மணமக்களுக்கு விலை உயர்ந்த பரிசை வழங்கிய நண்பர்கள்! நமக்கு கிடைக்கவில்லையே என ஏக்க பெருமூச்சு விட்ட உறவினர்கள்!
மணமக்களுக்கு 'விலை உயர்ந்த' பரிசை அவர்களின் நண்பர்கள் பரிசாக வழங்கிய சுவாரஸ்யமான சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த 15 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 9 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக தினமும் வாகனங்களை பயன்படுத்தியே ஆக வேண்டிய தேவை இருப்பவர்களுக்கு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்? என்பது உறுதியாக தெரியவில்லை. விரைவில் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்பது வருத்தமான விஷயம்.

தமிழக தலைநகர் சென்னையில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 9), ஒரு லிட்டர் பெட்ரோல் 110.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு லிட்டர் டீசலின் விலை 100.95 ரூபாயாக இருக்கிறது. பெட்ரோல், டீசல் அதிகப்படியான விலையில் விற்பனை செய்யப்படுவதால், அவற்றின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் இந்த கோரிக்கையை பரிசீலிக்குமா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கிண்டல் அடிக்கும் வகையிலான நிகழ்வுகள் மீண்டும் அரங்கேற தொடங்கியுள்ளன. தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில், மணமக்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

மணமக்களுக்கு அவர்களின் நண்பர்கள் சார்பில் இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் கிரேஸ் குமார்-கீர்த்தனா ஆகியோரின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. அப்போதுதான் மணமக்களுக்கு அவர்களின் நண்பர்கள் சார்பில், பெட்ரோல், டீசல் பரிசாக வழங்கப்பட்டது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறை கிடையாது. கடந்த காலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தபோதும் கூட திருமண விழாக்களில், புதுமண தம்பதியினருக்கு பெட்ரோல், டீசல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பேக்கரிகளில் கேக் வாங்கினால் பெட்ரோல் இலவசம் என்பது போன்ற வித்தியாசமான சலுகைகளும் கூட வழங்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதுபோன்ற சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தாலும் கூட, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வாகன ஓட்டிகளை மிக கடுமையாக பாதித்துள்ளது. இது அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்விற்கும் வழிவகுத்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்க குறைவான செலவுதான் ஆகும் என்பதே இதற்கு முக்கியமான காரணம். எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பது மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொடர்ச்சியாக அறிமுகமாகி வருகின்றன. ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர் எனர்ஜி, டிவிஎஸ், பஜாஜ், ஒகினவா, ஆம்பியர் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தற்போது இங்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் பைக்குகளின் எண்ணிக்கை குறைவாகதான் உள்ளது.

அதேபோல் ஒரு சில எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆனால் வரும் காலங்களில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு, தற்போது இருப்பதை காட்டிலும் பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்தியாவில் வெகு விரைவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான், டிகோர் எலெக்ட்ரிக் கார்களின் லாங்-ரேஞ்ச் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. அதை தொடர்ந்து டாடா அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன், மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் என ஏராளமான எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன.


Click it and Unblock the Notifications








