பைக் டாக்ஸியில் கெட்ட சமாச்சாரங்கள் நடக்குது... இந்த நகரத்தில் மட்டும் பைக் டாக்ஸி கிடைக்காது - உச்சநீதிமன்றம்
பைக் டாக்ஸிகளுக்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், டெல்லியில் ஓலா, ராபிடோ மற்றும் உபேர் பைக் டாக்ஸிகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. எதனால் இந்த அதிரடி நடவடிக்கை? என்ற கேள்விக்கு பதில்களாக இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
உலகம் வேகமாக மாற்றம் கண்டு வருகிறது. அதேபோன்று பொதுமக்களின் அன்றாட போக்குவரத்தும் மாற்றமடைந்து வருகிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், நாளுக்கு நாள் சாலையில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை சமாளிக்க பைக், கார் டாக்ஸி சேவைகளை அதிகரிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

ஆனால் இவ்வாறான டாக்ஸி சேவைகளில் சில பல அசம்பாவிதங்களும் ஏற்படுகின்றன. அதாவது, நள்ளிரவில் பைக் டாக்ஸியை புக் செய்த பெண்ணுக்கு நடந்த கொடுமை, பைக் டாக்ஸி நபர் போல் நடித்து செல்போன் திருட்டு போன்ற தலைப்புகளில் பல்வேறு செய்திகளை படித்து இருப்பீர்கள். கார் டாக்ஸி சேவைகள் கடந்த பல வருடங்களாக உள்ளன. கார் டாக்ஸி சேவையில் இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் நடப்பது இல்லை.
அவ்வாறான செயல்களில் ஈடுப்படுவோரிடம் கார் போன்ற பணமிகுந்த பொருளை யாரும் நம்பிக்கையாக கொடுக்க மாட்டார்கள். அதுமட்டுமின்றி, கார் டாக்ஸி ஓட்டுனராக பணியமர்த்தப் படுபவரிடம் இருந்து ஏகப்பட்ட அடையாள குறிப்புகள் வாங்கப்படுவது வழக்கம். சமீப காலத்தில் பிரபலமாகியுள்ள பைக் டாக்ஸி ஓட்டுனர்களிடம் இருந்தும் சுய விபரங்களும், ஆவணங்களும் வாங்கப்படுகின்றன என்றாலும் அசம்பாவிதங்களை தடுக்க முடியவில்லை.

இதன் காரணமாகவே பைக் டாக்ஸி சேவைகளை தடை செய்ய வேண்டும் என்கிற கண்டனங்கள் நாட்டில் பலத்தரப்பினர் இடையே இருந்து வருகிறது. சமீபத்தில் கூட, தமிழ்நாட்டில் ஆட்டோ டிரைவர்கள் போராட்டம் நடத்தியது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். தலைநகர் டெல்லியில் பைக் டாக்ஸிக்கான எதிர்ப்பு கடந்த பல வருடங்களாகவே எழுந்து வருகிறது. டெல்லியில் பைக் டாக்ஸி சேவைகள் எப்போதோ அறிமுகமாகிவிட்டன.
இந்த விஷயத்தில் கடைசியாக, டெல்லி உயர்நீதிமன்றம் பைக் டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி அளித்து இருந்த நிலையில், உச்சநீதிமன்றம் ஓலா, உபேர் மற்றும் ராபிடோ போன்ற பைக் டாக்ஸி சேவைகளுக்கு அதிரடியாக தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தடை உத்தரவுக்கு முக்கிய காரணம், பிரைவேட் பயன்பாட்டிற்காக வாங்கிய பைக்கையோ அல்லது ஸ்கூட்டரையோ பைக் டாக்ஸி சேவைக்கு பயன்படுத்தக்கூடாது என்பதாகும்.

பைக் டாக்ஸியில் பயன்படுத்த வேண்டுமெனில், கமர்ஷியல் வாகனங்களுக்கான மஞ்சள் நிற நம்பர் பிளேட்டை பொருத்தி 2-வீலர்களை பைக் டாக்ஸியில் பயன்படுத்தலாம் என்பது போலீஸாரின் கருத்தாக உள்ளது. பொது போக்குவரத்துக்கு அல்லாத வாகனங்களை டாக்ஸி சேவையில் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் வரையில் டெல்லியில் பைக் டாக்ஸி சேவைகள் தடை செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பைக் டாக்ஸி சேவைகள் தேவையா? என எங்களை கேட்டால், தினந்தோறும் அலுவலகத்திற்கு ஆட்டோ மற்றும் காரில் பயணிக்க முடியாத குடிமக்கள் இருக்கும் இந்தியா போன்ற நாட்டில் பைக் டாக்ஸி அவசியமாகும். மத்திய அரசு ஒப்புக்கொண்டால் பைக் டாக்ஸி சேவைகளை மீண்டும் டெல்லியில் அனுமதிக்கலாம் என்பதுபோல் உயர்நீதிமன்றம் தனது உத்தரவை கூறியுள்ளதால், பைக் டாக்ஸி விஷயத்தில் என்ன நடக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









