டிரைவர்கள் உலகமே இந்த அமைச்சருக்கு நன்றி சொல்லும்! வயித்துல பால வார்க்கிற சங்கதியை சொல்லியிருக்காரு!
டிரைவர்களுக்கு ஆப்பு வைக்கக் கூடிய வகையிலான வாகனங்கள் படிப்படியாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள வேமோ நிறுவனத்தைச் சொல்லலாம். இந்த நிறுவனம் டிரைவர்களே தேவைப்படாத கால் டாக்சிகளை தங்களது சேவையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க மனித தலையீடு இல்லாமல் இயங்கக் கூடிய வாகனங்களே இவை ஆகும்.
நம்மை, நாம் இருக்கும் இடத்திற்கே வந்து பிக்-அப் செய்வது முதல் நாம் விரும்பும் இடத்திற்குக் கொண்டு சேர்ப்பது வரை என அனைத்தையும் இந்த கார்கள் தானாகவே செய்யும். நாம் உள்ளீடுகளை மட்டுமே எடுத்தால் போதுமானது. மேலும், காரில் ஓர் ஓட்டுநர் இருந்தால் எப்படி சாதூர்யமாக செயல்படுவாரோ அதைப் போலவே இந்த வாகனங்களும் செயல்படும்.

மிக முக்கியமாக டிராஃபிக் சமிக்ஞைகளுக்கு ஒத்துழைப்பது, பயணிகளின் தேவைக்கு ஏற்ப செயல்படுவது என அனைத்தையும் அவை மிக சிறப்பாக செய்யும். இத்தகைய வாகனத்தையே சில முன்னணி நிறுவனங்கள் தங்களின் கால் டாக்சி சேவையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான வாகனங்களே விரைவில் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக சமீப சில காலமாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த தகவல் யாருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்ததோ, இல்லையோ, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியளிக்கும் தகவலாக அது அமைந்தது. பட்டதாரி இளைஞர்கள் தொடங்கி பலர் பிழைப்பிற்காக கால் டாக்சி சேவையில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இவர்களின் பிழைப்புக்கு ஆப்பு வைக்கும் விதமாகவே டிரைவரில்லாமல் இயங்கும் வாகனங்களின் வருகை அமையும் என அஞ்சப்படுகின்றது.

இந்த நிலையிலேயே இந்த அச்சத்தில் இருந்து விடுதலை அளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் ஓர் சூப்பரான தகவலை வெளியிட்டு இருக்கின்றார். சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் டிரைவர் இல்லாமல் இயங்கும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்பதை உறுதிப்படுத்தினார்.
இந்தியாவில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்தவோ, வெளியிடவோ அனுமதிக்க மாட்டோம் என்றே அவர் உறுதிபட கூறி இருக்கின்றார். சமீபத்தில் ஐஐஎம் நாக்பூரில், ஜீரோ மைல் சம்வாத் (Zero Mile Samvaad) எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதற்கு, இந்தியாவில் அதிகரித்து வரும் சாலைப் பாதுகாப்புக் கவலைகள் முக்கிய காரணமாக இருக்கின்றது. அதாவது, இந்தியாவில் சமீப காலமாக வாகனங்களால் அரங்கேறும் விபத்தும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலில் டிரைவரில்லாமல் இயங்கும் வாகனங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது நல்ல யோசனையாக இருக்காது.
இதன் அடிப்படையிலேயே, டிரைவர் இல்லாமல் இயங்கும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்கிற கருத்தை மத்திய அமைச்சர் வெளியிட்டு இருக்கின்றார். பலதரப்பட்ட மக்களுக்கு வேலை அளிக்கும் துறையாக வாடகை வாகன துறை இருக்கின்றது. இந்தமாதிரியான சூழலில் ஓட்டுநர் இல்லா வாகனம் பயன்பாட்டிற்கு வரும் எனில் அது இந்த துறையில் பேரழிவை ஏற்படுத்தக் கூடும்.
முன்னணி கார்பரேட் நிறுவனங்கள் ஓட்டுநருக்கு வழங்கும் தொகையை மிச்சப்படுத்த டிரைவர் இல்லாமல் இயங்கும் வாகனங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து, அதன் வாயிலாக பெரும் தொகையை லாபம் ஈட்ட முயற்சிப்பர். இதனால் பலர் தங்களின் வேலையை இழக்க நேரிடக் கூடும். இந்த நிலையைக் கருத்தில் கொண்டே அரசு டிரைவர் தேவைப்படா வாகனங்களை திட்டவட்டமாக நிராகரித்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றது.
சமீபத்தில்கூட இந்தியாவிலேயே ஓர் நபர் ஓட்டுநர் தேவைப்படாத காரை உருவாக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. கால் டாக்சி துறையில் டிரைவர்களே தேவைப்படாச் சூழலை உருவாக்கும் பொருட்டே அந்த நபர் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினார். கேரளாவைச் சேர்ந்த தொழில்முனைவோரும், ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப நிபுணருமான ரோஷி ஜான் என்பவரே டிரைவர் தேவைப்படாத காரை உருவாக்கியவர் ஆவார்.
இவர் ரோஷாய் எனும் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். டொயோட்டா இன்னோவா காரையே அவர் ஆளில்லாமல் இயங்கும் வாகனமாக உருவாக்கி இருக்கின்றார். இந்த காரை விரைவில் பொது பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதே அவரின் திட்டம். காரில் ஓட்டுநர் இல்லை என்றாலும் அந்த கார் மிகவும் சாதூர்யமாக செயல்படுவதை நம்மால் காண முடிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஓட்டுநர் தேவைப்படா கார்கள் பயன்பாட்டிற்கு வரும் எனில் நிச்சயம் பெரும் எதிர்ப்பை அந்த கார்கள் சந்திக்கக் கூடும். குறிப்பாக, இது கால் டாக்சி டிரைவர்கள் மத்தியிலேயே கடுமையான எதிர்ப்பைச் சந்திக்கும். அதேவேளையில், இந்திய சாலைகளுக்கு சாத்தியமற்றதாகவே இந்த ஓட்டுநர் தேவைப்படா வாகனங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த நிலையிலேயே அரசும் அதன் மன நிலையை இந்த விஷயத்தில் வெளிப்படுத்தி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









