டூவீலர் ஓட்றவங்களுக்கு செக்... இப்படி ஒரு அதிரடி உத்தரவை யாருமே எதிர்பாக்கல... இது வேற மாதிரி இருக்கு!
இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணியாதது இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. தமிழகத்தின் கரூர் மாவட்டமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கரூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பலர் ஹெல்மெட் அணிவதில்லை.

நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து தற்போது வரை மட்டும், ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக 75,534 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியத்தை பலமுறை எடுத்துரைத்தாலும், இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பலர் அதனை பொருட்படுத்துவதில்லை என்பதற்கு இந்த புள்ளி விபரம் ஒரு எடுத்துக்காட்டு.

எனவே அபராதத்துடன் நின்று விடாமல் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு கரூர் மாவட்ட நிர்வாகம் தற்போது திட்டமிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு, கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்தார். அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் நிர்வாகங்கள், தொழிற்சாலை நிர்வாகங்கள், அரசு நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் என இந்த கூட்டத்தில் பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி கரூர் மாவட்டத்தில், ஹெல்மெட் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு, அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க் போன்றவற்றில் எந்த ஒரு சேவையும் வழங்கப்படாது. உதாரணத்திற்கு ஹெல்மெட் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் கிடைக்காது.

அதேபோல் ஹெல்மெட் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் வழங்கப்படாது. இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 18ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. அதற்கு பிறகு ஹெல்மெட் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மேலே குறிப்பிட்டுள்ளபடி எந்த சேவையும் கிடைக்காது.

அத்துடன் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் ஒன்றை செய்துள்ளது. இதன்படி ஊழியர்கள் யாராவது ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்தால், அவர்களை பணியாற்ற அனுமதிக்க வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அரசின் உத்தரவிற்காக பெயரளவிற்கு ஏதோ ஒரு ஹெல்மெட்டை அணிவதை தவிர்ப்பது நல்லது.

ஏனெனில் ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய ஹெல்மெட்களை அணிய வேண்டும் என கரூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தரமற்ற ஹெல்மெட்கள் உங்களுக்கு எந்தவித பாதுகாப்பையும் வழங்காது. எனவே எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்தால், தரமான ஹெல்மெட்களை அணிந்திருந்தால் மட்டுமே முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.

இதற்கிடையே இந்த உத்தரவு தொடர்பாக மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கரூர் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அனைத்து பகுதிகளிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படவுள்ளது. அத்துடன் நிறுவனங்களின் முன் பகுதிகளிலும் மக்களுக்கு தெரியும் வகையில், பலகைகள் வைக்கப்படும்.

இந்த அதிரடி உத்தரவு காரணமாக கரூர் மாவட்டத்தில் இனி இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணிபவர்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, அனைத்து பகுதிகளை சேர்ந்தவர்களும், சுய கட்டுப்பாட்டுடன், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணிவது நல்லது. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கு மிக முக்கியமான பாதுகாப்பே ஹெல்மெட்கள்தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








