இந்த சின்ன வயதில் பைக் ரேசிங்கில் இருந்து அரசியல் வரை... திமுகவால் கரையேற்றி விடப்பட்ட பைக் ரேசருடன் நேர்காணல்
நிவேதா ஜெசிகா (Nivetha Jessica), திமுக கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு துறையின் மாநில துணை செயலாளராக இருப்பவர். அதுமட்டுமின்றி, மகளிர் மோட்டார்ஸ்போர்ட் சங்கத்தின் தலைவர், புரோ ஸ்பீடுரேசிங் (Pro Speedracing) குழுவின் முதல்வர் மற்றும் நிஃப்டி ஸ்போர்ட்ஸ் (Nifty Sports) அமைப்பின் நிறுவனர் என பல பொறுப்புகளில் எப்போதும் பிசியாக இருப்பவர்.
நிவேதா ஜெசிகாவை இவ்வளவு தூரத்திற்கு கொண்டுவந்தது, அவருக்கு சிறு வயது முதலே இருந்த பைக் ஓட்டும் ஆர்வம் ஆகும். ஜெசிகா, இந்திய தேசிய மோட்டார்சைக்கிள் பந்தயங்களில் பதக்கம் வென்ற அனுபவமிக்க பெண் பைக் ரேசர் ஆவார். மோட்டார்சைக்கிள்கள் மட்டுமின்றி, கார் ஓட்டுவதிலும் இவர் கைத்தேர்ந்தவர். இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் நடைபெற்ற இரவு ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் நிவேதா ஜெசிகாவும் பங்கேற்றார்.

இந்த அளவிற்கு இளம் வயதிலேயே இத்தனை சாதனைகளை படைத்துள்ள நிவேதா ஜெசிகா சமீபத்தில் நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் நேர்காணலில் கலந்துக் கொண்டார். சுவாரஸ்யமாக நடந்த அந்த கலந்துரையாடலில் பல கலகலப்பான கேள்விகளுக்கு நிவேதா ஜெசிகா தன் மனம் திறந்து பதிலளித்தார். அந்த கேள்வி, பதில்களாவன...
கேள்வி: உங்களுக்கு முதன்முதலில் பைக் ரேசிங், மோட்டார்ஸ்போர்ட் மீதான ஆர்வம் எப்படி வந்தது?
நிவேதா ஜெசிகா: எல்லாருக்கும் இளம் பருவத்தில்தான் பைக் ஓட்டுவதில் ஆர்வம் அதிகமாக வரும். 14- 15 வயதில் பைக் ஓட்ட கற்றுக் கொள்வதை போல, அப்படி தான் எனக்கும் தெருவில் பைக் ஓட்டும் ஆர்வம் வந்தது. பெண்கள் என்றால் ஸ்கூட்டர் கற்றுக் கொள்வார்கள். ஆனால், நான் அப்படி இல்லை நானும் பைக் ஓட்ட முயற்சிக்கனும்னு... ஒரு சின்ன மாற்றம் தான். நாமும் பைக் ஓட்டலாமே... பெண்கள் ஏன் பைக் ஓட்ட கூடாது?னு கேள்வியுடன் ஒரு மைண்ட்-செட் வந்தது. அப்போது கிடைத்த ஒரு ஸ்பார்க் தான்... அப்போதில் இருந்தே பைக் ஓட்ட ஆரம்பித்துவிட்டேன்.
கேள்வி: பைக் ஓட்ட ஆரம்பித்த பிறகு அது எப்படி ரேசிங் களத்திற்கு மாறியது?
நிவேதா ஜெசிகா: சின்ன வயதில் இருந்தே விளையாட்டுகளில் பங்கேற்கனும் ஒரு ஆர்வம் இருந்தது. வெற்றி பெற வேண்டுமென்று இல்லை, அதில் எப்படியாவது கலந்துக் கொண்டு முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இருப்பினும், அப்போது இருந்த எனது பொருளாதார நிலையால், குறிப்பிட்டு ஒரு விளையாட்டு துறையில் நன்கு பயிற்சி பெற்று அதை தேர்வு செய்து பயணிக்க முடியவில்லை. பின்னர் 17 வயதில் கல்லூரியில் சேர்ந்த பின்னர் பைக் ஓட்டுவதன் மூலம் சிலர் என்னுடன் இணைந்தனர். சரியாக அந்த நேரத்தில்தான் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் வேகமாக பரவ ஆரம்பித்ததால், அதன் மூலம் பைக் பந்தயங்கள் தகவல்களை பெற்று எனது கேரியரை ஆரம்பித்தேன்.
கேள்வி: உங்களுடையே முதல் பைக் மற்றும் முழுமையாக முதல் பைக் ஓட்டிய அனுபவம் ஞாபகம் உள்ளதா?
நிவேதா ஜெசிகா: ஆம் இருக்கு. முதல்முறையாக நானே பைக்கை நீண்ட தூரத்திற்கு ஓட்டி சென்ற இடம், ஏற்காடு. எனது முதல் பைக் ராயல் என்பீல்டு 350. அப்போதுதான் முதல்முறையாக நான் சரியான கியர் மற்றும் ரைடிங் ஜாக்கெட்டுகளுடன் மலைப்பகுதியில் பைக் ஓட்டினேன். அப்போது குழுவாக சென்றதில் நான் மட்டுமே பெண் பைக் ஓட்டுநர் என்பதால், மலைப்பகுதியில் பைக் ஓட்டுவது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது என் இளமைப் பருவம் என்பதால் பயம் இல்லை. நம்பிக்கையும், விடாமுயற்சியும், விழக்கூடாது என்ற உறுதியும் நிறைந்திருந்தது. நானே ஓட்டிச் செல்லக் கற்றுக்கொண்டு, அந்தப் பயணத்தை நிறைவு செய்தேன்.
கேள்வி: பதினாறு வயதிலேயே பைக் ஓட்டத் தொடங்கி, விரைவிலேயே சாலைகளில் இருந்து சர்க்யூட் ரேசிங்கிற்கு மாறியது எப்படி இருந்தது? டர்ட் ரேஸ்கள் முதல் தேசிய சர்க்யூட் ரேசிங் சாம்பியன்ஷிப்புகள் வரையில் என வெவ்வேறு பிரிவுகளுக்கு மாறும்போது உங்களது மனநிலை எப்படி இருந்தது?
நிவேதா ஜெசிகா: இதில் முக்கியமான விஷயம் ஒழுக்கமும் கவனமும்தான். இவை அனைத்தும் பந்தயத்தின் கீழ் வருகின்றன. நிலப்பரப்பும் பைக்கும் மட்டுமே வேறுபடும். சர்க்யூட் பந்தய வீரர்கள் கூட சமநிலை திறன்களைக் கற்றுக்கொள்ள ஆஃப்-ரோடு பைக் பயிற்சி செய்கிறார்கள்.

அந்த பயிற்சிகளுடன் சர்க்யூட் பந்தயத்தில் பங்கேற்கும்போது, நாம் வேகமாக செயல்படுவோம், நமது சமநிலை திறன்கள் முன்னைவிட மேம்பட்டிருக்கும். டிராக் ரேசிங் (Drag Racing) ஆனது சர்க்யூட் ரேசிங்கைப் போன்றது. முழுப் பாதையிலும் பைக் ஓட்டத் தேவையில்லை. ஒரு சிறிய தூரத்திற்கு மட்டுமே அவை வரையறுக்கப்படுகிறது. இது எளிதாகத் தோன்றலாம், ஆனால் கியர் மாற்றுவதிலும் நேரத்திலும் ஒரு நிமிடம்-வினாடி தாமதம் ஏற்பட்டால் பந்தயத்தில் இருந்து வெளியேறிவிடுவோம். கவனமாகவும், ஒழுக்கத்துடனும் இருந்தால் மூன்று பந்தயங்களிலும் தொடர்ந்து ஈடுபடலாம்.
கேள்வி: 2019-ம் ஆண்டு ஐ.என்.எம்.சி (INMC) சீசனில் நாட்டின் சிறந்த பைக் ஓட்டுநர்களில் ஒருவராக இடம்பிடித்தீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?
