No Helmet No Petrol தமிழகம் முழுவதும் இதைக் கொண்டு வரனும்! கடலூர் அதிகாரி போட்ட "மாடல்" உத்தரவு!
இந்தியா முழுவதும் டூவீலர் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என மோட்டார் வாகன சட்டம் சொல்கிறது. ஆனால் இந்த விதிமுறை சென்னை போன்ற பெருநகரங்களில் ஓரளவிற்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் கிராமம் மற்றும் சிறு நகரங்களில் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
இதற்காக அவ்வப்போது போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பொழுது ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கின்றனர். ஹெல்மெட் அணியாமல் வந்தவருக்கு ரூ1000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. என்னதான் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தாலும் மக்கள் மத்தியில் ஹெல்மெட் அணிய வேண்டும் என் விழிப்புணர்வு வரவில்லை.

இந்நிலையில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கடலூர் தாலுகா வட்டாட்சியர் விஜய் ஆனந்த் சமீபத்தில் ஒரு உத்தரவைப் போட்டிருந்தார். அது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த நடவடிக்கையால் பலர் அவரை பாராட்டி வருகின்றனர். சமூகவலைத்தளங்களில் இந்த அறிவிப்பு குறித்து தான் மக்கள் அதிகமாக பேசி வருகின்றனர்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிப்பில் கடலூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் பெட்ரோல் பங்க்களில் ஹெல்மெட் அணியாமல் வரும் டூவீலர் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் போடக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். ஹெல்மெட் உடன் வந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதை அறிவிக்கும் வகையில் பெட்ரோல் பங்க்களில் "நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்" என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இப்படியாக ஹெல்மெட் போடாதவர்கள் பெட்ரோல் போடுவதற்காகவாவது ஹெல்மெட் உடன் வருவார்கள் என்பதால் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
இதனால் சாலையில் ஏற்படும் விபத்துக்களில் மரணங்கள் நிகழ்வது குறைவாக இருக்கும். இந்தியாவில் வாகன விபத்தில் உயிரிழந்தவர்களில் டூவீலர்களின் உயிரிழந்தவர்கள் தான் அதிகம். இதைக் கட்டுப்படுத்த குறைந்தபட்ச பாதுகப்பான ஹெல்மெட்டை அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இப்படியாக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்வதில் தடை விதிக்கும் அறிவிப்பு ஒன்றும் புதிது கிடையாது இதற்கு முன்னர் பல இடங்களில் இதற்கான உத்தரவு விதிக்கப்பட்டது. ஆனால் அதை கடைபிடிப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது. சில நாட்கள் கடைபிடிக்கப்படும் நிலையில் மீண்டும் மக்கள் இதையும் மீறி ஹெல்மெட் அணியாமல் தான் வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து என்ன?: டூவீலர் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம். அரசு சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பிற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி பலர் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பத்து வருகின்றனர். இதற்கு இவ்வாறாக நடவடிக்கை நிச்சயம் தேவை. இது இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications








