அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. போக்குவரத்து விதிமீறல்களை, வெறும் போக்குவரத்து விதிமீறல்கள் என்று அந்த இரண்டு வார்த்தைகளோடு மட்டுமே அடக்கிவிட முடியாது. ஏனெனில், நாட்டில் அரங்கேறிய மாபெரும் விபத்துகள் பலவற்றிற்கு பின்னால் இருப்பது இந்த போக்குவரத்து விதிமீறல்களே ஆகும்.
இதனால்தான் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக காவல்துறை மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இருப்பினும், விதிமீறல் வாதிகளின் கொட்டம் அடங்கியதாக தெரியவில்லை. குறிப்பாக, குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவோரின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ட்ரிங்க் அண்ட் டிரைவ் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக ஓர் குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை பாராபட்சம் இன்றி நடவடிக்கை எடுத்திருப்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளன.

Source: odishatv குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையின்கீழ் ஏழு விலை உயர்ந்த ஆடம்பர கார்களை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். இந்த ஆச்சரியமான சம்பவம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலேயே அரங்கேறி இருக்கின்றது. பொதுவாக விலை உயர்ந்த கார்களில் வந்தால் காவல்துறை எதுவும் செய்யாது என்கிற பார்வையில் ஒரு சிலர் இருக்கின்றனர்.
மேலும், துணிச்சலாக அந்த மிக மோசமான போக்குவரத்து விதிமீறலையும் அவர்கள் செய்து வருகின்றனர். அதேவேளையில், ஆடம்பர கார்களைக் கொண்டிருப்பவர்கள் சமூகத்தில் மிகப் பெரிய செல்வாக்குக் கொண்டவர்களாக இருப்பதால் சில நேரங்களில் காவல்துறையும் அவர்கள்மீது பெரிய அளவில் நடப்பதில்லை. ஆனால், ஒடிசா மாநிலத்தில் அரங்கேறி இருக்கும் இந்த சம்பவத்தில் எந்த வித சலுகையும் அந்த சொகுசு காரில் வந்தவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இது காவல்துறை எடுத்திருக்கும் நடவடிக்கை வாயிலாகவே தெளிவாக தெரிகின்றது. ஆடம்பர கார்களில் வந்தவர்கள் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இது தெரிந்த அடுத்த நொடியே அனைத்து கார்களும் ஓரங்கட்டப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் ஒவ்வொரு கார் மாடலின் மதிப்பும் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
போர்ஷே, ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ரேஞ்ஜ் ரோவர் என ஒட்டுமொத்தமாக 7 ஆடம்பர கார்களை ஒடிசா காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர். இந்த நடவடிக்கைக்கு பின்னால் அந்த காரில் வந்தவர்கள் மது அருந்தியது மட்டுமே காரணமில்லை. அந்த கார்களில் குஜராத் அரசாங்கம் என எழுதப்பட்டு இருந்தது.
பொதுவாக இதுபோன்று அரசின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களே தங்கள் கார்களில் எழுதிக் கொள்வார்கள். வாகன தணிக்கை மற்றும் வாகன தணிக்கையின்போது சிறப்பு சலுகையைப் பெறும் நோக்கில் இவ்வாறு எழுதிக் கொள்வார்கள். இவ்வாறு எழுதப்பட்டு இருந்தபோதிலும், வாகனங்களை மடக்கி அதில் இருப்பவர்கள் விதிமீறலில் ஈடுபட்டதைக் கண்டறிந்திருக்கின்றனர்.
இதுபோன்று பொருப்புகளை வாகனங்களில் அடையாளப்படுத்தும் வகையில் ஒட்டக் கூடாது என விதிகள் இருக்கின்றன. இருப்பினும் ஒரு சிலர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனற். அதுதவிர, அரசின் எந்தவொரு உயர் பொருப்பில் இல்லாதவர்களும் மோசடி செய்வதற்காக உயர் பொருப்பில் இருப்பதைப் போன்ற வாசகங்களை தங்களின் வாகனங்களில் ஒட்டிக் கொள்கின்றனர்.
இந்த மாதிரியான சூழலிலேயே அனைத்து சொகுசு கார்களின் மீதும் அதிகபட்ச நடவடிக்கையாக அவற்றை பறிமுதல் செய்திருக்கின்றது காவல்துறை. ஒடிசா மாநிலத்தில் ட்ரிங்க் அண்ட் டிரைவிங்கிற்கு வாகனம் பறிமுதல் மற்றும் டிரைவரை கோர்டில் சமர்பிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. முதல் முறையாக டிரைவர் ட்ரிங்க் அண்ட் டிரைவில் சிக்கும்போது இந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
அதுவே, இரண்டாவது முறையாக அவர் மீண்டும் சிக்கினால் வாகனம் பறிமுதல், ஓட்டுநர் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதுவே மூன்றாவது முறையும் சிக்கினால் ஓட்டுநர் உரிமத்துடன் சேர்த்து அந்த வாகனத்தின் பதிவும் ரத்து செய்யப்படும். இதுமாதிரியான உச்சகட்ட நடவடிக்கையே குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது ஒடிசா காவல்துறை மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒடிசாவில் மட்டுமில்லைங்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இதுமாதிரியான நடவடிக்கையே குடித்து வாகனத்தை இயக்குவோர் மீது காவல்துறை எடுத்து வருகின்றது. எனவே இந்த தவறை செய்யாமல் இருப்பதே சிறந்தது. அதேவேளையில், நாட்டின் அனைத்து மூலைகளிலும் சொகுசு கார்களில் வருவோர் மற்றும் அரசியல்வாதிகள் மீது இதுமாதிரியான அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. எனவேதான் ஒடிசாவில் அரங்கேறியிருக்கும் இதுமாதிரியான சம்பவங்கள் மிகப் பெரிய அளவில் சமூகத்தில் வைரலாகிறது.


Click it and Unblock the Notifications








