புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள மம்தா பானர்ஜிக்கு ஆடம்பரம் என்றால் அலர்ஜி. எளிமையே அவரது வெற்றிப்பாதைக்கு முக்கிய காரணமாக கூறலாம். மத்திய அமைச்சராக ஆன போதும் சாதாரண செருப்புடனும், ஜோல்னா பையுடனும் வந்து கலக்கியவர்.
தற்போது மேற்குவங்கத்தின் முதல்வர் பொறுப்பேற்ற பின்னரும், தனது எளிமையை பின்பற்ற அவர் மறக்கவில்லை. முதல்வராக பொறுப்பேற்றுள்ள மம்தாவுக்கு, இரண்டு புல்லட் புரூப் அம்பாசடர் கார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை பயன்படுத்தப்போவதில்லை என மம்தா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தனது பாதுகாப்புக்காக மக்கள் வரிப்பணத்தை தேவையில்லாமல் செலவிடவேண்டாம் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவும்போட்டுவிட்டாராம். மேலும், எந்த சிறப்பு பாதுகாப்பு வசதியும் இல்லாத தனது பழைய சான்ட்ரோ காரிலேயே கொல்கத்தா நகரில் வலம் வருகிறார்.
நெடுத்தூர பயணங்களுக்கு மட்டும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரை பயன்படுத்துகிறார். மேலும், கொல்கத்தா நகரில் செல்லும்போது, தனக்கு பின்னால் பாதுகாப்புக்காக அணிவகுக்கும் வாகனங்களின் எண்ணி்க்கையையும் முடிந்தவரைகுறைத்துவிடுமாறும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கண்டிப்புடன் தெரிவித்துவிட்டாராம்.
பொதுவாக, பெரிய பதவிகளுக்கு செல்லும் அரசியல்வாதிகள் எதை மாற்றுகிறார்களோ இல்லையோ, முதலில் அந்தஸ்தை வெளிப்படுத்த காஸ்ட்லியான காரை மாற்றுவார்கள். அடுத்து தனக்கு பின்னால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
ஆனால், இதற்கு நேர்மாறான மம்தாவின் எளிமை மக்களை மட்டுமின்றி, அதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறதாம். இவரைப்போன்று, எல்லா அரசியல்வாதிகளும் இருந்தால், தேவையில்லாமல் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படாது என்றும் அவர்கள் முணுமுணுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








