ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல... 5 கோடி வேலை வாய்ப்புகள்!! மத்திய அமைச்சர் ஆணித்தனமாக கூறுகிறார்!
இந்தியாவில் எதிர்காலத்தில் சுமார் 1 கோடி எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு வரும் என மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும், 2030ஆம் ஆண்டிற்குள் இதன் மூலமாக ஏறக்குறைய 5 கோடி வேலை வாய்ப்புகள் நாட்டில் ஏற்படும் என வேலைத்தேடி வரும் இளைஞர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார்.
தற்போதைய பெட்ரோல்/ டீசல் வாகனங்களில் இருந்து நாம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை. மத்திய அரசாங்கமும் நாட்டின் செலவீனங்களை குறைக்க கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க போராடி வருகிறது. பெட்ரோல்/ டீசல் வாகனங்களுக்கு பதிலாக மாற்று எரிபொருள் வாகனங்களை கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு உள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்கள் சிறந்தவையாக இருக்கும் என்பது அரசின் நம்பிக்கை. இதனால்தான், எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு திட்டம் வகுத்து மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆதலால், நமது எதிர்கால போக்குவரத்து எலக்ட்ரிக் வாகனங்களை சார்ந்தே இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
இந்த நிலையில், மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் ஒரு சமயத்தில், வருடத்திற்கு 1 கோடி எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகும் சூழல் இருக்குமென தெரிவித்துள்ளார். இதன் மூலமாக, சுமார் 5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் மத்திய அமைச்சர் கணித்துள்ளார்.

தொடர்ந்து 8 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இவி எக்ஸ்போவின் 2023ஆம் ஆண்டிற்கான கண்காட்சியில் சமீபத்தில் கலந்துக் கொண்ட போது இதுகுறித்து மேலும் பேசிய மத்திய அமைச்சர், "வாஹன் (Vahan)-இல் உள்ள தகவல்களின்படி, இப்போது வரையில் 34.54 இலட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் ஏற்கனவே இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு விட்டன" என்றார்.
எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் துறையில் உலகின் மிக பெரிய சந்தையாக இந்தியா விளங்கும் என்பதை ஆணித்தனமாக நம்பும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இதனை பல மேடைகளில் தெரிவித்துள்ளார். இந்தியா தனக்கு தேவையான வாகனங்களை தானே உற்பத்தி செய்துக் கொள்ளும் அளவிற்கு திறன் கொண்டதாக உள்ளதாக அமைச்சர் தெரிவித்து வருகிறார்.

தூய்மையான எனர்ஜி நாடு முழுவதும் பரவலாக பயன்படுத்துவதாக கூறும் அமைச்சர் நிதின் கட்கரி, தற்போதைய மாசு உமிழ்வை ஏற்படுத்தும் கார்களில் இருந்து ஹைப்ரீட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவிக்கிறார். சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்படும் வாகனங்களில் இருந்து, பப்ளிக் டிரான்ஸ்போர்ட் மற்றும் ஏற்றுமதி & இறக்குமதி சேவைகளில் பயன்படுத்தப்படும் கமர்ஷியல் வாகனங்கள் வரையில் எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவர வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது.
இதற்கேற்ப, இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை 2023 ஏப்ரல்- நவம்பர் மாதத்தில் சுமார் 50% அதிகரித்துள்ளது. இந்த 8 மாதங்களில் சுமார் 13 இலட்சத்து 87,114 எலக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 56% எலக்ட்ரிக் 2-வீலர்கள் மற்றும் 38% எலக்ட்ரிக் 3-வீலர்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புள்ளி விபரங்களின்படி பார்க்கும்போது, இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரின் விருப்பம் தற்போதைக்கு 2-வீலர்கள் பக்கமே உள்ளது. பெரும் தொகையை கொடுத்து, எலக்ட்ரிக் 4-வீலர்களை தைரியமாக வாங்கும் அளவிற்கு இன்னும் நம் நாட்டில் நிறைய பேர் தயாராகவில்லை என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. முறையான சார்ஜிங் உள்கட்டமைப்பை கொண்டுவந்தால், இந்த எண்ணிக்கையை உயர்த்த முடியும்.


Click it and Unblock the Notifications









