ஓலா, ஊபருக்கு அரசு புதிய உத்தரவு... விரைவில் அமலுக்கு வரவிருக்கும் புதிய திட்டம்...!
ஓலா, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கென தனி உத்தரவை அரசை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகன பயன்பாட்டிற்கு மக்களை மாற்ற இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மின் வாகனங்கள், சுற்றுப்புற சூழலுக்கு எந்தவித பாதிப்பும் அளிக்காமல், நண்பனாக செயல்படும் என்ற காரணத்தால் மத்திய அரசு இதனைக் கையாண்டு வருகின்றது.

அந்தவகையில், சாலை போக்குவரத்தால் ஏற்படும் மாசுபடுதலைக் கட்டுபடுத்தும் விதமாக, வருகின்ற 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், இரு சக்கர வாகனங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க இருப்பதான தகவல்கள் வெளியாகின. மேலும், ஐசி திறன்கொண்ட அனைத்து இரு சக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கும் தடை விதிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், மேலுமொரு அதிரடி முயற்சியாக, எரிபொருளால் இயங்கும் டாக்ஸி மற்றும் வர்த்தக ரீதியிலான வாகனங்களை குறைந்தது 40 சதவீதம் அளவிற்கு, வருகின்ற 2026ம் ஆண்டிற்குள் மின் வாகனங்களாக மாற்றுவதற்கான முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து செய்தியை ராய்டர்ஸ் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

அண்மையில், தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடைபெற்றிருப்பதாக கூறப்பட்டுகிறது. இதில், நிதி ஆயோக் மற்றும் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துக் கொண்டுள்ளனர். இவர்கள் நாட்டில் மின் வாகன பயன்பாட்டினை அதிகரிப்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த ஆலோசனையில், நாட்டில் இயங்கும் கால் டாக்ஸி மற்றும் வர்த்தக ரீதியிலான வாகனங்களின் பயன்பாட்டில் 40 சதவீதம் வரை மின் வாகன பயன்பாட்டை திணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், முக்கியமாக நாட்டில் முதன்மை கால் டாக்ஸி சேவை நிறுவனங்களாக செயல்பட்டு வரும் ஓலா மற்றும் ஊபர் ஆகிய நிறுவனங்கள் இந்த புதிய விதியை விரைிவில் சந்திக்க இருக்கின்றன.

இந்த நிறுவனத்தின் கீழ்தான் அதிகளவிலான வாடகை வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது நாம் அறிந்ததே. ஆகையால், இந்த நிறுவனங்களிடம் இருந்தே, ஆரம்ப புள்ளி வைக்கும் விதமாக, வருகின்ற 2025ம் ஆண்டிற்குள், நிறுவனத்தின்கீழ் இயங்கும் வாகனங்களை 40 சதவீத அளவிற்கு மின் மயமாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, மற்ற நிறுவனங்களும், தங்களின் வாகனங்களை மின் வாகனங்களாக மாற்றவும் இக்குழு மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓலா மற்றும் ஊபர் ஆகிய நிறுவனங்களின் மூலம் இயங்கம் வாகனங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 100 கிலோ மீட்டருக்கும் மேலாக இயக்கப்படுகின்றன. அதேசமயம், லட்சக் கணக்கான வாகனங்கள் இந்தியச் சாலைகளில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், இந்த புதிய முயற்சி கணிசமான அளவில் சுற்றுச்சூழல் மாசை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலும், எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையே, காற்றை மாசுபடுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கின்றது. இந்த புகை அதிகம் நச்சுத் தன்மை வாய்ந்ததாக இருக்கின்றன. ஆகையால், இதனை சுவாசிப்பதன் காரணமாக ஆஸ்துமா, நுரையீரல் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் மனிதர்களை தாக்கும் அபாயம் ஏற்படுகின்றது.

இத்தகைய சூழ்நிலையைக் கட்டுபடுத்தும் விதமாகவே, எரிபொருள் வாகனங்களுக்கு எதிராக அரசு பல்வேறு கடும் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அதனடிப்படையிலேயே, நாட்டில் இயங்கும் வர்த்தக ரீதியிலான வாகனங்களை மின் மயமாக்ககும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications