பெட்ரோல், டீசல் வண்டி வெச்சிருக்கவங்களுக்கு செக்! இன்னும் கொஞ்ச நாள்ல புது சட்டம் வரப்போகுது!
இந்தியாவில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னை அதிகமாகி கொண்டே செல்கிறது. இதற்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலமாக இயங்கும் வாகனங்கள் மிக முக்கியமான காரணமாக உள்ளன. எனவே மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ன்படி, வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUC - Pollution Under Control) பெறுவது கட்டாயம்.
பெட்ரோல் மற்றும் டீசல் மூலமாக இயங்கும் வாகனங்கள், கார்பன் மோனாக்ஸைடு போன்ற மிகவும் ஆபத்தான வாயுக்களை உமிழ்கின்றன. எனவே வாகனங்களின் மாசு உமிழ்வை கண்காணிப்பது மிக முக்கியமான ஒரு விஷயமாக உள்ளது. இதன் காரணமாகவே மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் நிறைய வாகனங்கள், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாமலேயே, சாலைகளில் இயக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய வாகனங்களால், சுற்றுச்சூழல் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்னையை சரி செய்ய, தற்போது அதிரடியான முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு இனிமேல் எரிபொருள் விற்பனை செய்யப்படாது.
மஹாராஷ்டிரா (Maharashtra) மாநில அரசுதான் இந்த அதிரடியான முடிவை எடுத்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படாது என்ற திட்டம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் அமலுக்கு வரும் என அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் (Pratap Sarnaik) கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ''சுற்றுச்சூழல் மாசடைந்து வரும் பிரச்னையை நாம் தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும். மாசுபாடு இல்லாத எதிர்காலம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், தற்போதைய தலைமுறை மீது ஒரு சில கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியம்'' என்றார். இது குறித்து மிட்-டே தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின்படி, மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு, பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் விற்பனை செய்யப்படாது. இதற்காக பெட்ரோல் பங்க்குகளில் கேமரா பொருத்தப்படும். அவை வாகனங்களின் பதிவு எண்ணை ஸ்கேன் செய்து, அந்த வாகனத்தின் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் நிலைமை சரிபார்க்கும்.
ஒருவேளை இதில் பிரச்னை கண்டறியப்பட்டால், அந்த வாகனத்திற்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது. இந்த திட்டத்தின் மூலம், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இனி வரும் காலங்களில் காற்று மாசுபாடு பிரச்னை குறையும் என அம்மாநில அரசு கருதுகிறது. எனவே இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு நடவடிக்கைதான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வாங்குவது மிகப்பெரிய விஷயம் எல்லாம் அல்ல. இதற்கு வெறும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை மட்டுமே ஆகும். அங்கீகாரம் பெற்ற எமிஷன் டெஸ்டிங் சென்டர்களுக்கு சென்றால், வாகனத்தை பரிசோதனை செய்து, 5 முதல் 10 நிமிடங்களில், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழை கையில் கொடுத்து விடுவார்கள்.
எமிஷன் டெஸ்ட்டிங் சென்டர்களில், உங்கள் வாகனத்தின் எக்ஸாஸ்ட் பைப்பின் உள்ளே, ஒரு டிவைஸை விடுவார்கள். இதன் மூலமாக மாசு உமிழ்வு கண்டறியப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும். இதற்கு 5 முதல் 10 நிமிடங்கள் வரை மட்டுமே ஆகும். அத்துடன் இதற்கு பெரிதாக செலவும் ஆகாது. வாகனத்தின் வகை (டூவீலர் அல்லது 4 வீலர்) மற்றும் எரிபொருள் வகை (பெட்ரோல் அல்லது டீசல்) ஆகிய காரணிகளை பொறுத்து, வெறும் 60 முதல் 120 ரூபாய் மட்டுமே இதற்கு கட்டணமாக வசூல் செய்வார்கள்.
எனவே வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறுவது என்பது எளிமையான மற்றும் செலவு குறைவான ஒரு செயல்முறைதான். ஆனால் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடை செய்யப்படுவது மட்டுமல்லாது, அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே அவற்றை முறையாக வாங்கி வைத்து கொள்வது நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications








