மாநில பட்ஜெட் போட்டாச்சு... பழைய வாகனங்களை எல்லாம் கடைசியா ஒருமுறை பார்த்துக்கோங்க!
பழைய மாடல் கார்களை இப்போதெல்லாம் ஒன்று பழைய இரும்பு கடையில் பார்க்க முடிகிறது அல்லது அரசாங்க வாகனங்களாக பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு, அரசாங்க வாகனங்கள் அரசாங்கத்தின் செலவீனங்களை குறைக்கும் பொருட்டு, மிகவும் பழையவைகளாக பயன்படுத்தப்படுகின்றன. இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சில பகுதிகளில் பெரிய, பெரிய பதவிகளை வகிக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கு கூட பழைய வாகனங்களை அரசாங்க அலுவலக வாகனங்களாக கொடுத்துள்ளனர். இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக கேரள அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் வாசிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்தந்த மாநில அரசாங்கங்கள் தங்களது பட்ஜெட்டை வெளியிட ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் கேரள சட்டச்சபையில் 2025-26 மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரள நிதியமைச்சர் கே என் பாலகோபால் பட்ஜெட்டை வாசித்தார்.

கேரள மாநிலம் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்க போராடி வருவதாக தெரிவித்த கேரள நிதியமைச்சர், தான் வகுத்த பட்ஜெட்டில் ரூ.750 கோடியில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை இணைத்திருப்பது கவனத்தை பெற்றுள்ளது. இதனுடன் சேர்த்து, இன்னும் பல அசத்தலான திட்டங்கள் கேரள பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில், நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் பழைய அரசாங்க வாகனங்களை மாற்றுவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பயோ-எத்தனால் (Bio-Ethanol) உற்பத்தியை குறைந்த செலவில் மேற்கொள்வதற்கான முறைகளை ஆராய்வதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.100 கோடியில் அரசாங்க பயன்பாட்டிற்காக புதிய வாகனங்கள் வாங்கப்படுவதுடன், கொஞ்சம் பழைய வாகனங்களும் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. அரசாங்க பயன்பாட்டிற்கு என்று மட்டுமின்றி, எந்தவொரு பயன்பாட்டிற்கும் பழைய வாகனங்களை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு ஏற்றது அல்ல. குறிப்பாக, பழைய டீசல் வாகனங்கள் அதிக காற்று மாசுவை ஏற்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.
புதிய வாகனங்களில் பல்வேறு மாசு கட்டுப்பாடு விதிமுறைகள் பின்பற்றப்படுவதால், கார்பன் மாசு வாகனங்களில் இருந்து உமிழப்படுவது கடந்த காலங்களில் இருந்து வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால்தான், மத்திய அரசு வாகன ஸ்க்ராப்பிங் கொள்கையில் தீவிரமாக உள்ளது. அதாவது, குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பயன்படுத்தப்படும் வாகனங்களை முறையாக அழித்து, அதன்மூலம் புதிய வாகனங்களை கணிசமான தள்ளுபடிகள் உடன் வாங்கலாம் என்பதுதான் வாகன ஸ்க்ராப்பிங் திட்டத்தின் அம்சம் ஆகும்.

மறுப்பக்கம், பயோ எத்தனால் ஆனது பெட்ரோலுக்கு மாற்றாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எரிபொருள் ஆகும். டீசலை காட்டிலும் பெட்ரோல் ஆனது குறைந்த காற்று மாசுவை ஏற்படுத்தக்கூடியது ஆகும். பயோ எத்தனால் ஆனது பெட்ரோலை காட்டிலும் குறைந்த காற்று மாசுவை ஏற்படுத்தியதாக விளங்குகிறது. பயோ-எத்தனாலின் ஒரே குறை என்னவென்றால், அதன் தற்போதைய அதிகப்படியான விலை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பயோ எத்தனாலின் விலையை குறைக்க வேண்டுமெனில், அதனை உருவாக்க ஆகும் செலவை குறைக்க வேண்டும். அதற்காக தான் கேரள மாநில பட்ஜெட்டில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. அதேபோல், பழைய அரசாங்க வாகனங்கள் ஓரங்கட்டப்பட உள்ளதால், விரைவில் அனைத்து விதமான கேரள அரசாங்க வாகனங்களையும் புதியதாக எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









