ரோடு போடுவதில் உலக சாதனை படைக்க NHAI திட்டம்... ஐந்து நாட்களில் இத்தனை நீளமான சாலையை அமைக்க போறாங்களா!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highway Authority of India) தனியார் நிறுவனம் ஒன்றுடன் கை கோர்த்துக் கொண்டு சாலை அமைப்பதில் உலக சாதனை படைக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highway Authority of India) சாலை அமைப்பதில் உலக சாதனை படைக்க திட்டமிட்டுள்ளது. குறைவான நேரத்தில் மிக நீளமான சாலையை அமைக்க அது திட்டமிட்டிருக்கின்றது. தனியார் சாலை அமைக்கும் நிறுவனமான ராஜ்பூட் இன்ஃப்ராகான் வாயிலாகவே இந்த சாதனையைப் படைக்கப் போகின்றது நெடுஞ்சாலை ஆணையம்.

தற்போது மஹாராஷ்டிராவின் அமராவதி மற்றும் அகோலா ஆகிய பகுதிகளுக்கு இடையில் சாலையை அமைக்கும் பணியில் ஆணையம் மிக பிசியாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே உலக சாதனை படைக்கும் பிளானை ஆணையம் கையில் எடுத்திருக்கின்றது. 108 மணி நேரங்களில் 75 கிமீ தூரத்திற்கு சாலையை அமைக்க அது திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் சுதந்திரத்தை முன்னிட்டு இந்த சாதனை மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பணி நேற்றைய (ஜூன் 3ம் தேதி) தினம் காலை 6 மணிக்கே தொடங்கிவிட்டதாக கூறப்படுகின்றது. இந்த பணிகள் 108 மணி நேரங்களுக்கு உள்ளாகவே நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, அடுத்த வாரம் செவ்வாய் கிழமைக்குள் (ஜூன் 7) 75 கிமீ சாலையை அமைக்கும் பணிகள் நிறைவடைய உள்ளது.

அதேநேரத்தில் ஐந்து நாட்களுக்குள்ளாக சாலையை அமைக்கும் பணியை நிறைவு செய்யும் நோக்கில் இயங்கத் தொடங்கியிருப்பதாக தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. மிக வேகமாக சாலையை அமைப்பதற்காக நூற்றுக் கணக்கான பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி 700 நபர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. விரைவில் இந்த எண்ணிக்கை 800 பேராக அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

ராஜ்பூட் இன்ஃப்ராகான் நிறுவனம் இதுபோன்று சாலையமைப்பதில் சாதனை படைப்பது முதல் முறையல்ல. முன்னதாக இந்த தனியார் நிறுவனம் சங்கிளி மற்றும் சதரா ஆகிய பகுதிகளுக்கு இடையில் 24 மணி நேரத்தில் சாலையை அமைத்து சாதனைப் படைத்தது. இதுவும் உலக சாதனை ஆகும். இந்த நிலையிலேயே மகாராஷ்டிராவின் அமராவதி - அகோலாவுக்கு இடையில் சாலையை அமைக்கும் பணியை நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

இந்த சாலை தற்போது நாட்டில் உள்ள மிக மோசமான சாலைகளில் ஒன்றாக காட்சியளிக்கின்றது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழித்தடம் மிக மோசமானதாக இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆகையால், புதிய சாலையை அமைப்பதற்காக பல ஆண்டுகளாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தது.

இதன் அடிப்படையில் கடந்த காலத்தில் இரு ஒப்பந்ததாரர்களுக்கு பழுதுபார்க்கும் பணி வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் சரிவர பணியை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகின்றது. அவர்கள் மிக அதிக நாட்களை எடுத்துக் கொண்டதாக மத்திய அமைச்சர் அண்மையில் அதிருப்தி தெரிவித்தார். இந்த மாதிரியான சூழலிலேயே தற்போது புதிய கான்ட்ராக்டர் சாலையை அமைக்கும் பணியை கையில் எடுத்துள்ளார்.

சாலைகள் வாகனங்களின் இயக்கத்திற்கு மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாக இருக்கின்றது. இவை நம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. ஓர் நாடு வளர்ச்சி அடைய வேண்டும் எனில், அந்நாட்டின் உட்கட்டமைப்பு சிறப்பானதாக இருக்க வேண்டும். அதாவது அடிப்படை வசதிகளில் மேம்பட்டு இருக்க வேண்டும். இந்த அடிப்படை வசதிகளில் முக்கியமானதாக சாலைகள் இருக்கின்றன. உற்பத்தி பொருட்களை நாட்டின் பிற பகுதிகளுக்கு எடுத்து செல்ல இவை உதவுகின்றன. இதன் வாயிலாகவே ஒட்டுமொத்த நாட்டின் தேவையையும் பூர்த்தி செய்யப்படுகின்றது.
குறிப்பு: அனைத்து படங்களும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








