அடுத்த வருஷத்துல இருந்து பெட்ரோல் டூவீலர்களுக்கு தடை விதிக்க போறாங்களா... வெளியானது அதிரடி அறிவிப்பு...
இந்தியாவில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதற்கு பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) மூலமாக இயங்கும் வாகனங்கள் மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகின்றன. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக, எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளும், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கும் முயற்சிகளை மிக தீவிரமாக எடுத்து வருகின்றன.
இதற்காக எலெக்ட்ரிக் வாகன கொள்கைகள் (EV Policy) அமலுக்கு கொண்டு வரப்பட்டு, தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகளை மாநில அரசுகள் வழங்கி கொண்டுள்ளன. பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை இந்த சலுகைகள் எளிமையாக்கியுள்ளன.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன கொள்கை தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வரும் மாநிலங்களில் டெல்லியும் (Delhi) ஒன்றாகும். இந்தியாவிலேயே காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் டெல்லி முக்கியமான ஒன்றாக உள்ளது. எனவே அங்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறுவதை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை (AAP - Aam Aadmi Party) வீழ்த்தி, பாஜக (BJP) சமீபத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்றது. அக்கட்சியை சேர்ந்த ரேகா குப்தா (Rekha Gupta) முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார். பாஜக பதவியேற்றது முதலே, காற்று மாசுபாடு பிரச்னை தங்கள் முன் சவாலான ஒன்றாக இருப்பதாக தெரிவித்து வருகிறது.

அத்துடன் காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வருவோம் எனவும் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக டெல்லி மாநில அரசு தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி டெல்லியில் தற்போது செயல்பாட்டில் உள்ள எலெக்ட்ரிக் வாகன கொள்கை, 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கையை அமலுக்கு கொண்டு வரும் பணிகள் ஒரு பக்கம் நடந்து வருகின்றன. இருப்பினும் அந்த கொள்கை அமலுக்கு வரும் வரை, 3 மாதங்களுக்கு, தற்போது செயல்பாட்டில் உள்ள எலெக்ட்ரிக் வாகன கொள்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றையும் டெல்லி அரசு வெளியிட்டுள்ளது.
எலெக்ட்ரிக் வாகன கொள்கை 2.0 அமலுக்கு வராது என்பதுதான் அந்த அறிவிப்பு. எலெக்ட்ரிக் வாகன கொள்கை 2.0-ல் பரிந்துரைக்கப்பட்டிருந்த விஷயங்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. அதாவது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியில் இருந்து, பெட்ரோலில் இயங்கும் டூவீலர்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட வேண்டும் என எலெக்ட்ரிக் வாகன கொள்கை 2.0-ல் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
தற்போது அது அமலுக்கு வராது என்பதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். டெல்லியில் பெட்ரோல் மூலமாக இயங்கும் டூவீலர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. அவற்றுக்கு உடனடியாக முற்றிலுமாக தடை விதிப்பது சாத்தியம் இல்லாத ஒன்று. எனவேதான் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியில் இருந்து பெட்ரோல் டூவீலர்களுக்கு தடை விதிக்கப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மத்திய, மாநில அரசுகள் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மூலம், எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் நமது எதிர்காலம் என்பது தெளிவாகிறது. இதன் காரணமாக தற்போதே நிறைய பேர் வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற தொடங்கி விட்டனர்.


Click it and Unblock the Notifications