நிவேதா ஜெசிகா: 2019 எனது மிகப்பெரிய மறுபிரவேச ஆண்டாக இருந்தது. ஏனெனில் அந்த ஆண்டு டிராக் மற்றும் சர்க்யூட் ரேசிங் என இரண்டிலும் நான் இரண்டு சாம்பியன்ஷிப்களை வென்றேன். 2019 வரை, இது ஒரு செலவுமிக்க விளையாட்டு என்பதால் நிதி ரீதியாக சிரமப்பட்டேன். 2019இல் நடந்தது, முதல் மகளிர் பந்தயப் போட்டியாகவும் இருந்தது. இரண்டு பட்டங்களை வென்றது ஒரு சிறந்த சாதனை. நான் வென்று ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் எனக்கு அது நம்ப முடியாததாகவே தோன்றுகிறது.
கேள்வி: கடுமையான விபத்துக்குப் பிறகு தேசிய டிராக் சாம்பியன்ஷிப்பை வெல்ல மீண்டும் களமிறங்கினீர்கள். விபத்துக்குப் பிறகு பந்தயத்திற்கான உங்களது அணுகுமுறையில் என்ன மாற்றம் ஏற்பட்டது?
நிவேதா ஜெசிகா: பந்தயங்களில் கலந்துக் கொள்வதற்கான நிதி திரட்டுவதுடன், பந்தயத்தில் இது கடினமான பகுதியாக இருந்தது. பொதுவாகவே, கடுமையான விபத்துக்குப் பிறகு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் போராட்டங்களைச் சந்திப்போம். 2018-ல் பல எலும்பு முறிவுகளுடன் தேசிய டிராக் சாம்பியன்ஷிப்பை நான் எதிர்கொண்டேன். ஆனால் எனது மன உறுதியும், மன வலிமையும்தான் நான் குணமடைந்து மீண்டும் பந்தயத்திற்கு வர உதவின.
கேள்வி: டர்ட் ரேசிங், டிராக் ரேசிங், சர்க்யூட் ரேசிங் - இவை ஒவ்வொன்றிற்கும் பைக் ஓட்டும் பாணியில் தனித்தனி மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இதில் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவாலானது எது என்று நினைக்கிறீர்கள்?
நிவேதா ஜெசிகா: சர்க்யூட் ரேசிங் தார் சாலைகளில் நடக்கிறது. அதனால் பிரேக்கிங் மற்றும் பைக் சாய்வது வேறுபடும். ஆஃப்-ரோடிங்கிற்கு பைக் ஓட்டும் பாணி வேறுபட்டது. வாகனத்தை முன்பக்கத்தில் இருந்து மேலும் சமநிலைப்படுத்த வேண்டும். ஆஃப்-ரோடிங் மற்றும் சர்க்யூட் ரேசிங் இரண்டும் சில சமயங்களில் சவாலானவை. எனக்கு இரண்டும் பிடிக்கும். ஆனால் இரண்டையும் ஒப்பிட்டு, 'உங்களுக்குப் பிடித்தது எது?' என்று கேட்டால், சர்க்யூட் ரேசிங்கைத் தேர்ந்தெடுப்பேன்.
கேள்வி: 2017-ம் ஆண்டு ரைடர் மேனியாவில், 500சிசி பைக் பிரிவு பந்தயத்தை முதல் 3 இடங்களுக்குள் நிறைவு செய்த முதல் தென்னிந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றது எப்படி இருந்தது?
நிவேதா ஜெசிகா: அது ஒரு பெருமைமிக்க உணர்வு. அப்போது நான் வெறும் 41- 42 கிலோ எடையில் இருந்தேன். 500சிசி ஆஃப்-ரோடு பைக்கை ஓட்டுவது நம்ப முடியாததாக இருந்தது. எனது தொழில்நுட்ப ஆலோசகர் தர்மபுரியைச் சேர்ந்த உஸ்மான் எனக்கு ஆதரவளித்தார். சவாலை எதிர்கொள்ள அவர் தான் என்னை ஊக்கப்படுத்தினார். ஆஃப்-ரோடு பயிற்சிக்கு நான் சென்னையில் இருந்து தர்மபுரிக்குச் சென்றேன். ஒரு நாள் பயிற்சிக்குப் பிறகு, நாங்கள் பைக்கிலேயே கோவா சென்று பந்தயத்தில் வெற்றி பெற்றோம்.

