பெட்ரோல், டீசல் விலை உயர்வை வைத்து இனி கலாய்க்க முடியாது!! விலை குறையுது... மத்திய அரசு மூலமா கிடைத்த தகவல்!
பெட்ரோல், டீசல் விலைகள் விண்ணை தொட்டுவரும் நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் & டீசல் விலைகளை குறைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
பெட்ரோல், டீசல் எரிபொருள்கள் நாம் தினந்தோறும் பயன்படுத்தக்கூடியவை. மத்திய அரசு பெட்ரோல், டீசல் எரிபொருள்களுக்கான மூலப்பொருட்களை மற்ற நாடுகளில் இருந்து வாங்குவதற்கு கோடி கணக்கிலான ரூபாய்களை செலவிட்டு வருகிறது. இதனை தடுத்து, நாட்டின் செலவீனங்களை குறைக்கும் முயற்சியாகவே எலக்ட்ரிக் வாகனங்களை மத்திய அரசு மிகவும் ஆதரிக்கிறது என்பது ஒருபக்கம்.

மறுப்பக்கம், சுருக்கமாக ஒ.எம்.சி (Oil Marketing Companies) எனப்படும் எண்ணெய் விற்பனை நிலையங்கள் பெட்ரோல் & டீசலின் விலையை குறைக்க திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மத்திய அரசு மூலமாக நமக்கு கிடைத்துள்ள இந்த செய்திகளில், கொரோனா வைரஸ் பரவலினால் அடைந்திருந்த நஷ்டங்களில் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் மெல்ல மெல்ல மீண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, பெட்ரோல் & டீசலின் விலைகள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் & டீசலின் விலைகள் கொரோனா காலத்திற்கு பின் புதிய உச்சத்தை தொட ஆரம்பித்தன. குறிப்பாக, கடந்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் இவற்றின் விலைகளை மெல்ல மெல்ல லிட்டருக்கு ரூ.100க்கு மேல் மத்திய அரசு கொண்டுவந்தது மிகுந்த விவாதத்திற்கு உரிய விஷயமாகியது. இணையத்தில் மீம்ஸ்களும் இதுகுறித்து பறந்தன.
இருப்பினும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைக்காததால், மத்திய அரசாலும் குறைக்க முடியவில்லை. இருப்பினும், கடந்த 1 வருடத்திற்கும் மேலாக பெட்ரோல் & டீசல் விலைகளில் பெரியதாக எந்த உயர்வும் இல்லை. அதேநேரம் குறைப்பும் இல்லை. இந்த 1 வருடத்திற்கும் மேலான காலத்தில், அடைந்த நஷ்டங்களை எண்ணெய் நிறுவனங்கள் நன்கு குறைத்திருக்கும். இதன் விளைவாகவே, விரைவில் பெட்ரோல் & டீசல் விலைகள் குறைப்பு என்கிற சந்தோஷமான செய்தியை கேட்க போகிறோம்.

அதுமட்டுமின்றி, இந்த அறிவிப்பு பெட்ரோல் & டீசல் வாகனங்களின் விற்பனையையும் அதிகரிக்கும். ஏனெனில் பெட்ரோல் & டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டதால், பலர் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்துள்ளனர். ஒ.எம்.சி -இல் பல்வேறு எண்ணெய் நிறுவனங்கள் அங்கமாக உள்ளன. சில இந்தியாவில் செயல்படுபவை. பல வெளிநாடுகளில் செயல்படுபவை. இவ்வாறு பெட்ரோல் & டீசல்களை உற்பத்தி செய்து வழங்கிவந்த நிறுவனங்களுள் ஒன்று சமீபத்தில் செயல்பாடுகளை நிறுத்தி கொண்டுள்ளது.
இருப்பினும் இது பெரியதாக பாதிப்பாக இருக்காது என்றே கூறப்படுகிறது. ஏனெனில் அதற்கு பதிலாக பெட்ரோல் & டீசல்களை தயாரித்து வழங்க ஏகப்பட்ட வளரும் சந்தை நாடுகள் உள்ளன. இருப்பினும், முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பணிகளை குறைத்து கொள்ள திட்டமிட்டு வருவதை கூறியே ஆக வேண்டும். குறிப்பாக, உலகளவில் எண்ணெய் ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் சவுதி அரேபியா வருகிற ஜூலை மாதத்தில் இருந்து உற்பத்தி பணிகளை குறைத்து கொள்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: என்ன தான் பெட்ரோல் & டீசல் எரிபொருள்களை உருவாக்க பல்வேறு நாடுகளில் பல்வேறு நிறுவனங்கள் தயாராக இருந்தாலும், பூமியில் இருந்து கிடைக்கும் க்ரூட் ஆயிலின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதையெல்லாம் வைத்து பார்த்தால் உலகின் எதிர்கால போக்குவரத்து எலக்ட்ரிக்கை நம்பியே இருக்கும் என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








