இனி போலீஸ் வண்டிய நிப்பாட்டுனா டிஜிபி போட்ட இந்த ஆர்டரை சொல்லுங்க! ஏன்டா நிறுத்தனோம்னு பயந்து போய் விட்றுவாங்க
இந்தியாவை பொறுத்தவரை வீட்டில் இருந்து வாகனத்தில் ஒரு இடத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்புவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். ஏனெனில் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்னைகளுடன் சேர்த்து, வாகன சோதனை என்ற பெயரில் காவல் துறை அதிகாரிகள் ஏற்படுத்தும் பிரச்னைகளையும் வாகன ஓட்டிகள் சமாளிக்க வேண்டியுள்ளது.
காவல் துறை அதிகாரிகள் நடத்தும் பெரும்பாலான வாகன சோதனைகளில், வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சம் பெறப்படுகிறது. இது குறித்து வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக புகார் அளித்தும் கூட, பெரிதாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து காவல் துறை அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்தி கொண்டேதான் உள்ளனர்.

ஆனால் வாகன சோதனை என்ற பெயரில், வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை நடத்தும் காவல் துறை அதிகாரிகளுக்கு தற்போது கடிவாளம் போடப்பட்டுள்ளது. இதற்கு ஒரு குழந்தையின் உயிர் பறி போயிருப்பதுதான் காரணம் ஆகும். கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில், 4 வயது பெண் குழந்தையை நாய் கடித்துள்ளது.
எனவே அந்த குழந்தையை, பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். பைக்கில் அந்த குழந்தையின் அப்பாவும், மாமாவும் இருந்தனர். ஆனால் அவசரமாக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில், வழியில் ஆவணங்களை பரிசோதிக்க வேண்டும் என கூறி, அந்த பைக்கை காவல் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அந்த சமயத்தில் பைக்கை ஓட்டி கொண்டிருந்தவர் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் குழந்தை கீழே விழ, அப்போது அவ்வழியாக வந்த லாரி, அந்த குழந்தையின் மீது ஏறியது. இதனால் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகுதான், காவல் துறை அதிகாரிகளின் வாகன தணிக்கை நடவடிக்கைகளுக்கு, தற்போது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவின்படி, இனி காவல் துறை அதிகாரிகள் தேவை இல்லாமல் எந்தவொரு வாகனத்தையும் நிறுத்தி சோதனை செய்ய கூடாது. கண்களால் பார்க்கும்படியான விதிமுறை மீறல்களில் வாகன ஓட்டிகள் ஈடுபட்டால் வேண்டுமானால், அவர்களை நிறுத்தி விசாரிக்கலாம். கூடவே சோதனை செய்யலாம்.
அப்படி இல்லை என்றால், தேவையில்லாமல் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி, சோதனை செய்ய கூடாது. இன்னும் புரியும்படி தெளிவாக சொல்வதென்றால், டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்களை சோதனை செய்வதற்காக காவல் துறை அதிகாரிகள் இனி வாகனங்களை நிறுத்த கூடாது.
கண்களால் பார்க்கும்படியான விதிமுறை மீறல்களில் வாகன ஓட்டிகள் ஈடுபட்டால் மட்டுமே அவர்களை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த உத்தரவு பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலம் முழுவதற்கும் பொருந்தும். கர்நாடக டிஜிபி (Karnataka DGP) சலீம்தான் (Saleem) இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார். அவரின் இந்த உத்தரவு, வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கர்நாடக டிஜிபி சலீமின் உத்தரவை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வரவேற்கிறது. உண்மையில் வாகன சோதனை என்ற பெயரில் பெரும்பாலான காவல் துறை அதிகாரிகள், வாகன ஓட்டிகளிடம் அத்துமீறுகின்றனர். அவசரமாக வேலைக்கு சென்று கொண்டிருப்பவர்கள், வாகன சோதனை என்ற பெயரில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.
சில சமயங்களில் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருப்பவர்கள் கூட தடுத்து நிறுத்தப்படுவது கொடுமை. அத்துடன் பெரும்பாலான காவல் துறை அதிகாரிகள், வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சம் பெறுவதில்தான் அதிக ஆர்வமாக உள்ளனர். நாங்கள் அனைத்து காவல் துறை அதிகாரிகளையும் குற்றம் சாட்டவில்லை.
ஆனால் வாகன சோதனையில் ஈடுபடும் பெரும்பாலான காவல் துறை அதிகாரிகளின் முதன்மையான நோக்கம் லஞ்சம் பெறுவதாகதான் உள்ளது. இந்த வாகன சோதனைகளால், வாகன ஓட்டிகள் தங்கள் நேரத்துடன் சேர்த்து, பணத்தையும் இழக்கின்றனர். அதற்கெல்லாம் கர்நாடக டிஜிபி சலீம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஆனால் இந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை காவல் துறை உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பெயரளவிற்கு ஒரு சில நாட்கள் மட்டும் வாகன சோதனையை தவிர்த்து விட்டு, காவல் துறையை சேர்ந்தவர்கள் மீண்டும் வசூல் வேட்டையில் இறங்கி விடுவார்கள்.


Click it and Unblock the Notifications