கேள்வி: பந்தயத்திற்கு முன் பைக்கை செட்அப் செய்வதில் எந்த அளவிற்கு ஈடுபட்டுள்ளீர்கள்?
நிவேதா ஜெசிகா: பைக் செட்அப் ஆனது பந்தய பிரிவுகளுக்கு ஏற்ப மாறுபடும். ஆஃப்-ரோடிங்கிற்கு, எக்ஸ்பல்ஸ் மற்றும் ராயல் என்பீல்டு போன்ற பைக்குகளை வெவ்வேறு டயர்கள், ஸ்ப்ராக்கெட்டுகள் உடன் பயன்படுத்துகிறோம். சர்க்யூட் ரேசிங்கிற்கு, சில தொழில்நுட்ப மாற்றங்களுடன் ஆர்15 பயன்படுத்துகிறோம்.
கேள்வி: உங்கள் பயிற்சி முறை எப்படி இருக்கும்? பயிற்சி ஓட்டங்களில் இருந்து பந்தய நாள் வரை அது எவ்வாறு வேறுபடுகிறது?
நிவேதா ஜெசிகா: போட்டிக்காக நாம், நம்மை நாமே ஒப்பிட வேண்டும். எல்லோரும் வெவ்வேறு பின்னணியில் வெவ்வேறான பொருளாதார சூழலில் இருந்து வருகிறார்கள். நாம் மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடவோ அல்லது நம்மைத் தாழ்த்திக்கொள்ளவோ கூடாது. நாம் நமது திறனைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். நம்மை நாமே ஊக்குவிக்க வேண்டும், நமது வசதியான இடத்தில் இருந்து வெளியே வர வேண்டும், சுய ஊக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
கேள்வி: உங்களது ரைடிங் கேரியரின் போது இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் பந்தயங்களில் நீங்கள் கண்ட மாற்றங்கள் என்ன? குறிப்பாக பெண் பைக் ஓட்டுநர்களின் திறன், உள்கட்டமைப்பு மற்றும் மனப்பான்மையில் நீங்கள் கண்ட மாற்றங்கள் என்ன?
நிவேதா ஜெசிகா: பைக் ஓட்டுநர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் மற்றும் நிதி பெறுவது முக்கியம். நான் பந்தயத்தைத் தொடங்கியபோது, பந்தய களங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால் மோட்டார்ஸ்போர்ட்ஸில் பெண்களுக்கு எந்த உதவியும் இல்லை.
ஆனால் இப்போது அது மாறிவிட்டது. டி.வி.எஸ் போன்ற பல பிராண்டுகள் பந்தய வீரர்களுக்கு ஆதரவளிக்க முன்வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், அவர்கள் பந்தயங்களை நடத்தி, குறைந்த நுழைவுக் கட்டணத்தில் பைக்குகள் மற்றும் எரிபொருளை வழங்குகிறார்கள். ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு அது அப்படி இல்லை. குறிப்பாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மூலம் தமிழக அரசு அளிக்கும் ஆதரவையும் நான் பாராட்டுகிறேன். அவர் எந்த நேரத்திலும் அணுகக்கூடியவராகவும், பந்தய வீரர்களுக்கு நிதி ரீதியாக உதவுகிறார்.
கேள்வி: மோட்டார்ஸ்போர்ட் வளர்வதை நேரில் பார்த்தவர் என்ற வகையில், தேசிய அளவில் இந்திய மோட்டார்ஸ்போர்ட் அடுத்த கட்டத்திற்குச் செல்ல என்ன தேவை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
நிவேதா ஜெசிகா: அடுத்த கட்டத்திற்குச் செல்ல, நாம் எதாவதொரு ஒற்றைப் பந்தயப் பிரிவில் கவனம் செலுத்தி கடினமாகப் பயிற்சி செய்ய வேண்டும். இந்தியாவில் இது இப்போது மெதுவாக மாறி வருகிறது. பல இளம் குழந்தைகள் மோட்டார்ஸ்போர்ட்ஸில் ஈடுப்படுகிறார்கள். மேலும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பந்தய வீரர்களாக ஊக்குவிக்கிறார்கள். அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில், இந்திய பந்தய வீரர்கள் மோட்டார்ஸ்போர்ட்ஸில் சாம்பியன்களாக நாம் காணக்கூடும்.

