சென்னையில் இருந்து பெங்களூர் போக 1 மணி நேரம் கூட ஆகாது! ஒட்டுமொத்த உலகையே மிரள விட போகும் இந்தியா!
வந்தே பாரத் ரயில்களின் (Vande Bharat Trains) வருகைக்கு பிறகு, இந்திய ரயில்வே வெகுவாக மேம்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்கள் அதிவேகத்தில் பயணம் செய்கின்றன. இதன் காரணமாக பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. சோதனை ஓட்டங்கள் நடைபெற்றபோது, வந்தே பாரத் ரயில்கள், மணிக்கு 183 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து, அனைவரையும் பிரம்மிக்க வைத்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 52 வினாடிகளிலேயே எட்டி விடக்கூடிய திறன் வந்தே பாரத் ரயில்களுக்கு உண்டு. வந்தே பாரத் ரயில்கள் மிகவும் வேகமாக இயங்குவதுடன், பயணிகளுக்கு சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பயணத்தையும் வழங்குகின்றன.

சுழற்ற கூடிய வகையிலான 180 டிகிரி இருக்கைகள், வை-ஃபை, இன்ஃபோடெயின்மெண்ட் திரைகள், எல்இடி லைட்டிங் போன்ற வசதிகள் எல்லாம், பயணிகளுக்கு சௌகரியமான பயணத்தை உறுதி செய்கின்றன. அதேபோல் வந்தே பாரத் ரயில்களில் சத்தமும், அதிர்வுகளும் மிகவும் குறைவாக இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருப்பது வந்தே பாரத் ரயில்களின் 3.0 வெர்ஷன் ஆகும். இந்த சூழலில், வந்தே பாரத் 4.0 ரயில்கள் அடுத்த 18 மாதங்களில் தயாராகி விடும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புது டெல்லியில், 16வது சர்வதேச ரயில்வே உபகரண கண்காட்சியை (16th International Railway Equipment Exhibition), ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw) தொடங்கி வைத்தார். அப்போது 7,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு, பிரத்யேகமான பயணிகள் ரயில் வழித்தடங்களை அமைக்க, இந்திய ரயில்வே திட்டமிட்டிருப்பதாக அவர் கூறினார்.
இந்த வழித்தடங்களில் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும். எனவே எதிர்காலத்தில் இந்திய மக்களின் ரயில் பயணங்கள் இன்னும் விரைவானதாக இருக்க போகிறது என்பது உறுதி. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிய பிரத்யேகமான பயணிகள் ரயில் வழித்தடங்கள் நாடு முழுக்க பல்வேறு நகரங்களுக்கு இடையே அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவற்றின் ஒட்டுமொத்த நீளம் 7,000 கிலோ மீட்டர்களாக இருக்கலாம். தென் இந்தியாவின் 2 முக்கிய நகரங்களான சென்னை - பெங்களூர் இடையேயும், இந்த பிரத்யேமான பயணிகள் ரயில் வழித்தடம் அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி அமைக்கப்பட்டால், சென்னையில் இருந்து பெங்களூருக்கு, 1 மணி நேரத்திற்கு உள்ளாகவே சென்று விட முடியும்.
சென்னை - பெங்களூர் இடையேயான தொலைவு சுமார் 330 கிலோ மீட்டர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது தவிர நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், அடுத்த தலைமுறை வந்தே பாரத் ரயில்களை (4.0), இந்தியா அடுத்த 18 மாதங்களில் தயாரித்து விடும் எனவும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இந்த தகவல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்கள், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவின் உள்நாட்டில் பயன்படுத்தப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம், இந்திய ரயில்வேக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.


Click it and Unblock the Notifications








