புலம்பெயர் தொழிலாளர்களுக்காக புதிய இரயில்கள்!! ரிசர்வ் டிக்கெட்டே கிடையாது... மத்திய அரசின் அடுத்த அதிரடி மூவ்
வேலை வாய்ப்புகளை தேடி வேறு மாநிலங்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இந்தியன் இரயில்வே (Indian Railway) ஓர் அருமையான திட்டத்தை கொண்டுவர உள்ளதாக ஏற்கனவே நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் கூறியிருந்தோம். இந்த நிலையில், இந்த திட்டம் நாம் எதிர்பார்த்தை விட மிக விரைவாகவே செயல்படுத்தப்பட உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.
இரயில் போக்குவரத்து நம் நாட்டின் உயிர்நாடி போக்குவரத்தாக விளங்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடான நம் இந்தியாவில் எல்லாராலும் விமானத்தை பயன்படுத்த முடிவதில்லை. இதனால், விமான போக்குவரத்துக்கு அடுத்து விரைவானதாக உள்ள இரயில் போக்குவரத்தையே தினந்தோறும் இலட்சக்கணக்கிலான மக்கள் பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக, வேலை வாய்ப்பை தேடி வேறு மாநிலங்களுக்கு செல்லும் அடித்தட்டு மக்களின் பிரதான போக்குவரத்து இரயிலை நம்பியே உள்ளது. இதன் காரணமாகவே, நம் தமிழ்நாட்டிற்கு வரும் வட இந்திய மக்களை இரயில் நிலையங்களில் பரவலாக பார்க்க முடியும். அவ்வாறு தமிழ்நாட்டிற்கு வரும் வட இந்தியர்கள் முன்பதிவில்லா டிக்கெட்டை வைத்துக் கொண்டு, முன்பதிவு பெட்டிகளில் பயணிப்பது கடந்த சில வருடங்களாக ஓர் குற்றச்சாட்டாக உள்ளது.
முன்பதிவு டிக்கெட் உடன் பயணிக்கும் பயணிகள் மத்தியில் அவ்வப்போது எழுந்துவரும் இந்த குற்றச்சாட்டை இந்திய இரயில்வே பெரியதாக கவனத்தில் எடுத்து கொண்டது போல் தெரியவில்லை. ஆனால், இதனை சரிச் செய்யும் வகையில் மற்றொரு திட்டத்தில் இரயில்வே நிர்வாகம் உள்ளது. அதாவது, குறைந்த டிக்கெட் கட்டணத்தில் புதிய இரயில்களை கொண்டுவரும் திட்டத்தில் இந்தியன் இரயில்வே உள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தோம்.
அதன்படி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கொண்டுவரப்படும் இந்த புதிய இரயில்கள் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி, தேசிய சுதந்திர தினத்திற்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என இரயில்வே அமைச்சகத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. அஸாடி கா அம்ரிட் மஹோட்சாவ் திட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டுவரப்படும் இந்த புதிய இரயில்கள் நீண்ட தொலைவிற்கு இயங்கக்கூடியவைகளாக, முன்பதிவில்லா பெட்டிகளை மட்டுமே கொண்டவைகளாக இருக்கும் என கூறப்படுகிறது.
இரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கு நாடு முழுவதிலும் எப்போதுமே மிகுந்த போட்டி நிலவிவரும் நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இத்தகைய புதிய இரயில்களை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முனைப்பில் மத்திய இரயில்வே துறை உள்ளது. இந்த புதிய இரயில்கள் பீகார், உத்திர பிரதேசம், ஜார்கண்ட், பஞ்சாப், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், சத்தீஸ்கர், ஒடிசா, மஹாராஷ்டிரா, டெல்லி போன்ற மிக பெரிய மாநிலங்களை இணைக்கும் விதமாக இயங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றப்படி, தென்னிந்தியாவிலும் இந்த இரயில்கள் இயங்கும் என்பதுபோல் எந்த தகவலும் இல்லை. ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளதால், வடக்கு இரயில்வே மற்றும் வடகிழக்கு இரயில்வே மண்டல அதிகாரிகள் இந்த புதிய இரயில்களுக்கான நிரந்தர கால அட்டவணையை உருவாக்கும் முயற்சியில் ஏற்கனவே ஈடுப்பட ஆரம்பித்துவிட்டனராம்.
புதிய இரயில்கள் இரு விதமான வகைகளில் கொண்டுவர அதிகாரிகள் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஒன்று, முழுவதுமாக முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட இரயில்கள், மற்றொன்று, ஜென்ரல் கிளாஸ் இருக்கைகள் மற்றும் ஏசி-இல்லா படுக்கை பெட்டிகளை கொண்ட இரயில்கள் ஆகும். கடந்த ஒரு வருடத்தில் இரயில்களில் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, இந்த புதிய இரயில்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன.
இதுகுறித்து மத்திய இரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வேலைக்காக பெரிய நகரங்களில் இருந்து மற்றொரு பெரிய நகரங்களுக்கு செல்வோரிடம் இருந்து எந்தெந்த வழித்தடங்களில் அதிக கோரிக்கைகள் வருகின்றன என்பதைப் பற்றி ஆய்வு செய்துள்ளோம். இத்தகைய வகுப்பினர்களுக்கான நிறைய தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன" என்றார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: வட இந்தியாவில் இருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும்பாலும் முன்பதிவு செய்த பெட்டிகளில் சட்டத்திற்கு புறம்பாக பயணம் செய்வது அவ்வப்போது குற்றச்சாட்டாக எழுந்துவரும் நிலையில், அதனை குறைப்பதற்காகவே இவ்வாறான புதிய முன்பதிவில்லா இருக்கை இரயில்களை இந்திய இரயில்வே துறை கொண்டுவருகிறது என்பது தெளிவாக தெரிகிறது. அவ்வாறான இரயில்கள் சில, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. ஆனால் அவை குறைந்த தொலைவிற்கு மட்டுமே இயங்கக்கூடியவைகளாக உள்ளன.


Click it and Unblock the Notifications








