இந்த வயதில் இப்படியொரு திறமையா!! ரெண்டே மிதிதான்... டீசல் பைக்கை ஸ்டார்ட் செய்றது கஷ்டமாச்சே!
டீசலில் இயங்கும் ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை முதியவர் ஒருவர் மிக எளிமையாக ஸ்டார்ட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவினையும், தற்சமயம் விற்பனையில் இல்லாத டீசல் புல்லட் பைக்கை பற்றியும் இனி தொடர்ந்து பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு, இந்தியாவில் மட்டுமில்லை உலகளவில் பிரபலமான & பழமையான மோட்டார்சைக்கிள் நிறுவனம். கடந்த காலங்களில் இருந்து தற்போதுவரையில் ராயல் என்பீல்டு பிராண்டில் இருந்து பல்வேறு விதமான மோட்டார்சைக்கிள்கள் வெளிவந்துள்ளன. பொதுவாகவே, பைக் தயாரிப்பில் ராயல் என்பீல்டு புதிய புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் பெயர் பெற்றது என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.

இதன் வெளிப்பாடாக, பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்ததுதான் புல்லட் டீசல் பைக். ராயல் என்பீல்டு புல்லட் பைக்குகளுக்கு மிக நீண்ட கால வரலாறு உள்ளது. தற்சமயம் கூட புல்லட் 350 மோட்டார்சைக்கிள் விற்பனையில் உள்ளது. டீசலில் இயங்கும் புல்லட் பைக்கின் விற்பனை 2000இல் நிறுத்திக்கொள்ளப்பட்டது. இருப்பினும் இப்போதும் புல்லட் டீசல் பைக்குகளை இந்தியாவில் சில பகுதிகளில் காண முடியும்.

நம் நாட்டில் அதிகளவில் தயாரிக்கப்பட்ட டீசல் மோட்டார்சைக்கிளாக புல்லட் டீசல் -ஐ சொல்லலாம். புல்லட் டீசல் பைக் டீசலில் இயங்கும் மிகவும் அரிதான மோட்டார்சைக்கிளாக பார்க்கப்பட்டாலும், இந்த பைக்குகளை ஸ்டார்ட் செய்வது சற்று கடினமான விஷயமாக இருந்தது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், புல்லட் டீசல் பைக்குகள் அதிகளவில் வாடிக்கையாளர்களை சென்று அடையாததற்கும் இதை காரணமாக சொல்லலாம்.

ஆனால் இங்கு ஒரு பெரியவர் புல்லட் டீசல் பைக்கை மிக எளிதாக ஸ்டார்ட் செய்து அசத்தியுள்ளார். இதுதொடர்பாக ராயல் என்பீல்டு ஹோலிக் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம். தற்போதைய மாடர்ன் ராயல் என்பீல்டு பைக்குகளை எலக்ட்ரிக் வாயிலாக ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் மிக எளிமையாக ஸ்டார்ட் செய்ய முடியும்.
ஆனால் இந்த வீடியோவில், ஸ்டார்ட் பொத்தான் எதுவும் இல்லாததால், கிக் ஸ்டார்ட் மூலம் பைக்கை அந்த பெரியவர் ஸ்டார்ட் செய்வதை காணலாம். ஏனெனில் இந்த புல்லட் டீசல் பைக் ஆனது 1992இல் தயாரிக்கப்பட்டது ஆகும். புல்லட் டீசல் பைக்கை ஸ்டார்ட் செய்வது சற்று சிரமம் என ஏற்கனவே கூறினோம் அல்லவா. இந்த பெரியவரும் பல மிதிகளுக்கு பிறகே பைக்கை ஸ்டார்ட் செய்துள்ளார்.

முதலில் இருமுறை மிதித்த பின்பும் பைக் ஸ்டார்ட் ஆகாததால், உடனே குனிந்து பெட்ரோல் டேங்க் சோக் ஆன் செய்யப்பட்டு உள்ளதா என்பதை ஒருமுறை சரிபார்த்து கொண்டு மீண்டும் மிதிக்க, அடுத்த 2 மிதிகளில் பைக் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. பெட்ரோல் பைக்குகளில் இருந்து வித்தியாசப்படும் வகையில், டீசல் பைக்குகளின் என்ஜின்கள் சற்று மாறுப்பட்ட சத்தத்தை வெளியிடவல்லன.

அந்த தனித்துவமான டீசல் என்ஜின் சத்தத்தை மேலுள்ள வீடியோவிலும் கேட்கலாம். தோற்றத்தை பொறுத்தவரையில், இந்த புல்லட் டீசல் பைக் வாங்கப்பட்ட பிறகு கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அதாவது, வீடியோவில் பைக் கொண்டிருக்கும் பெயிண்ட் ஆனது ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கியது கிடையாது. புல்லட் டீசல் பைக்கின் மிக முக்கியமான ஸ்பெஷல் அம்சம் என்னவென்றால், அதன் மைலேஜ் தான்.

சுமார் 86kmpl. தற்சமயம் விற்பனையில் உள்ள எந்தவொரு மோட்டார்சைக்கிளும், ஸ்கூட்டரும் கூட இந்த அளவிற்கு மைலேஜை வழங்காது. புல்லட் டீசல் பைக்கில் 325சிசி க்ரீவ்ஸ்-லம்போர்டினி இன்-டைரக்ட் இன்ஜெக்ஷன், சிங்கிள்-சிலிண்டர் டீசல் என்ஜினை ராயல் என்பீல்டு நிறுவனம் பொருத்தியது. வீடியோவில் பார்க்கும் புல்லட் டீசல் பைக்கிலும் இந்த என்ஜின் தான் உள்ளது.

இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 6.5 பிஎச்பி மற்றும் 15 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது. மற்றப்படி எடையில் பெரியதாக எந்த மாற்றமும் இருந்ததில்லை. மற்ற ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு இணையாக புல்லட் டீசல் பைக்கின் எடையும் 196 கிலோ ஆகும். விற்பனையில் இருந்த சமயத்தில், ராயல் என்பீல்டு புல்லட் டீசல் பைக் ஆனது கிராம புறங்களிலேயே பெரும்பான்மையாக விற்பனை செய்யப்பட்டது.

நகர்புற மக்கள் பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு காரணம், இதன் அதிகப்பட்ச வேகம். புல்லட் டீசல் பைக்கின் டாப்-ஸ்பீடு 65kmph ஆகும். டாருஸ் என அழைக்கப்படும் புல்லட் டீசல் பைக்குகள் இப்போதும் பஞ்சாப்பில் டிராக்டர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றால் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் எந்த அளவில் உண்மை உள்ளது என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications