இப்படித்தான் விமானிகள் தனது குழு உடன் மறைமுகமா பேசிப்பாங்க!! நமக்குதான் ஒன்னும் புரியாது!
நீங்கள் விமானத்தில் ஒருமுறையேனும் பயணித்து இருந்தீர்கள் என்றால், சிறிய 'ப்ளிங்' சத்தத்தில் இருந்து சற்று இரைச்சலான அலாரம் வரையில் கேட்டிருப்பீர்கள். அவற்றிற்கு என்ன அர்த்தம்? எதனால் அவை ஏற்படுகின்றன? என்பது குறித்த விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பொதுவாக விமானங்களில் சத்தங்கள் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங்கின் போது தான் அதிகளவில் ஏற்படும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த சத்தங்களுக்கு பயணிகள் யாரும் பயப்பட தேவையில்லை. இவற்றில் பெரும்பாலான சத்தங்கள் விமானி தனது குழுவுடன் பரிமாறிக் கொள்ளும் தகவல்கள் ஆகும்.

அதாவது பயணிகள் சீட்பெல்ட் அணிய வேண்டும், பயணிகளுக்கு உதவிகள்/வழிமுறைகள் தேவைப்பட உள்ளன, வானிலை மாற்றத்தால் குலுக்கல் ஏற்பட உள்ளது என்பதை காக்பிட் பகுதியில் இருக்கும் விமானிகள் இரகசியமாக தனது குழு உடன் பகிர்ந்து கொள்ள இத்தகைய சத்தங்களை பயன்படுத்துகின்றனர். இவ்வளவு ஏன், விமானம் தனது அதிகப்பட்ச உயரத்தை எட்டிவிட்டது என்பதையும் இந்த சத்தங்கள் மூலமாகவே மறைமுகமாக தனது குழுவினருக்கு தெரிவிக்கின்றனர்.

அவற்றிற்கு ஏற்ப பணிப்பெண்கள் உள்பட விமான பணிக்குழு தங்களது வழிக்காட்டுதல்களையும், ஆலோசனைகளையும் பயணிகளுக்கு வழங்குவர். சரியாக பயணிகளின் தலைக்கு மேல் இருந்து கேட்கும் இந்த 'ப்ளிங்' சத்தங்கள் எல்லா விமானங்களிலும் ஒரே மாதிரியாக, ஒரே விதமான ஒலியாக இருப்பதில்லை. ஒவ்வொரு ஏர்லைன் நிறுவனத்திற்கும் இந்த சத்தம் மாறுப்படுகிறது.

இதனால் அவ்வப்போது ஏர்லைன்களை மாற்றி மாற்றி பயணம் செய்பவர்களால் இந்த சத்தங்களுக்கான அர்த்தங்களை புரிந்துக்கொள்ள சாத்தியமில்லை. ஒருவேளை ஒரு ஏர்லைனை நீண்ட வருடங்களாக பயன்படுத்தி வருகிறீர்கள் எனில், இவற்றை புரிந்துக்கொண்டு பணிப்பெண் செல்வதற்கு முன்பே அந்த செயல்களை செய்து முடிக்கலாம்.

அதேபோல் டேக்-ஆஃப்-பிற்கு முன்பாக விமானத்திற்குள் நுழையும்போதும், தங்களது இருக்கையில் சென்று அமர்வதற்காக கேட் பகுதியில் நிற்கும்போதும் சற்று பலத்த சத்தங்கள் கேட்கும். இதற்கு அர்த்தம், விமானத்தின் கேபின் சுமக்கும் எடை அதிகரிக்கிறது என்பதாகும். மேலும் டேக்-ஆஃப் ஆகுவதற்கு முன்பாக தீடீரென காற்று நம்மை தீண்டிவிட்டு செல்லும்.

இந்த சமயத்தில் ஒரு சில ஏர்லைன் விமானங்களின் கேபினில் விளக்குகள் அணைந்து, அணைந்து கூட எரியலாம். விமானத்தின் காற்றோட்ட அமைப்பானது விமானத்திற்கு வெளியே வீசும் காற்றை உள்ளே அனுமதிப்பதால் இவ்வாறு அந்த ஒரு சமயத்தில் எதிர்பாராத காற்று கிடைக்கும். டேக்-ஆஃப் ஆன பிறகு, 'டப் டப்' என இரு விதமான சத்தங்கள் ஏற்படும்.

இதற்கான காரணம் உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இது வேறொன்றும் இல்லை, ஓடுத்தளத்தில் பயன்படுத்தப்பட்ட பிறகு விமானத்தின் சக்கரங்கள் மீண்டும் விமானத்தின் உடற்பகுதிக்குள் மடித்து வைக்கப்படும்போது ஏற்படக்கூடியவை ஆகும். அதேபோல் இதே சத்தத்தை லேண்டிங்கின்போதும் கேட்கக்கூடும்.

பயணிகள் அனைவரும் விமானத்திற்குள் ஏறி, தங்களது இருக்கைகளை அடைந்து அமர்ந்த பின் விமானத்தின் கதவுகள் மூடப்படும். அப்போது, "டோர்ஸ் டூ அரைவல்" (Doors to arrival) என எச்சரிக்கை வாக்கியங்கள் ஒலிப்பரப்பாகும். இது ஏன் என்றால், விமானத்தின் கதவுகள் மூடப்பட்ட பின் அவசரகால வெளியேறுவதற்கான ஸ்லைட் தன்னிச்சையாக பயன்பாட்டிற்கு தயாராகிவிடும்.

அதாவது, விமானத்திற்குள் ஏறியவுடனேயே ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பயணிகள் உடனடியாக வெளியேறுவதற்கு அவசரகால ஸ்லைட் தன்னிச்சையாக பயன்பாட்டிற்கு இணக்கமாக வருவதுப்போல் பாதுகாப்பிற்காக வடிவமைத்துள்ளனர். "டோர்ஸ் டூ அரைவல்" சத்தம் கேட்டத்தும் பணிப்பெண்களில் யாரேனும் ஒருவர் சென்று அவசரகால வெளியேற்றத்திற்கான ஸ்லைடை ஆஃப் செய்துவிடுவார்.

பணிப்பெண்களில் தலைமை வகிப்பவரோ அல்லது அவர்களில் ஒருவரோ "ஆல் கால்" (All call) என கூறுகிறார். இதுவும் பயணிகளுக்கான அறிவிப்பு கிடையாது. பணிப்பெண்கள் ஒவ்வொருவரும் தங்களது பாதுகாப்பு பரிசோதனைகளை முடித்துவிட்டோம் என்பதை விமானிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்கான அழைப்பு தான் 'ஆல் கால்" ஆகும்.

லேண்டிங்கின்போது விமானத்தின் பின்பக்க ஸ்பாய்லர்கள் மற்றும் இறக்கைகளில் நீண்ட போர்ட்கள் ஆக்டிவேட் செய்யப்படும். அந்த சமயத்தில் சத்தத்துடன் கூடிய அதிர்வுகளை உணர்வீர்கள். அதேநேரம், விமானம் லேண்டிங்கின் போது தரையை தொட்டவுடன் வேகத்தை குறைக்க, என்ஜினில் இருந்து கிடைக்கும் இயக்க ஆற்றல் நிறுத்தப்படும். இதனால் என்ஜின் பகுதியில் இருந்து பலத்த சத்தம் வெளிவரும்.


Click it and Unblock the Notifications