கேள்வி: பைக் ஓட்டத் தொடங்கும் அல்லது பைக் ரைடிங் சமூகத்தில் மேலும் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு நீங்கள் என்ன ஆலோசனை கூறுவீர்கள்?
நிவேதா ஜெசிகா: உங்கள் வசதியான இடத்திலிருந்து வெளியே வாருங்கள், கவனம் செலுத்துங்கள், ஒழுக்கத்துடன் இருங்கள், பைக் பந்தயங்களைக் கற்றுக்கொள்ள மன உறுதியுடன் இருங்கள்.
கேள்வி: நீங்கள் மகளிர் மோட்டார்ஸ்போர்ட்ஸ் கிளப்பின் தலைவர். இந்த சங்கத்தின் மிகப்பெரிய சாதனை என்ன? இதில் ஒருவர் எப்படி சேருவது?
நிவேதா ஜெசிகா: எங்கள் மிகப்பெரிய சாதனை ஒரு மகளிர் மோட்டார்ஸ்போர்ட்ஸ் கிளப்பை ஐந்து ஆண்டுகளாக நடத்துவது ஆகும். மோட்டார்ஸ்போர்ட்ஸில் பெண்கள் குறித்த 150-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வுப் பயணங்களை இந்தியா முழுவதும் நடத்தினோம். பெண்களுக்கு பல பொறுப்புகள் இருப்பதால் ஒரு விஷயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவது எளிதல்ல; குறிப்பாக பைக் பந்தயங்களில். யார் வேண்டுமானாலும் எங்கள் கிளப்பில் சேரலாம். எங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் வலைத்தளங்களில் ஒரு படிவம் உள்ளது.
கேள்வி: இறுதியாக, உங்கள் அடுத்த இலக்கு என்ன? ஏதேனும் குறிப்பிட்ட சாம்பியன்ஷிப் அல்லது ரைடிங் இலக்கை நீங்கள் துரத்துகிறீர்களா?
நிவேதா ஜெசிகா: நான் மிகவும் மூடநம்பிக்கை கொண்டவள் என்பதால் எதையும் வெளிப்படுத்த விரும்பவில்லை. ஆனால், பைக் ரைடிங், பந்தயம் மற்றும் அரசியல் உட்பட அனைத்திற்கும் சில பெரிய திட்டங்களை வைத்திருக்கிறேன். அந்த இலக்குகளை அடைந்தவுடன், நான் அவற்றை வெளிப்படுத்துவேன்.
திமுக கட்சி உடன் இணைந்து செயல்பட்டுவரும் நிவேதா ஜெசிகா, கடந்த சில வருடங்களாகவே அரசியல் செயல்பாடுகளில் அதிகம் ஈடுப்பட்டு வருகிறார். அதற்கேற்ப, பைக் & கார் பந்தயங்களில் கலந்துக் கொள்வதை சற்று குறைத்துக் கொண்டுள்ளதால், நிவேதா ஜெசிகா முழுமையாக அரசியலில் கவனம் செலுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது போலவே தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்து, ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த மோட்டார்ஸ்போர்ட் துறையில் சாதித்து, அடுத்ததாக அரசியல் பிரவேசத்திற்கும் தயாராகுவது என்பது உண்மையில் சவாலான விஷயமாகும். ஆனால், அதனை நிவேதா ஜெசிகா எளிமையாக சாத்தியப்படுத்தி வருகிறார். இந்த அளவிற்கு இளம் வயதிலேயே சாதித்தவரை நேர்காணல் எடுத்ததில் டிரைவ்ஸ்பார்க் பெருமை கொள்கிறது.


Click it and Unblock the Notifications









