என்எஸ்ஜி கமாண்டோக்கள் புடை சூழ சேலை எடுக்க வந்து மானம் போச்சு! யார்னு தெரிஞ்சும் பயப்படாம பாடம் கற்பித்த பெண்!
இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி (Mukesh Ambani), உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி (Nita Ambani), ஆடம்பரமான வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் அணியும் ஆடைகள் மற்றும் அணிகலன்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க கூடிய வகையில், மிகவும் விலை உயர்ந்ததாகவும், ஆடம்பரமானதாகவும் இருக்கும். இதன் காரணமாக சமூக வலை தளங்களில் நீதா அம்பானி எப்போதும் பேசு பொருளாகவே இருந்து வருகிறார்.
இந்த வரிசையில் நீதா அம்பானியின் சமீபத்திய பெங்களூர் (Bangalore) வருகையும் சமூக வலை தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. பெங்களூரில் உள்ள கடை ஒன்றில் சேலைகளை வாங்குவதற்காக சமீபத்தில் நீதா அம்பானி வந்திருந்தார். சேலை எடுக்க கடைக்கு வருவதற்கு மிகவும் விலை உயர்ந்த காரை அவர் பயன்படுத்தினார்.

அது மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 கார்டு (Mercedes Benz S600 Guard) ஆகும். சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த காரில், புல்லட் ப்ரூஃப் வசதிகள் கூட உள்ளன. அத்துடன் நீதா அம்பானியின் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களும், அவருடன் வந்திருந்தனர். நீதா அம்பானி இஸட்+ (Z+) பாதுகாப்பின் கீழ் உள்ள ஒரு நபர் ஆவார்.
இஸட்+ பாதுகாப்பின் கீழ் உள்ள ஒருவருக்கு, மொத்தம் 55 பாதுகாவலர்கள் இருப்பார்கள். இதில், என்எஸ்ஜி-யை (NSG - National Security Guard) சேர்ந்த கமாண்டோக்களும் அடங்குவர். இப்படிப்பட்ட உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ள நீதா அம்பானி புடவை எடுக்க வந்த காரணத்தால், அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

பொதுவாக செல்வாக்கு மிக்க நபர்கள் ஓரிடத்திற்கு சென்றால், குறிப்பாக பெரு நகரங்களில் ஓரிடத்திற்கு சென்றால், அங்கு 'டிராஃபிக் ஜாம்' (Traffic Jam) ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன்படி நீதா அம்பானி வந்திருந்த சமயத்தில், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகளை பலரும் கண்டும் காணாதது போல் சென்று விடுவார்கள்.
ஆனால் பெங்களூரில் நீதா அம்பானி வந்தபோது நடந்ததோ வேறு. நீதா அம்பானி துணிக்கடையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த சமயத்தில், பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர், நீதா அம்பானியின் பாதுகாவலர் ஒருவரிடம் சென்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போக்குவரத்து பாதிப்பு தொடர்பாக நீதா அம்பானியின் பாதுகாவலரிடம், அந்த பெண் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் போக்குவரத்து பாதிப்பால், தான் அடைந்த விரக்தியையும், நீதா அம்பானியின் பாதுகாவலரிடம், அந்த பெண் வெளிப்படுத்தினார். மேலும் மற்றவர்களுக்கு ஏற்படும் அசௌகரியம் குறித்தும் அவர் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். இந்த சம்பவத்தின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்க்கும் பலரும், அந்த பெண்ணின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர். நீதா அம்பானி போன்ற செல்வாக்கு மிக்க ஒரு பெண் அருகிலேயே இருக்கும்போது, அவரது பாதுகாவலரிடம் சென்று, போக்குவரத்து பாதிப்பு தொடர்பாக கேள்வி எழுப்புவதற்கெல்லாம் தைரியம் வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நீதா அம்பானி போன்ற நபர்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதில் எள் அளவிற்கும் சந்தேகம் இல்லை. நாட்டின் முக்கியமான நபர்களுக்கு, அச்சுறுத்தல் இருப்பதால், அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை குறை சொல்வதில் நியாயம் இல்லை. ஆனால் அவர்களின் வருகை, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்து கொள்வது மிகவும் அவசியமானது.
இல்லாவிட்டால் அரசும், முக்கிய நபர்களும், பொதுமக்களின் அதிருப்தியை சந்திக்க நேரிடும். குறிப்பாக பெங்களூர் போன்ற நகரங்கள், ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் பிரச்னையில் சிக்கி திணறி வருகின்றன. நிலைமை இப்படி இருக்கும்போது, முக்கிய நபர்களின் வருகையால், போக்குவரத்து மேலும் பாதிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது. இது தொடர்பாக மக்கள் எழுப்பும் கேள்விகள் நியாயமானதே!


Click it and Unblock the Notifications








