எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு... எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் பின்வாங்கும் அமெரிக்கா!!
எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க நம் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் பல விதமான முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், அமெரிக்காவில் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் வேகத்தை குறைக்கும் விதமாக புதிய வாகன மாசு உமிழ்வு விதிமுறைகள் கொண்டுவரப்பட உள்ளன. அதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
கடந்த மார்ச் 20ஆம் தேதி அமெரிக்க அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் 2032ஆம் ஆண்டிற்குள் 67% மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை 35% ஆக குறைத்து கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களினால் கார்பன் உமிழ்வு வெகுவாக குறையும் என்பதால் இத்தகைய வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

ஆனால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அத்தகைய நிலையை எட்ட கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டு வருவதால், ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுக்கும் விதமாக தனது இவி டார்க்கெட்டை அமெரிக்க அரசாங்கம் தளர்த்திக் கொள்ளவுள்ளது. இதனால்தான், 2032ஆம் ஆண்டிற்குள் எதிர்பார்த்ததை காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு பாதி அளவிற்கு அதிகரித்தாலே போதும் என்கிற மனநிலைக்கு அமெரிக்க அரசு வந்துள்ளது.
அதேநேரம், அட்வான்ஸ்டு பெட்ரோல் தொழிற்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் அமெரிக்கா விரும்புகிறது. அதாவது, டர்போ-சார்ஜிங், எடை குறைவான வாகனங்கள் மற்றும் ஸ்டாப்-ஸ்டார்ட் இக்னிஷன் சிஸ்டங்கள் மூலமாக அதிக எரிபொருள்கள் செலவிடப்படுவதை குறைக்க பைடனின் அமெரிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. அதேநேரம், பெட்ரோல்/ டீசலின் பயன்பாட்டை குறைப்பதிலும் அமெரிக்க தீவிரமாக உள்ளது.

"மாசு உமிழ்வு எதிர்பார்த்த அளவிற்கு குறையாமல் போனால், எங்களது இறுதி விதிமுறைகள் இப்போது இருப்பதை போலவே இருக்கும்" என அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி மைக்கெல் ரெகன் தெரிவித்துள்ளார். அதாவது, நிர்ணயித்த அளவுக்கு வாகனங்களில் இருந்து வெளிவரும் மாசு குறையாவிட்டால் இப்போது கடைப்பிடிக்கப்படும் கடுமையான விதிமுறைகள் அப்படியே பின்பற்றப்படும் என்பது மைக்கெல் ரெகனின் கருத்தாக உள்ளது.
அதேநேரம், "எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தியே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்த மாட்டோம்" எனவும் ரெகன் தெளிவுப்படுத்தி உள்ளார். அமெரிக்காவில் வாகனங்களினால் ஏற்படும் மாசு உமிழ்வை 2026ஆம் ஆண்டிற்குள் 56% ஆகவும், 2032ஆம் ஆண்டிற்குள் 49% ஆகவும் குறைப்பது என்பது அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் இலக்காக உள்ளது.

அமெரிக்காவில், வாகனங்களின் மாசு உமிழ்வை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை வரையறுக்கும் உரிமை இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்திடமே உள்ளது. எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதை கொஞ்சம் தளர்த்தலாம் என்பது இந்த அமைப்பின் விருப்பாமாகவே தற்போதைக்கு உள்ளதே தவிர்த்து, இன்னும் விதிமுறைகள் அமலுக்கு வரவில்லை. இருப்பினும், விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யலாம் என சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு யோசிப்பது கூட பைடனின் தேர்தல் தந்திரம் என கூறப்படுகிறது.
ஏனெனில், அமெரிக்காவில் நிறைய மாகாணங்களில் நிறைய தொழிலாளர்கள் பெட்ரோல்/ டீசல் வாகனங்களை சார்ந்துள்ளனர். அவை எலக்ட்ரிக்காக மாறும்போது அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், தேர்தலை முன்னிட்டு இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்க பைடன் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரங்கள் வருகிற நவம்பர் மாதத்தில் துவங்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனுக்காக அமல்படுத்தப்படும் திட்டங்களை தேர்தலுக்காக தளர்த்த வேண்டிய தேவை நம் இந்தியாவில் மட்டுமின்றி, அமெரிக்க அரசியல்வாதிகளும் ஏற்படுகிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் நாடுகளுள் ஒன்றாக அமெரிக்கா இருப்பதால், விதிமுறைகளில் சிறிய தளர்வு அந்த நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications









