பிப்ரவரி முதல் ஒவ்வொரு டோல் பூத்திலும் விதிமுறை மாறுது! ஃபாஸ்டேக்கை வாங்கிட்டா யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க!
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) 2026 பிப்ரவரி 1 முதல் கார், ஜீப், வேன்களுக்கு புதிய ஃபாஸ்டேக் (FASTag) பெறுபவர்களுக்கு 'உங்கள் வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள்' (Know Your Vehicle - KVY) சரிபார்ப்பு செயல்முறையை நீக்குவதாக அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு சிரமமில்லாத பயண அனுபவத்தை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இனி ஃபாஸ்டேக்கை செயல்படுத்துவதற்கு முன்பே, வாகனத்தை பற்றிய தகவல்களைச் சரிபார்க்கும் முழுப் பொறுப்பும் ஃபாஸ்டேக் வழங்கும் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்கள் எதிர்கொண்ட தாமதங்கள் மற்றும் சிரமங்கள் தவிர்க்கப்படும் என்று NHAI தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கார் பிரிவில் வழங்கப்பட்டுள்ள ஃபாஸ்டேக்குகளுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது மேற்கொள்ள வேண்டிய வழக்கமான KVY சரிபார்ப்பும் இனி தேவையில்லை.

எனினும், காரின் விண்ட்ஷீல்டில் தெரியும்படி ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை ஓட்டாதது, தவறான விபரங்கள் வழங்கல் அல்லது முறையற்ற பயன்பாடு போன்ற புகார்கள் வரும் குறிப்பிட்ட சமயங்களில் மட்டும் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படும். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம், "செல்லுபடியாகும் வாகன ஆவணங்கள் இருந்தபோதிலும், ஃபாஸ்டேக் செயல்படுத்தப்பட்ட பிறகு கே.ஒய்.வி தேவைகளால் சிரமங்களையும் தாமதங்களையும் சந்தித்த லட்சக்கணக்கான சாதாரண சாலைப் பயணிகளுக்கு இந்தச் சீர்திருத்தம் குறிப்பிடத்தக்க நிவாரணத்தைக் கொண்டுவரும்" என்று கூறியுள்ளது.
பயனர்களுக்கான செயல்முறையை எளிதாக்குவதோடு, துல்லியம், இணக்கம் மற்றும் அமைப்பு ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதி செய்ய NHAI ஆணையம் ஃபாஸ்டேக் வழங்கும் வங்கிகளுக்கு புதிய முன்-செயலாக்க சரிபார்ப்பு விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி, வாஹன் (VAHAN) தரவுத்தளத்தில் இருந்து வாகனத்தின் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே ஃபாஸ்டேக் செயல்படுத்த அனுமதிக்கப்படும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்டேக் செயல்படுத்தப்பட்ட பிறகு வாகனத்தை பற்றிய விபரங்களை சரிபார்க்க வேண்டிய முந்தைய விதிமுறை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வாஹன் தரவுத்தளத்தில் வாகன விவரங்கள் பதிவு செய்யப்படாத விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே பதிவுச் சான்றிதழ் (ஆர்.சி) அடிப்படையிலான சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும். இந்தச் சந்தர்ப்பங்களில், ஃபாஸ்டேக் வழங்கும் வங்கிகள் முழுப் பொறுப்புடன், செயல்படுத்துவதற்கு முன்பு வாகன பதிவுச் சான்றிதழைப் பயன்படுத்தி விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.
ஆன்லைனில் விற்கப்படும் ஃபாஸ்டேக்குகளும், வங்கிகளின் முழுமையான சரிபார்ப்பிற்குப் பின்னரே செயல்படத் தொடங்கும் என்று NHAI தெளிவுபடுத்தியுள்ளது. "இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வாகனச் சரிபார்ப்புகள் முன்கூட்டியே முடிக்கப்படுவதை உறுதி செய்கின்றன. இதன் மூலம் ஃபாஸ்டேக் செயல்படுத்தப்பட்ட பிறகு வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் பின்தொடர வேண்டிய தேவை நீக்கப்படும்" என்று NHAI தெரிவித்துள்ளது.

KVY (உங்கள் வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள்) என்பது ஃபாஸ்டேக்குகள் வாகனப் பதிவு எண்களுடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்வதற்கான ஒரு சரிபார்ப்பு முறை ஆகும். இது சுங்கச்சாவடிகளில் தவறான பயன்பாடு மற்றும் வருவாய் இழப்பைத் தடுக்க வடிவமைக்கப்பட்டது. "ஃபாஸ்டேக் முறையை குடிமக்களுக்கு ஏற்ற, வெளிப்படையான மற்றும் தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படும் ஒரு அமைப்பாக மாற்றுவதற்கான எங்கள் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்தச் சீர்திருத்தங்கள் பிரதிபலிக்கின்றன.
புதிய விதிகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மாற்றங்கள் பயணிகளை ஏற்றி செல்லும் கார்கள், ஜீப் மற்றும் வேன்ளுக்கு மட்டுமே பொருந்தும். லாரிகள் மற்றும் பல அச்சு வாகனங்கள் போன்ற கமர்ஷியல் வாகனங்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என்று அமைச்சக அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சீர்திருத்தங்கள், நெடுஞ்சாலைப் பயனர்களுக்கு ஒரு எளிமையான மற்றும் திறமையான மின்னணு சுங்கக் கட்டண வசூல் அனுபவத்தை பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் தாமதங்கள் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஃபாஸ்டேக் முறையை பின்பற்றும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கையும் இதன் மூலம் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









