ஏசி எல்லாம் போட முடியாது! ஓலா, உபேர் டிரைவர்கள் எடுத்த அதிரடி முடிவு!என்ன காரணம் தெரியுமா?
இனி ஓலா,உபேர்,ரேபிடோ போன்ற ஆப் மூலம் கார் ஓட்டும் ஓட்டுநர்கள் இனி காரில் ஏசி போட்டு காரை ஓட்ட மாட்டோம் என புதிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளனர். தங்களுக்கு நிறுவனங்கள் அளிக்கும் கமிஷன் தொகை போதவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதற்காக அவர்கள் கூறும் விளக்கமான காரணம் என்ன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இன்று பெருநகரங்களில் ஓலா,உபேர் ரேப்பிடோ போன்ற ஆப் மூலம் வாகனங்களை புக் செய்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இதனால் இந்த ஆப் மூலம் தங்கள் வாகனங்களை இணைத்து டிரைவர்கள் வாகனங்களை ஓட்டி வருகிறார்கள். இன்று ஆயிரக்கணக்கான டிரைவர்களின் வாழ்வாதாரமாக இந்த கேப் சேவை தான் இருக்கிறது. வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை பெற்று அதில் தனக்கென கமிஷனை எடுத்துக்கொண்டு பாக்கி பணத்தை டிரைவர்களிடம் இந்த கேப் சேவை நிறுவனங்கள் ஒப்படைக்கின்றன.

இந்நிலையில் இப்படியாக கேப் மூலம் வாகனங்களை இயக்கி வரும் வாகன ஓட்டுநர்கள் தெலுங்கானா மாநிலத்தில் சங்கம் ஒன்றை அமைத்துள்ளனர். அதன்படி தெலுங்கானா கிக் மற்றும் பிளாட்பார்ம் ஊழியர்கள் சங்கம் என அந்த சங்கத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சங்கம் சார்பில் தற்போது புதிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த சங்கத்தில் உள்ள ஓட்டுநர்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும்போது தங்கள் கேப்களில் ஏசியை ஆன் செய்ய மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சங்கம் அளித்த விளக்கத்தின்படி தற்போது ஒரு காரில் ஏசியை ஆன் செய்து கேப் சேவையை வழங்கினால் ஒரு கிலோமீட்டர் பயணிக்க 16 முதல் 18 ரூபாய் வரை செலவாகிறது.
ஆனால் இந்த சேவைக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து நேரடியாக பணம் பெறும் ஓலா,உபேர் போன்ற நிறுவனங்கள் தங்கள் கமிஷன் போக ஒரு கிலோமீட்டருக்கு 10 முதல் 12 ரூபாய் என கணக்கிட்டு வழங்குகிறார்கள். இது நஷ்டத்தை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் இனி ஏசியை ஆன் செய்யாமல் பயணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் அளித்த அறிக்கையில்: "தற்போது ஏசி போட்டு பயணம் செய்தால் வாகனத்தை ஓட்டுவதற்கு எவ்வளவு செலவாகுமோ அவ்வளவு பணம் மட்டுமே கிடைக்கிறது. டிரைவருக்கு லாபமாக ஒரு ரூபாய் கூட கிடைப்பதில்லை. இன்று பைக்,டேக்ஸி மற்றும் ஆட்டோக்களும் இந்த கேப் சேவையில் வந்துவிட்டன. இந்த சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள் கேப் சேவைக்கும் ஆட்டோவிற்கும் பணம் நிர்ணயம் செய்யும் அல்ஹாரிதத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.
பல நேரங்களில் ஆட்டோ,பைக் சேவைகளுக்கு நிர்ணயம் செய்யப்படும் தொகையை விட கேப் சேவைக்கு நிர்ணயம் செய்யப்படும் தொகை குறைவாக இருக்கிறது. இது எப்படி நிகழ்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் எங்களிடம் நஷ்டம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இனி வாடிக்கையாளர்களுக்கு ஏசி போட்டு பயணம் செய்ய இயலாது." என சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கத்தினர் இந்த பிரச்சனை குறித்து ஏற்கனவே தெலுங்கானா மாநில அரசுக்கும் கேப் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் பல்வேறு முறை புகார் அளித்தும் கோரிக்கை விடுத்தும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடை காலத்தில் வாகனங்களில் பயணிக்கும் பலர் கட்டாயம் ஏசியை ஆன் செய்து பயணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கேப் சேவையை புக் செய்வார்கள். ஆனால் கேப் ஓட்டுநர்கள் இப்படியாக செலவை குறைப்பதற்கு ஏசி ஆப் செய்வது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இந்த பிரச்சினையை கேப் சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் ஓட்டுநர்கள் பேசி சரி செய்து கொள்ள வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆப் மூலம் கேப் சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் சேவையில் வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு சரியாக பணம் கொடுப்பதில்லை அல்லது குறைவாக பணம் கொடுக்கிறார்கள் என்ற புகார் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது0 இந்த பிரச்சனையை கேப் சேவை வழங்கும் நிறுவனங்கள் சரி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் பொதுமக்களுக்கு நிம்மதியான பயணம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








