26 வருஷத்துக்கு முன் பைக்கை விற்ற போது இதை நெனைச்சி பார்த்திருப்பாரா!! தந்தையின் பிறந்த நாளில் நடந்த சர்பிரைஸ்
வாழ்வில் எத்தனை பைக்குகளை வாங்கினாலும் சரி, இளமை பருவத்தில் அதிகமாக பயன்படுத்தும் பைக் தான் எப்போதுமே நமது நினைவில் இருக்கும். அந்த பைக் முற்றிலும் ஓடாத கண்டிஷனில் இருந்தால் கூட, அதை விற்க மனம் வராது. வீட்டின் ஓரத்தில் எங்கேயாவது போட்டு வைத்திருப்போம். சிலர் பொருளாதார நெருக்கடியால் அந்த பைக்கை விற்று விடுகின்றனர். அவ்வாறு, இளமை பருவத்தில் பயன்படுத்திய ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்கை கேரளாவில் ஒருவர் விற்றுள்ளார். இப்போது அல்ல... 26 வருடங்களுக்கு முன்பே விற்றுள்ளார்.
இளமை பருவத்தின்போது, சில காரணங்களினால் பைக்கை விற்றுள்ளார். விற்றவருக்கு 60 வயது ஆகிறது. 60ஆம் பிறந்தநாளை சமீபத்தில்தான் கொண்டாடினார். இந்த 26 வருடத்தில் பைக் பலரது கைகளுக்கு மாறி இருக்கும். இருப்பினும், இந்த நபரது மகன் பைக்கை எப்படியோ தேடி கண்டுப்பிடித்து தந்தைக்கு பரிசாக வழங்கி உள்ளார்.

தந்தையின் 60வது பிறந்தநாளுக்கு மகனின் பரிசு, தந்தை இளமை பருவத்தில் பயன்படுத்திய அவரது ராயல் என்ஃபீல்டு புல்லட் (Bullet) பைக்கை மீட்டு தருவதாகும். இந்த தந்தையை பற்றிய போதிய விபரங்கள் இல்லை; ஆனால் இந்த அசாத்தியமான செயலை செய்துள்ள இந்த மகனின் பெயர் அகில் கிருஷ்ணா ஆகும். இளமை பருவம் என சொன்னாலும் இந்த தந்தை தனது திருமணம் முடிந்து, குழந்தை பிறந்த பின்பும் கூட இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை வைத்திருந்துள்ளார்.
அதாவது, தற்போது 26 வருடங்களுக்கு பிறகு பைக்கை மீட்டு கொடுத்த மகன் பிறந்த பிறகும் கூட இந்த நபர் இந்த பைக்கை பயன்படுத்தி வந்துள்ளார். அகில் கிருஷ்ணா கைக்குழந்தையாக இருந்த போது பைக்குடன் இந்த நபர் எடுத்துக் கொண்ட படத்தை வைத்துதான் அவரது மகன் பைக்கை அடையாளம் கண்டு, தேடி கண்டுப்பிடித்து வாங்கியுள்ளார்.

26 வருடங்களுக்கு முன் விற்ற பைக்கை நேரில் கண்டதும் இந்த தந்தைக்கு ஆனந்த கண்ணீர் வழிந்தோடியுள்ளது. அந்த அளவிற்கு, பிறந்த நாளின்போது சிறப்பான தருணத்தில் பைக்கை சர்பிரைசாக வழங்கியுள்ளார். கணவர் அழுவதை கண்டதும், அகில் கிருஷ்ணாவின் அம்மா ஒரு பக்கம் அழ, அந்த இடமே ஆனந்த கண்ணீரால் வழிந்தோடியது. பைக்கை மீண்டும் கண்டவுடன் தந்தையால் முற்றிலுமாக நம்பவே முடியவில்லை.
ஏனெனில், அந்த அளவிற்கு பைக்கில் நுணுக்கமான வேலைகளை மகன் செய்துள்ளார். ராயல் என்ஃபீல்டு பைக்காக இருப்பினும், 26 வருடங்களுக்கு பிறகும் பைக் அப்படியே இருக்க வாய்ப்பில்லை. சுமார் 2 வருட தேடலுக்கு பிறகு, கேரளாவின் திரூர் என்கிற பகுதியில் தந்தையின் 26 வருட பழைய புல்லட் பைக் மெக்கானிக் ஷாப் ஒன்றில் இருப்பதை அகில் கிருஷ்ணா கண்டுப்பிடித்துள்ளார்.
ஆனால், 26 வருடங்களில் பைக் முழுவதுமாக அடையாளம் மாறி போய் இருந்தது. பழைய புல்லட் பைக்குகளில் இருக்கக்கூடிய க்ரோம்கள் எதுவும் இல்லை. கடந்த 26 வருடங்களில் அடுத்தடுத்து பயன்படுத்தியவர்கள் க்ரோம்களை நீக்கிவிட்டு, முழுவதுமாக கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்திருந்தனர். ஆனால், அகில் கிருஷ்ணா தனது தந்தைக்கு பழைய தோற்றத்தில் அவரது புல்லட் பைக்கை வழங்க விரும்பியுள்ளார்.
இதனால், கடந்த காலங்களில் இருந்த தோற்றத்திற்கு புல்லட் பைக்கை மாற்றியுள்ளார். இதற்கு அகில் கிருஷ்ணாவுக்கு சில வாரங்கள் வரையில் ஆகியுள்ளது. அதற்கேற்ப பைக்கின் தோற்றம் சூப்பராக உள்ளதை கூறியே ஆக வேண்டும். இதுகுறித்து அகில் கிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த கஸ்டமைஸ் (Customise) செய்யப்பட்ட புல்லட் பைக்கை காணலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்குகளுள் இது எந்த வருடத்தில் உருவாக்கப்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை. தோற்றத்தை வைத்து பார்க்கும்போது, இது குறைந்தது 30- 40 வருடங்கள் பழையதாக இருக்கலாம். இத்தகைய புல்லட் பைக்குகளை இப்போது காண்பதே அரிது எனும்போது, 26 வருடங்களுக்கு முன் விற்கப்பட்ட பைக்கை இப்போது கண்டறிந்து வாங்குவது அதனினும் கடினம் ஆகும்.


Click it and Unblock the Notifications








