பள்ளங்களை தானாகவே சரி செஞ்சுக்குமா!.. சூப்பரான ரோடை போடும் பணியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!
நாடு முழுக்க குண்டும், குழியுமான சாலைகளே ஆக்கிரமித்துக் காணப்படுகின்றன. நாட்டில் எங்கும் பார்த்தாலும் சாலைகள் மிக மோசமாக இருக்கின்ற சூழலே உள்ளது, அல்லது, சாலையே இல்லாத நிலையேத் தென்படுகின்றது. தேசிய நெடுஞ்சாலைகளில்கூட இந்த மாதிரியான அவலங்களை அதிகளவில் பார்க்க முடிகின்றது. சாலைகளின் இந்த நிலையே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக இருக்கின்றது.
நம் நாட்டில் அரங்கேறும் பெரும்பாலான விபத்துகள் மற்றும் இறப்புகளுக்கு பின்னால் பள்ளம், மேடுகள் நிறைந்த சாலைகளே முக்கிய காரணியாக இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (National Highways Authority of India), தன்னை தானே சரி செய்துக் கொள்ளும் சாலைகளை விரைவில் நாடு முழுக்க கட்டமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உடலில் காயம் ஏற்பட்டால் தானாகவே சரியாகிக் கொள்ளும் திறன் மனிதன் மற்றும் விலங்கு போன்ற உயிரினங்களுக்கு மட்டுமே உள்ளது. இந்த மாதிரியான ஓர் திறனையே சாலைகளுக்கும் வழங்கும் முயற்சியில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தற்போது களமிறங்கி உள்ளது. உதாரணமாக சாலையில் ஏற்படும் பள்ளங்கள் அல்லது விரிசல்களை தானாகவே சரி செய்துக் கொள்ளும் திறனே அந்த சாலைகளுக்கு வழங்கப்பட இருக்கின்றது.
சாலை அமைப்பதில் தார் மற்றும் ஜல்லி கற்கலே முக்கிய பங்கினை வகிக்கின்றன. இதில், தாருக்கே தானாக குணமாகிக் கொள்ளும் திறன் வழங்கப்பட இருக்கின்றது. இதற்காக தார் மற்றும் ஜல்லி கற்கல் கலவையுடன் புதிய வகை உலோக துகள்கள் கலக்கப்பட உள்ளன. இவற்றை லேசாக சூடாக்கினாலே உருகிவிடும் என கூறப்படுகின்றது.

இந்த திறனே தன்னைத் தானே சரி செய்துக் கொள்ள சாலைகளுக்கு உதவ இருக்கின்றது. இது எந்த அளவிற்கு சாத்தியம் என தெரியவில்லை. முதலில் அரசு இந்த தொழில்நுட்பத்தை ஆராய இருக்கின்றது. குறிப்பாக, இதற்கு ஆக இருக்கும் செலவைப் பொருத்தே அரசு பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிட உள்ளது.
தன்னைத் தானே சரி செய்துக் கொள்ளும் சாரை பற்றிய பெயர் கூற விரும்பாத முக்கிய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது, "நாட்டில் அரங்கேறும் பெரும்பாலான விபத்துகளுக்கு சாலைகளில் உள்ள பள்ளம் மற்றும் விரிசல்களே காரணமாக உள்ளது. எனவே, நாங்கள் சாலைகளின் ஆயுட்காலத்தை மேம்படுத்தும் மற்றும் பள்ளங்களினால் ஏற்படும் ஆபத்துகளைச் சரி செய்வதற்கான வேலைகளிலும் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம்.
குறிப்பாக, சேதமடைந்தால் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் திறன் கொண்ட சாலைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் 2024-25 ஆம் நிதியாண்டில் சாலை பராமரிப்பிற்காக மட்டும் 2,600 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கின்றது.
முந்தைய நிதியாண்டிலிலும் இதோபோல் பெரிய தொகையே சாலை சீரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது. இதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் செய்யப்படும் பெரும் செலைவை தன்னைத் தானே சரி செய்துக் கொள்ளும் சாலை பயன்பாட்டிற்கு வரும் எனில் குறைத்துவிடும். ஆகையால், அரசுக்கு மிகப் பெரிய அளவில் நிதி மிச்சப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுதவிர பள்ளங்களால் ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் குறையக் கூடும். 2022 ஆம் ஆண்டில் மட்டுமே சாலைகளில் உள்ள பள்ளங்களின் காரணமாக 4,446 விபத்துகளும், 2021 ஆம் ஆண்டில் 3,625 விபத்துகளும் அரங்கேறி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது வேதனை அளிக்கும் வகையில் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிகப் பெரிய அளவில் அதிகரித்துக் காணப்படும் சாலை விபத்துகளைக் குறைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். இதன் அடிப்படையிலேயே தன்னைத் தானே சரி செய்துக் கொள்ளும் சாலையை அமைக்கும் பணியில் அரசு களமிறங்கி இருக்கின்றது. எனவே சீக்கிரமே நாடு முழுவதும் இந்த டெக்னாலஜியை அது பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








