லூனா என்னோட முதல் வண்டி.. பெருமையோடு பொதுநிகழ்வில் கூறிய மத்திய அமைச்சர்! அதை அவருக்கு வாங்கி கொடுத்தது யாரு?
கைனெட்டிக் கிரீன் (Kinetic Green) நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இ-லூனா எலெக்ட்ரிக் மொபட் (eLuna Electric Mopet)டை சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த வாகன அறிமுக நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த வாகனத்தின் இந்திய வருகை நாட்டின் மின்சார இரண்டு சக்கர வாகன உலகின் வரலாற்று சிறப்புமிக்க நாளாக பார்க்கப்படுகின்றது. மேலும், கைனெட்டிக் கிரீன் இ-லூனாவின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட முக்கிய பிரமுககர்களில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் ஒருவர் ஆவார்.

இந்த நிகழ்ச்ச்சியில் கலந்துக் கொண்ட அவர், அவருடைய கடந்த கால நினைவுகள் சிலவற்றை பகிர்ந்துக் கொண்டார். அந்தவகையில், அவருடைய முதல் வாகனம் பற்றிய தகவலையும் அவர் பகிர்ந்துக் கொண்டார். லூனாவையே மத்திய அமைச்சர் பயன்படுத்தி இருக்கின்றார். இதுவே அவருடைய முதல் வாகனம்.
1970 மற்றும் 80களில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய இரண்டு சக்கர வாகன மாடல்களில் லூனாவும் ஒன்றாகும். பலருக்கு மாருதி சுஸுகி ஆல்டோ எப்படி முதல் காரோ, அதுபோல் ஏகப்பட்டவர்களின் முதல் இரண்டு சக்கர வாகனமாக லூனாவே இருக்கின்றது. அந்தவகையிலேயே மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும் முதல் வாகனமாக லூனாவே இருக்கின்றது.
இந்த நினைவுகளையே இ-லூனாவின் அறிமுகத்தின் போது அவர் பகிர்ந்துக் கொண்டார். மேலும், புதிய லூனாவை பார்க்கும்போது அவருக்கு அந்த பழைய நாட்கள் ஞாபகம் வந்ததாகவும் தெரிவித்து இருக்கின்றார். அவருக்கு லூனாவை அவருடைய அம்மாவே பரிசாக வாங்கிக் கொடுத்திருக்கின்றார். மிகவும் விலை குறைவான மொபட் மற்றும் இயக்க செலவும் பெரிய அளவில் வழங்காத ஓர் மொபட்டே இதுவாகும்.
இதனாலேயே அந்த காலகட்டத்தில் பலரின் பிரியமான வாகனமாக அது இருந்திருக்கின்றது. இந்த காரணங்களுக்காகவே அமைச்சரின் அம்மாவும் லூனாவை அவருக்கு வாங்கிக் கொடுத்திருக்கின்றார். இப்போதும் இந்த வாகனம் குறைவான விலைக் கொண்ட எலெக்ட்ரிக் டூ-வீலராகவே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இது இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.
ரூ. 69,990 தொடங்கி ரூ. 75 ஆயிரம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 50 கிமீ ஆகும். இந்த சிறந்த வேக திறனுக்காக 2.2 kW திறன் கொண்ட மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. பேட்டரி பேக்கை பொருத்த வரை மூன்று விதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றன.
1.2 kWh, 2 kWh மற்றும் 3 kWh தேர்வுகளே வழங்கப்படுகின்றன. இ-லூனாவின் ரேஞ்ஜ் திறன் 110 கிமீ - 150 கிமீட்டராக உள்ளது. இதை ஒரு கிமீ இயக்க வெறும் 10 பைசா மட்டுமே ஆகும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. மேலும், புதிய எலெக்ட்ரிக் லூனாவை ஃபேமிலி வாகனம் மற்று சரக்கை ஏற்றி செல்லும் வாகனம் என இரண்டாகவும் பயன்படுத்திக்க முடியும்.
இதேபோல், தொழில்நுட்ப வசதிகளும் மிக அதிகளவில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், பெரிய டிஜிட்டல் திரை, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், டெலிஸ்கோபிக் ஃபோர்க், 16 அங்குல ஒயர் ஸ்போக் வீல்கள் மற்றும் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. மூன்று விதமான மோட்கள் இதன் இயக்கத்தை மேலும் சுவாரஷ்யமானதாக மாற்றும் விதமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா வாகன உலகை வேற லெவலுக்கு மேம்படுத்தியதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பங்கு மிகப் பெரியது. சாலைகளை கட்டமைப்பதிலும், போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதையுமே இவர் முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றார். இதேபோல், வாகனங்களில் சீட் பெல்ட், ஏர்பேக் போன்றவையும் இவரின் முயற்சியாலேயே கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








