போச்சு... 1-4 வயது குழந்தைகளுக்கும் இரயிலில் டிக்கெட் அவசியமா? என்ன சொல்கிறது இந்திய இரயில்வே நிர்வாகம்
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இரயிலில் பயணிக்க டிக்கெட் எடுக்க வேண்டுமா? என்கிற விஷயத்தில் நீண்ட நாட்களாக ஒருவித குழப்பம் இருந்துவந்த நிலையில், தற்போது அதுகுறித்த அறிவிப்பு ஒன்றை இந்திய இரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

1 வயதிற்கு உட்பட்ட கைக்குழந்தைகளுக்கு இரயில்களில் டிக்கெட் அவசியமில்லை என்பது அறிந்த விஷயமே. இதனை, ஒரு வயதில் இருந்து 4 வயது வரையில், அதாவது 5 வயதிற்கு உள்ளாக உள்ள அனைத்து குழந்தைகளையும் இரயில்களில் இலவசமாக அழைத்து செல்லலாம் என மாற்றி இந்தியன் இரயில்வே நிர்வாகம் கடந்த 2020 மார்ச் 6ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டது.

ஆனால் குழந்தைகளுக்கு என தனியாக படுக்கை வசதியை இலவச டிக்கெட் வாயிலாக பெற முடியாது என அப்போதே அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக 1இல் இருந்து 4 வயதிற்குள்ளான குழந்தைகளுக்கும் இரயிலில் பயணிக்க டிக்கெட் பெற வேண்டும் என்கிற வதந்தி இணையத்தில் பரவிவந்தது.

இந்த பொய்யான செய்தியை நீங்கள் கூட சமூக வலைத்தள பக்கங்களில் பார்த்திருப்பீர்கள். இது இரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்ததை அடுத்து, இதுகுறித்து தனது தெளிவான விளக்கத்தை இந்திய இரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், 1-4 வயது குழந்தைகளுக்கான இரயில் டிக்கெட் விதிமுறைகளில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

அதாவது, 2020 மார்ச் 6ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, 1-4 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை இலவசமாக இரயிலில் அழைத்து செல்லலாம். ஆனால் அவர்களுக்கென தனியாக படுக்கை வசதியை கேட்க இயலாது. குழந்தைகளுக்கும் படுக்கை வசதி தேவை எனில் வழக்கமான கட்டணத்தை செலுத்தி பெற்று கொள்ளலாம் என மீண்டும் இரயில்வே நிர்வாகம் தனது தற்போதைய அறிக்கையில் தெளிவுப்படுத்தி உள்ளது.

இரயில்களில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு படுக்கை வசதியை புக் செய்வது என்பது முற்றிலும் பயணிகளின் விருப்பமே. கட்டாயம் ஒன்றும் அல்ல. ஆதலால் படுக்கையை முன்பதிவு செய்யாமல் தனது படுக்கையில் கூட 5 வயதிற்கு உட்பட்ட குழந்தையை படுக்க வைத்து அழைத்து செல்ல முடியும்.

இவ்வாறு இந்த விஷயத்திற்கு நேரடியாக இந்திய இரயில்வே நிர்வாகமே பதிலளித்து இருப்பதற்கு முக்கிய காரணம், 1-4 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இரயிலில் டிக்கெட்டை பெற வேண்டும் என்ற வதந்தி முக்கிய அரசியல்வாதிகள் உட்பட பிரபலங்களிடம் இருந்து அதிகளவில் வெளிவர துவங்கியதே ஆகும். இவ்வளவு ஏன், சமஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ்யாதவ் கூட இதுகுறித்து பதிவு ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அகிலேஷ் யாதவ்-இன் அந்த டுவிட்டர் பதிவில், "தற்சமயம் ஒரு வயது குழந்தைக்கும் இரயிலில் பயணம் செய்ய கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், கர்ப்ப பெண்களிடம் இருந்து கூடுதல் டிக்கெட்டிற்கான கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இதற்கு நாம் பாஜக அரசாங்கத்திற்கு நன்றி கூற வேண்டும். இரயில்வே நீண்ட காலத்திற்கு ஏழ்மையானவர்களுக்காக இருக்காது.

இனி மக்கள் பாஜக அரசுக்கான தங்களது முழு டிக்கெட்டையும் குறைத்துக் கொள்வார்கள்" என குறிப்பிடப்பட்டு இருந்தது. இவ்வாறு இந்த வதந்தி விஐபி-கள் வாயிலாக வேகமாக இணையத்தள பக்கங்களில் பரவ துவங்கியதை அடுத்தே, மத்திய இரயில்வே துறை தனது விளக்க அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.

எப்படியோ 1இல் 4 வயதிற்கு உள்ளான குழந்தைகளுக்கு இரயில் டிக்கெட் பெற வேண்டியதில்லை என்பது இதன் மூலமாக மீண்டும் உறுதியாகியுள்ளது. அதேபோல், 5இல் இருந்து 12 வயது வரையில் உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு இரயில் பயணிக்க பாதி டிக்கெட், அதாவது பாதி கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டை பெற்று கொண்டாலே போதுமானது. 12 வயதிற்கு மேல் உள்ளவர்களே முழு டிக்கெட்டை பெற்றாக வேண்டும்.


Click it and Unblock the Notifications