இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு இனி பெட்ரோல் கிடைக்காதா?- உச்சநீதிமன்றத்தின் அதிரடி பரிந்துரை!!

இந்தியாவில் வாகன இன்சூரன்ஸ் இல்லாமல் சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த உச்சநீதிமன்றம் முக்கியமான பரிந்துரையை முன்வைத்துள்ளது. அதாவது, காலாவதியாகாத மூன்றாம் தரப்பு (Third-Party) இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனையை கட்டுப்படுத்தும் சாத்தியம் குறித்து முன்னோடித் திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தின் நீதிபதி சஞ்சய் கரோல் மற்றும் அகஸ்ட்டின் ஜார்ஜ் மாஷி அடங்கிய அமர்வு விசாரித்தது. அதில், நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்கப்படுகின்றன என்ற தகவலைக் குறிப்பிட்டு கவலை தெரிவித்தது.

Vehicle Insurance

மேலும், நாடாளுமன்றக் குழு அறிக்கையின்படி, நாடுமுழுவதும் உள்ள சுமார் 30 கோடி வாகனங்களில் 16.5 கோடிக்கும் அதிகமான வாகனங்களுக்கு நடப்பில் உள்ள இன்சூரன்ஸ் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற நிலையால் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இதனால், "No Insurance, No Fuel" என்ற திட்டத்தை நேரடியாக அமல்படுத்தாமல், முதலில் சில மாநிலங்கள் அல்லது நகரங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்று காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDA) மற்றும் பொது காப்பீட்டு கவுன்சில் (GIC) ஆகியவற்றிற்கு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இந்த திட்டத்தின் வெற்றி, சவால்கள் மற்றும் நடைமுறை சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.

மேலும், Automatic Number Plate Recognition (ANPR) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வாகனங்களின் பதிவு விவரங்களையும் இன்சூரன்ஸ் தரவுகளையும் இணைத்து தானியங்கி கண்காணிப்பு முறையை உருவாக்கவும் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. இதன் மூலம் இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை எளிதாக அடையாளம் கண்டு மின்னணு அபராதம் விதிக்க முடியும்.

இந்த விசாரணையின்போது மூன்றாம் தரப்பு (Third-Party) வாகன இன்சூரன்ஸின் முக்கியத்துவம் குறித்து உச்சநீதிமன்ற அமர்வு விரிவாக குறிப்பிட்டது அதாவது, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, சாலையில் இயங்கும் ஒவ்வொரு வாகனத்திற்கும் மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் கட்டாயமாக இருத்தல் அவசியம்.

இந்த காப்பீடு என்பது சம்பந்தப்பட்ட வாகனம் மற்றும் அதில் பயணிப்பவர்களுக்கானது அல்ல; வாகனம் மோதி விபத்து ஏற்பட்டால் அதில் பாதிக்கப்படும் மூன்றாம் நபர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

ஆனால், கோடிக்கணக்கான வாகனங்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்கப்படுவதால், விபத்துகளில் உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது என்றும் நீதிமன்றம் கவலை தெரிவித்தது. இதுபோன்ற நிலையை மாற்றவும், அனைத்து வாகன உரிமையாளர்களும் கட்டாயமாக மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸை புதுப்பித்து வைத்திருப்பதை உறுதி செய்யவும் பயனுள்ள அமலாக்க முறைகள் தேவை என நீதிபதிகள் வலியுறுத்தினர்.

அதேநேரத்தில், புதிய வாகனங்களுக்கான கட்டாய மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனி புதிய கார்களுக்கு 4 ஆண்டுகளும், இருசக்கர வாகனங்களுக்கு 6 ஆண்டுகளும் கட்டாய இன்சூரன்ஸ் வழங்கப்பட வேண்டும். இது தற்போது முறையே 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் என்ற நடைமுறை உள்ளது.

இருப்பினும், இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு உடனடியாக பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என்ற விதி தற்போது அமலுக்கு வரவில்லை. இது நீதிமன்றம் பரிந்துரைத்த முன்னோடி திட்டமாக ஆய்வு செய்யப்பட உள்ளது. முன்னோடி திட்டத்தில் கிடைக்கும் தரவுகள் மற்றும் நடைமுறை விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து இறுதி வடிவம் கொடுக்கப்படும். இதை நடைமுறைப்படுத்துவது குறித்து இறுதி முடிவை மத்திய அரசும் சம்பந்தப்பட்ட அமைப்புகளும் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

Article Published On: Thursday, August 6, 2026, 8:24 [IST]
English summary
No insurance no fuel supreme court pilot project third party vehicle insurance
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out