80 லட்சம் டிரைவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அமைச்சர்! இப்ப தான் நிம்மதியா இருப்பாங்க!
உலகம் முழுவதும் டிரைவர் இல்லாமல் இயங்கும் கார் தொழில்நுட்பத்தை அதிகம் வரவேற்கிறார்கள். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த தொழில்நுட்பம் கொண்ட கார் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஏன் டாக்ஸிகள் கூட டிரைவர் இல்லாமல் இயங்கும் வகையில் அந்நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற தொழில்நுட்பத்தை அனுமதிக்க மாட்டோம் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் பேசியுள்ளார். இது தற்போது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இன்று தொழில்நுட்ப வளர்ச்சி பல்வேறு விதமான நன்மைகளை மனித இனத்திற்கு செய்து வருகிறது. இதன்படி ஆட்டோமொபைல் துறையிலும் பல்வேறு விதமான வளர்ச்சிகள் பெற்று வருகிறது. வெளிநாடுகளில் தானியங்கியாக இயங்கும் கார்கள் எல்லாம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. டிரைவரே இல்லாமல் இந்த கார்கள் எல்லாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாதுகாப்பாக சென்று வருகிறது.

இந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில், தற்போது பல நாடுகள் டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்களை தங்கள் நாட்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கி வருகின்றன. இந்நிலையில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது "நான் அமைச்சராக இருக்கும் வரை இந்தியாவில் டிரைவர் இல்லாத கார்களுக்கு அனுமதி வழங்க மாட்டேன்" என பேசியுள்ளார். இவர் இவ்வாறு பேசியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக போக்குவரத்து துறையில் நவீன தொழில்நுட்பங்களை விரும்பக்கூடிய நபராக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறியப்பட்டவர். ஆனால் எதிர்காலத்தில் தானியங்கியாக இயங்கும் கார்கள் தான் மிக அதிக அளவில் விற்பனையாகும் அல்லது பயன்பாட்டிற்கு வரும் என்ற கருத்து பரவலாக இருக்கும் நிலையில், எதிர்கால வளர்ச்சியை அமைச்சர் ஏன் தடுக்கிறார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் மிகப்பெரியதாக எழுந்துள்ளது.

இந்த கேள்விக்கான விளக்கத்தை அவரே அளித்துள்ளார். அதன்படி இந்தியாவிற்குள் தானியங்கியாக இயங்கும் கார்களுக்கான அனுமதி வழங்கப்படாது என தெரிவித்திருந்தார். இதற்கு காரணமாக அவர் "இந்தியாவில் 80 லட்சம் பேர் டிரைவராக பணியாற்றி வருகிறார்கள். இந்த தானியங்கி கார்கள் வரும் பட்சத்தில் 80லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு இன்றி வருமானம் இன்றி தவிக்கும். இதனால் இந்தியாவிற்குள் டிரைவர் இல்லாத கார்களை அனுமதிக்க போவதில்லை" என அவர் பேசியுள்ளார்.
தானியங்கி கார்கள் எல்லாம் சிறிய குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும். பெரிய அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கு இது தேவையில்லாத ஒரு தொழில்நுட்பமாக தான் இருக்கும். இந்தியாவில் 80 லட்சம் பேர் டிரைவர் பணியில் இருக்கிறார்கள் . சில நாடுகளில் ஒட்டுமொத்த மக்கள் தொகையே இரண்டு முதல் நான்கு கோடி வரை தான் இருக்கிறது.

அப்படியான நாடுகளில் டிரைவர் பற்றாக்குறை இருக்கும். அவர்கள் டிரைவர் இல்லா கார்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்வார்கள். இந்தியா போன்ற நாடுகளுக்கு இது தேவை இல்லை என அவர் பேசி உள்ளார். இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மத்திய அரசு தானியங்கி கார்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தை இந்தியாவிற்குள் வாகனத்தை தயாரிக்க அழைப்பு விடுத்து வருகிறது.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருவதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வதில் பல்வேறு வரி சலுகைகளை வேறு அறிவித்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதமே டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மாஸ்க் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நேரில் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த சந்திப்பை கடைசி நேரத்தில் எலான் மஸ்க் ரத்து செய்தார்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்குள் வரும் பட்சத்தில் இந்தியாவில் நிறுவனம் தானியங்கி முறையில் இயங்கும் வாகனங்களையே தயாரிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படியான பட்சத்தில் இந்நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் வாகனங்களை வெளிநாட்டுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யுமா? அல்லது இந்தியாவிற்குள் தானியங்கி முறையில் இல்லாத மேனுவல் முறையிலான வாகனங்களை மட்டும் தயாரித்து விற்பனை செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழில் நுட்ப வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக இருக்கிறது. டிரைவர் இல்லா கார்கள் வந்தாலும் டிரைவர்களின் பணி முழுமையாக போய்விடும் என்ற கருத்து முற்றிலும் பொய்யானது. அனைத்து செக்மெண்டிலும் டிரைவர் இல்லாத தொழில்நுட்பம் என்பது பயன்பாட்டுக்கு வருவது தற்போது சாத்தியமில்லை. மத்திய அமைச்சரின் இந்த பேச்சு தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









