டூவீலர் ஓனர்களின் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு! கொஞ்ச நேரத்துல மரண பயத்தை காட்டீட்டாங்க!
இந்தியாவில் வாகன உரிமையாளர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை டோல்கேட் கட்டணம் (Toll Fees). கார், லாரி மற்றும் பஸ் போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு, அதிகமான டோல்கேட் கட்டணம் மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. ஆனால் டூவீலர்களை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இந்த பிரச்னை இல்லை.
ஏனெனில் இந்தியாவில் டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் இருந்து, டூவீலர்களுக்கு மட்டும் விலக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே டூவீலர்களை வைத்திருப்பவர்கள், டோல்கேட் கட்டணம் செலுத்தாமலேயே தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் இன்று (ஜூன் 26) மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியானது.

இனி டூவீலர்களுக்கும் டோல்கேட் கட்டணம் வசூல் செய்யப்படவுள்ளது என்பதுதான் அந்த செய்தி. வரும் ஜூலை 15ம் தேதியில் இருந்து, டூவீலர்களும் டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டும் என அந்த செய்திகளில் கூறப்பட்டது. இதற்காக டூவீலர் உரிமையாளர்கள் ஃபாஸ்ட்டேக் (FASTag) வாங்க வேண்டும் எனவும், அதன் மூலம் டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும், தகவல்கள் வெளிவந்தன.
இது டூவீலர் உரிமையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI - National Highways Authority Of India) தற்போது விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலமாக டூவீலர்களுக்கும் டோல்கேட் கட்டணம் என்பது போலி செய்தி (Fake News) என்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், எக்ஸ் (X) தளத்தில் பதிவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் கூறப்பட்டிருப்பது பின்வருமாறு: டூவீலர்களுக்கும் டோல்கேட் கட்டணம் வசூல் செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் அப்படியான திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை என்பதை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெளிவுபடுத்தி கொள்கிறது. டூவீலர்களுக்கு டோல்கேட் கட்டணம் விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை. இவ்வாறு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இந்த விளக்கம், டூவீலர் உரிமையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்திருந்தால், டூவீலர்களை பயன்படுத்துபவர்கள் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகியிருப்பார்கள். ஏற்கனவே பெட்ரோல் விலை (Petrol Price) அதிகமாக இருப்பதால், டூவீலர் உரிமையாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது போன்ற ஒரு சூழலில், டூவீலர்களுக்கு டோல்கேட் கட்டணம் விதிக்கப்பட்டால், அதன் உரிமையாளர்கள் இன்னும் கடுமையான சிரமங்களை எதிர் கொள்ள நேரிடும். குறிப்பாக வருமானத்திற்கு டூவீலர்களை சார்ந்து இருப்பவர்களுக்கு, இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது மகிழச்சி.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வருமானம் குறைவாக உள்ள நபர்கள்தான், டூவீலர்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். எனவே டூவீலர்களுக்கு டோல்கேட் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. போலி செய்திகள் பரவிய நிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு விளக்கம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.


Click it and Unblock the Notifications








