மூழ்கிய டைட்டானிக் கப்பலின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு புதிய டைட்டானிக் கப்பலை உருவாக்கும் பணிகள் நடந்து வருவது குறித்து ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
டைட்டானிக்-2 என்ற பெயரில் அழைக்கப்படும் புதிய டைட்டானிக் கப்பல் பற்றிய புதிய தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. அந்த சுவாரஸ்யத் தகவல்களை தாங்கி வருகிறது இந்த செய்தித் தொகுப்பு.

முதல் பயணம்
இந்த ஆண்டு டைட்டானிக்-2 உல்லாசக் கப்பல் தனது கன்னிப் பயணத்தை துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 2018ல் முதல் பயணத்தை துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரூட் மாறுகிறது
முதல் டைட்டானிக் கப்பல் இங்கிலாந்தின் சவுதம்ப்டன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு செல்லும்போது மூழ்கியது. இந்தநிலையில், டைட்டானிக்-2 கப்பலும் இதே பாதையில் பயணிக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது சீனாவின் ஜியாங்சூ துறைமுகத்திலிருந்து துபாய்க்கு முதல் பயணத்தை துவங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டமைப்பு
பழைய டைட்டானிக் கப்பலின் பிரதி வடிவமாகவே புதிய டைட்டானிக் கப்பல் உருவாக்கப்படுகிறது. உள்கட்டமைப்பு கூட பழைய கப்பலை ஒத்ததாக இருக்கும். அதேநேரத்தில், இந்த காலக்கட்டத்துக்கு ஏற்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கும்.

வடிவம்
புதிய டைட்டானிக் கப்பல் 270 மீட்டர் நீளமும், 53 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கும். இந்த புதிய கப்பல் 40,000 டன் எடை கொண்டதாக இருக்கும். 9 அடுக்குகளுடன் புதிய டைட்டானிக்-2 கப்பல் கட்டமைக்கப்படுகிறது.

அறைகள்
பழைய கப்பலை போலவே முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு என மூன்று விதமான அறைகள் இருக்கும். மொத்தம் 840 கேபின்களுடன் புதிய கப்பல் வடிவமைக்கப்படுகிறது.

விருந்தினர் எண்ணிக்கை
புதிய டைட்டானிக் கப்பலில் 2,400 பயணிகளும், 900 கப்பல் ஊழியர்களும் தங்கும் வசதி கொண்டதாக இருக்கும்.

வசதிகள்
நீச்சல் குளம், டர்க்கி பாத் எனப்படும் நீராவி குளியல் அறைகள், உடற்பயிற்சி கூடம், புகைப்பிடிக்கும் அறை, தியேட்டர், பொழுதுபோக்கு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டிருக்கும்.

உடைகள்
பழைய கப்பலில் வழங்கப்பட்டது போன்றே, புதிய கப்பலில் பயணிப்போர்க்கு 1920ம் ஆண்டுகளின் டிசைனில் வடிவமைக்கப்பட்ட ஆடைகள் பயணிகளுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு
பழைய கப்பல் மூழ்கியபோது, அதில் இருந்த பயணிகள் எண்ணிக்கைக்கு தக்கவாறு போதிய உயிர் காக்கும் படகுகள் இல்லாததே பெரிய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. எனவே, புதிய கப்பலில் அவசர காலத்தில் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறுவதற்கான உயிர்காக்கும் படகுகள் வைக்கப்பட்டிருக்கும். மேலும், தற்போதைய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப புதிய டைட்டானிக் கப்பல் வடிவமைக்கப்படுகிறது.

கப்பல் உரிமையாளர்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான க்ளைவ் பால்மரின் புளூஸ்டார் லைன் கப்பல் போக்குவரத்து நிறுவனம்தான் இந்த கப்பலை உருவாக்கி வருகிறது. இந்த கப்பல் சீனாவில் கட்டப்பட்டு வருகிறது.

முதலீடு
புதிய டைட்டானிக் கப்பல் 500 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

டைட்டானிக் சுவாரஸ்யங்கள்
புதிய டைட்டானிக் பற்றியத் தகவல்களை தெரிந்துகொண்டதுடன் நின்றுவிட முடியுமா? பழைய டைட்டானிக் கப்பலில் இருந்த எண்ணற்ற சுவாரஸ்யங்களை தொடர்ந்து படிக்கலாம்.

பிரம்மாண்டம்
கடல் ராணி என்றழைக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் 3,547 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது. முதல் பயணத்திலேயே விபத்தை சந்தித்த அந்த கப்பலில் பணியாளர்கள், பயணிகள் உள்பட மொத்தம் 2,223 பேர் பயணித்தனர். உயிர்காக்கும் படகுகள் மூலம் 706 பேர் வரை மட்டுமே உயிர் தப்பினர். மீதமுள்ள 1,517 பேர் கடல் மூழ்கி பலியாகினர். கடல் நீரின் வெப்பநிலை மைனஸ் 2 டிகிரிக்கும் குறைவாக இருந்ததே பலர் உயிரிழக்க காரணமாக கூறப்படுகிறது.

மின் விளக்குகள்
டைட்டானிக் கப்பலில்தான் முதன்முறையாக தொலைபேசி வசதியுடன், மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

மலை விழுங்கி எஞ்சின்
டைட்டானிக் கப்பலின் நீராவி எஞ்சின்களை இயக்குவதற்கு ஒரு நாளைக்கு 800 டன் நிலக்கரி தேவைப்பட்டது.

உயரம்
புகைப்போக்கி குழாயின் உயரத்தை சேர்த்து அளவிடும்போது டைட்டானிக் கப்பல் 17 அடுக்குகள் கொண்ட கட்டிடத்திற்கு இணையாக இருந்தது.

நீளம்
மூன்று கால்பந்து மைதானத்திற்கு இணையான நீளத்தை கொண்டது டைட்டானிக்.

வேகம்
மணிக்கு 23 நாட்டிக்கல் மைல் வேகம், அதாவது மணிக்கு 43 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. விபத்துக்குள்ளானபோதும், அதிகபட்ச வேகத்தில் சென்றதாலேயே பனிப்பாறைகள் இருப்பது தெரிந்தும் கப்பலை நிறுத்த இயலவில்லை என்று கூறப்படுகிறது.

லிஃப்ட் வசதி
டைட்டானிக் கப்பலில் 4 லிஃப்ட்டுகள், தண்ணீரை வெப்பமூட்டும் வசதி கொண்ட நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், 2 நூலகங்கள் மற்றும் 2 முடிதிருத்தும் நிலையங்கள் இருந்தன.

குடிநீர் பயன்பாடு
நாள் ஒன்றுக்கு பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு 53,000 லிட்டர் குடிநீர் தேவைப்பட்டது.

டம்மி புகைப்போக்கி குழாய்
டைட்டானிக் கப்பலில் 4 புகைப்போக்கி குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதில், மூன்று மட்டுமே புகை வெளியேற்றுவதற்கானது. மீதமுள்ள ஒன்று அழகுக்காக பொருத்தப்பட்ட டம்மி புகைப்போக்கி குழாய்.

டிக்கெட் விலை
டைட்டானிக் கப்பலில் மூன்று வகுப்புகள் கொண்டது. அதில், முதல் வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் கட்டணத்தை இப்போதைய மதிப்புக்கு ஒப்பிட்டால் 99,000 டாலர் ஆகும். இந்திய மதிப்பில் 50 லட்சத்துக்கும் அதிகம்.

விருந்து
நாள் ஒன்றுக்கு 86,000 பவுண்ட் இறைச்சி, 40,000 முட்டைகள், 40 டன் உருளைக் கிழங்கு, 7,000 முட்டைகோஸ்கள், 3,500 பவுண்ட் வெங்காயம், 36,000 ஆப்பிள்கள் மற்றும் 1,000 பிரெட் பாக்கெட்டுகள் ஆகியவை பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு உணவுப் பொருட்களாக தேவைப்பட்டது.

வித்தியாசமான செய்தித் தொகுப்பு
டைட்டானிக் கப்பலும், டைட்டானிக் சினிமாவும்... நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யங்கள்...!!


Click it and Unblock the Notifications








